Vethathiri Maharishi's Realization moved to 21 years backward, Is it Correct?
இருபத்தொன்று ஆண்டுகள் பின்னோக்கிய வேதாத்திரி மகரிஷியின் உண்மை உணர்தல்! சரிதானா?
ஒரு சாராசரி, தனி மனிதருடையை சிந்தனையும், எழுத்துக்களும், படைப்புக்களும் மாறாது நிலைபெறும் காலம் இது. ஒரு ஞானியின் சிந்தனையும், எழுத்துக்களும், படைப்புக்களும் அதைவிடவும் மகத்துவமானது. காலம் மாறினாலும், சிந்தனையும், எழுத்துக்களும், படைப்புக்களும், தத்துவ உண்மைகளும் மாறிடாது. குரு மகான் வேதாத்திரி மகரிஷி தன் காலத்திலேயே, தன் சிந்தனையும், எழுத்துக்களும், படைப்புக்களும், தத்துவ உண்மைகளும் மாறிவிடக்கூடாது என்பதில் கவனம் கொண்டிருந்தார். அதில் எப்போதும் எந்த மாற்றமும் கூடாது என்றும் அறிவுறுத்துகின்றார். இதற்கு காரணமும் அவரே சொல்லுகிறார்.
ஆசான் திருவள்ளுவரின் திருக்குறளுக்குக்கூட, தமிழறிந்த யார் வேண்டுமானாலும், விளக்கவுரை எழுதலாம் என்ற நிலை இன்னமும் தொடர்கிறது. ஒரே குறளுக்கு, வேதாத்திரி மகரிஷியின் விளக்கவுரையையும், இன்னொருவர் விளக்கவுரையையும் நீங்கள் ‘திருக்குறள் உட்பொருள் விளக்கம்' நூல்வழியே ஒப்பிட்டுப்பார்த்து அறிந்து கொள்ளலாம். முக்கியமாக மறைபொருளை விளக்கும், ஐம்பது திருக்குறளுக்கு மட்டுமே விளக்கம் தந்திருக்கிறார். வேதாத்திரியத்திற்கு ஏற்றபடி இது போதும் என்றும் சொல்லிவிட்டார்.
‘நான் பேசவும், எழுதவும், விளக்கவும் ஆரம்பித்தது, எல்லாம் உணர்ந்த பிறகுதான். அதனால், அன்று சொன்னதையே இன்றும் சொல்லுவதுபோல உங்களுக்குத் தோன்றுகிறது. பெரும்பாலோர், ஆரம்பத்தில் ஒரு விளக்கத்தையும், உண்மை உணர்ந்த பிறகு வேறெரு விளக்கத்தையும் தருவார்கள்’ என்று உண்மையான காரணத்தை சொல்லுகிறார். மேலும், தன்காலத்திற்கு பிறகும், இப்படியே தொடரவேண்டும் என்பதையும் விளக்குகிறார். ‘ஒரு ஞானி, தான் உணர்ந்ததை பிறருக்கு வார்த்தைகளால் விளக்க முயற்சிப்பார். சீடரோ, மாணவனோ அந்த குறிப்பை எழுதிக்கொள்வான். ஆனால் அவன் அதை உணர்ந்தறிய மாட்டான். இதனால், ஞானியின் மறைவுக்குப்பின், தனக்கு தெரிந்ததை இணைத்துக்கொள்வான். அவன் காலத்திற்குப் பிறகு இன்னொருவன் வருவான். அவன் கூடுதலாக இன்னொன்றை சேர்த்துக்கொள்வான். இப்படியே கதை, கட்டுரை போல உண்மை, இவ்வுலகில் திரிந்து விட்டிருக்கிறது’ என்று சொல்லுகிறார். எனினும் வேதாத்திரி மகரிஷி தன்னை வான்காந்தத்தில் கலந்துவிட்டபிறகும், அவரின் கனவு நிறைவேறிட பிரமாண்டமாக, வேதாத்திரியம் வளர்ந்திருக்கிறது. வளர்ந்துகொண்டும் இருக்கிறது. அந்த வகையில் வேதாத்திரி மகரிஷியும் மகிழ்ந்திருப்பார்.
எனினும், கண்ணில் பட்ட ஒருபதிவு என்னை உறுத்தியது. இதோ அந்த பதிவிற்க்கான காட்சிப்படம்.
வழக்கமாகவே நான் அடிக்கடி, வேதாத்திரிய ஞானக்களஞ்சிய கவிகளை படித்துக் கொண்டிருப்பவன். என்னுடைய உண்மை விளக்கத்திற்கு, வேதாத்திரி மகரிஷியின் நேரடியான உரைகளும், கட்டுரைகளும், நூல்களும், கவிதைகளுமே உதவின. கவிதையை, பதிவில் படித்த பொழுது, எனக்கு ஒரு வரி இடித்தது. உடனே மூல ஞானக்களஞ்சிய கவி நூலைப் பிரித்தேன் படித்தேன். உண்மை அறிந்தேன்.
ஞானமும் வாழ்வும் கவிகள்: (கவி எண் 238) ‘இனி பிறவி இல்லை’ ‘நிறை உணர்வு’ என்பதை தாண்டி, ‘உருவெடுத்த காரணமும்’ என்று ஆரம்பித்து ‘உலகினிலே தொன்னூற் றாறாண்டு வாழ்ந்து’ என்று யாரோ, வேதாத்திரி மகரிஷியின் கவிதையில், கை வைத்திருக்கிறார்கள்.
வேதாத்திரி மகரிசி 96 ஆண்டுகள் வாழ்ந்தது இருக்கட்டும். அதை சொல்லுவதற்கு, அவரே 28/05/1986 ல் எழுதிய கவிதையில் கை வைக்கவேண்டுமா? யார் செய்த திருத்தம் என்பது தெரியவில்லை. கிட்டதட்ட, வேதாத்திரி மகரிசியின், இறையுணர்தலை, உண்மை விளக்கத்தை, 21 ஆண்டுகள் பின்னோக்கி நகர்த்தி விட்டார்களே? ‘உலகினிலே எழுபத்து ஐந்தாண்டு வாழ்ந்து’ என்பதை ‘உலகினிலே தொன்னூற் றாறாண்டு வாழ்ந்து’ என்று மாற்றிவிட்டது தகுமா? திருத்தியதை படிக்கும் சமூகம், எதோ இறக்கும் தருவாயில்தான், உண்மை உணர்ந்தாரோ? என்று கருத இடமிருக்கிறதே?! உங்களுகு சந்தேகம் இருந்தால், கவி எண் 709, ‘நிறை உணர்வு’ எனும் தலைப்பில், ஞானக்களஞ்சிய கவிதை நூலைப்பாருங்கள்.
அட, ஏனய்யா இதெல்லாம் பெரியவிசயமா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. விடுங்க இதெல்லாம் சகஜம் என்று என்னையும், உங்களோடு அழைக்கிறீர்கள் என்பதும் தெரிகிறது. சரி விட்டுவிடுவோம். ஆனால் வேதாத்திரியம் சிறுகச்சிறுக தன் மதிப்பிழக்க விடலாமா? ஏற்கனவே, வேதாத்திரியத்தில் உள்ளவர்களே, வேதாத்திரி மகரிசி அவர்கள் ‘ஏன் ஜீவசமாதி ஆகவில்லை? மருத்துவ மனையில்தானே இறந்தார்?’ என்று உண்மை அறியாமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இதில், கூடுதலாக 21 ஆண்டுக்கால உண்மை விளக்கமும் தள்ளிப்போய் விட்டது. இனி காலப்போக்கில், பதினோராவது மடமாக மாறிவிடக்கூடும் அல்லவா?
வேதாத்திரி மகரிஷி, தன் அன்பர்களிடம் உரை நிகழ்த்தினாலும், பொதுமக்களுக்காக உரை நிகழ்த்தினாலும், அவர்களை உயர்த்திடவே, தன் கருத்துக்களை, தன் உதாரணங்களைக் கொண்டே விளக்குவார். ஒருபோதும் பொது தளத்தில் உள்ளவர்களை சொல்லி பேசுவதில்லை. மக்களின் அககாட்சி மாறக்ககூடாது என்பதில் கவனம் கொண்டிருப்பார். ஆனால் இப்போது, எல்லோருமே, மக்களின் தளத்திற்கு இறங்கிவிட்டனர், இப்படி சொன்னால்தான் மக்களுக்குப் புரியும் என்று, வேதாத்திரி மகரிஷி கண்டுபிடிக்காத கருத்தியலை கண்டுபிடித்துவிட்டார்கள். மணி நேரம் பேசினாலும் அப்படித்தான், குறைந்த நிமிடத்தில் பேசினாலும் அப்படித்தான். இதை நீங்களும் உணர்ந்திருக்கலாம் என்று நம்புகிறேன். என்றாலும்கூட நல்லதே நடக்கட்டும்.
உலக பேச்சு வழக்கில், உண்மைக்கு புறம்பாக, ஒரு மனிதர் இறந்த பிறகு, இறந்தவரின் கருத்தை பேசினாலும், பேசும் பொருளானாலும், அவர் தன் கல்லறையில் நெளிகிறார் என்று சொல்லுவார்கள். அதாவது அந்த அளவிற்கு வருத்தம் தரும் என்று குறிப்பிடுவார்கள். அப்படி ஆகிவிட வேண்டாமே?!
ஒரு அன்றாடம் நிகழ்வதையே தவறான செய்தியாக தருவது, தவறு, குற்றம் எனும்போது, ஒரு ஞானியின், மெய்யுணர்தலை, தன் விளக்கத்தை, பொருத்தமாக மாற்றி அமைப்பது என்னவாகும்? ‘ஐயா, இதெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது’ என்கிறீர்களா? சரி தான். அப்படியே ஆகட்டும்.
வாழ்க வளமுடன்.
-