Why is it important to give importance to exercise? Why point it out so often?
உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் தரவேண்டிய அவசியம் என்ன? அடிக்கடி அதையே சுட்டிக்காட்டுதல் ஏன்?
உண்மையாகவே இரண்டுவிதமான காரணங்கள் இருக்கின்றன. அந்த இரண்டையுமே நீங்கள் அறிந்தீர்களா? என்பதும் இந்த கேள்வி வழியாக தெரியவும் இல்லை. அதனால்தான் அடிக்கடி, உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்றும், அதையே சுட்டிக்காட்டுதலும் நிகழ்கிறது. அப்படியாவது நீங்கள், இந்த உண்மையை புரிந்துகொள்ள மாட்டீர்களா? என்ற உள்நோக்கம் தான் காரணம்.
அக்கால கிராமங்களில், அதிகாலை ஏதேனும் சாப்பிடும் பொழுது, ஒருவர் கேட்பார், ‘என்னய்யா, பல்லை விளக்காம சாப்புடுறே?’ இந்த கேள்விக்கு மற்றொருவர், ‘அடப்போப்பா, ஆடு, மாடெல்லாம் பல்லா விளக்குது?’ என்று பதில் சொல்லுவார். இதை நீங்களும் கேட்டிருக்கலாம். ஆனால், ஆடு, மாடுகளின் பல்லுயிர் பெருக்கம் வேறு. மனிதனுடைய பல்லுயிர் பெருக்கம் வேறு. அதனால், மனிதன் தன்னைச்சார்ந்த சூழலில், தூய்மையாக இல்லாவிட்டால், பலவிதமான நோய் தாக்கங்களுக்கு ஆளாகிவிடுவான். இது இயல்பானதாகும்.
மேலும் மனிதபிறப்பில் ஓர் இயற்கை உன்னதமும், முழுமையும் இருக்கிறது. அது உள்ளடங்கி இருக்கிறது. சாதாரணமாக, அதை மனிதனே அறிந்துகொள்ள முடிவதில்லை. இதற்கு யோகம் தேவைப்படுகிறது. குருவின் வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. ஆனால், ஒரு மனிதன் தானாக, இந்த உண்மையை நோக்கி நகர்வது, அவனுக்குள் நிகழ்வதில்லை. மாறாக ஏதோ ஒரு, பரம்பரை வழியான தாக்கத்தில், யாரோ ஒரு சிலருக்கு நிகழ்கிறது என்பதுதான் உண்மை.
இந்த நிலையில், நீங்கள் எப்படி வாழ்வது? என்ற கேள்வியை எடுத்துக்கொண்டால், அதற்கு விடை, உங்கள் சூழலும், அதற்கேற்ப கிடைக்கும் வாய்ப்புக்களும், நீங்கள் தேர்ந்தெடுப்பதும்தான் மூலமாக அமைகிறது. மேலும், ஒரு நாட்டின் சட்ட திட்ட, ஒழுக்க, பழக்க முறைகளும் துணையாக அமைந்துவிடுகிறது. இதற்கு உட்பட்டு, நீங்கள் வாழ்க்கையை, எப்படி வேண்டுமானாலும் வாழமுடியும். அது உங்கள் உரிமையாகி விடுகிறது. அன்றாடம் உழைத்து, சலித்து, களைத்து, நன்றாக தூங்கி, எழுந்து வாழலாம். எதுவுமே செய்யாமல் சோம்பேறியாகவும் வாழலாம். இன்பங்களை மட்டுமே தேடி, திளைத்து, அனுபவித்து வாழலாம். இப்படி எண்ணற்ற வழிகள் உள்ளன. அவற்றின் வரிசையில் வருவதுதான், எந்த உடற்பயிற்சியும் இல்லாமல் வாழ்வதும் ஆகும். தவறு செய்வதும், வருந்துவது, துணைக்கும், பாதுகாப்புக்கும் கடவுளை வேண்டுவதும், பரிகாரங்கள் செய்வதும், வழிபாடு செய்வதும் நிகழும்.இருப்பதை அனுபவித்து, இயற்கையோடு முட்டி மோதி, விளைவுகளை ஏற்று, எப்படியாவது வாழ்வது இந்த வகையாகும்.
இது இப்படி இருக்க, வழக்கமான கடமைகளை செய்துகொண்டே, இயற்கைக்கும், பிற மனிதர்களுக்கும் எந்த தீங்கும் நேராமல், முரண்படாமல், நிறைவான, மகிழ்வோடு வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதன், தனக்குள், மனிதனாக பிறந்திருக்கும் நான் யார்? ஏன் பிறந்தேன்? எதற்காக பிறந்தேன்? இதற்கெல்லாம் மூல காரணம் என்ன? எனக்கு மூலமாக இருப்பது என்ன? நான் உடலா? மனமா? உயிரா? ஆத்மாவா? வேறொன்றா? என்ற சிந்தனை எழுந்தால், அது உண்மையை தேடும் வாழ்க்கை முறை ஆகும். கடவுள் என்பது என்ன? தெய்வீகம் என்பது என்ன? ஏன் வணங்குகிறோம்? என்ற கேள்வியும் அவனுக்குள் எழும். அதற்கு விடைகானவும் முயற்சிப்பான். உண்மையில், மனிதனுக்கு பிறப்பின் கடமையும், நோக்கமும் இருக்கிறது. ஆனால் அவன் அதை மறந்துதான் வாழ்கிறான். அந்த உண்மையை, குரு தான் தூண்டி விடுகிறார்.
இந்த இரண்டு வாழ்க்கை முறையில், எதை நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பது உங்கள் விருப்பம். அது உங்கள் பரம்பரையாலும், குடும்பத்தாலும், சூழ்நிலையாலும், பிறராலும் நிகழும். முதல் நிலையில் உடற்பயிற்சி விருப்பமில்லை. அது அவசியமும் இல்லை. இரண்டாவது நிலையில், அது முக்கியத்துவம் பெறுகிறது. ஏன் என்று கேட்கும் பொழுது, வேதாத்திரி மகரிஷி அவர்கள், ‘உயிர் தன் மூலத்தை அறிந்து கொள்ள எடுக்கின்ற முயற்சிக்கு இந்த உடல் தேவைப்படுகிறது. ஆன்மா இயக்க ஆற்றலாகவும், உடல் ஆன்மாவுக்குக் கருவியாகவும் இருப்பது விழிப்பு நிலையில் தெளிவாகும். உண்மை உணர்வாகும்.’ என்று சொல்லுகிறார்.
வாழ்க வளமுடன்
-