How is the Vethathiri Maharishi's Realization by His Words | CJ

How is the Vethathiri Maharishi's Realization by His Words

How is the Vethathiri Maharishi's Realization by His Words


வேதாத்திரி மகரிஷி தெய்வீக தன்மையை உணர்வாக பெற்று, அதன் நிறைபேற்று உணர்வை எப்படி சொல்லுகிறார் என்று விளக்குவீர்களா?

வேதாத்திரி மகரிஷியின், வேதாத்திரியத்தில் நான் இணைந்து, மாஸ்டர் கோர்ஸ் எனும் ஆசிரியர் பட்டயம் பெற்றதும், நேரடியாக மகரிஷிடம் தான் என்பதில் எனக்கு பெருமிதம் உண்டு. அந்த ஆசிரியர் பயிற்சியிலும், மற்றொரு நிகழ்விலும், நான் வரைந்த ‘வேதாத்திரி மகரிஷியின் ஓவியத்தை’ காட்டி இரண்டு முறை பேசி இருக்கிறேன் என்பதும், என் வாழ்வில் முக்கிய நிகழ்வுகள். ஆனால், ஆழியாறிலேயே தங்கி, அவர் அருகிலே இருந்து, அவரோடு அன்றாட நிகழ்வுகளில் கலந்து பேசி, கருத்துக்களை வாங்கி பகிர்ந்து கொண்ட, மூத்த பேராசியர்களின் மீது கொஞ்சம் பொறாமை கூட உண்டுதான்.

ஆனால், அந்த நாட்களில் என்வயது இருபதுதான் (20 Years) என்பதால், அன்றைய என் அனுபவத்தில் இருந்து, நான் என்ன கேட்டிருக்க முடியும்? என்ன பேசி இருக்கமுடியும்? என்றாலும், பஞ்சபூத தத்துவத்தையும், பரிணாமத்தையும், தன்மாற்றத்தையும், சுத்தவெளியின் தன்மை எப்படி கலந்திருக்கிறது என்ற உண்மையையும், நான் அந்த வகுப்பிலேயே குறிப்பெடுத்து, அதுகுறித்து சிந்தித்ததும் நினைவில் இருக்கிறது. அந்த அளவுக்கு நான் ஆர்வமாக, பாண்டிச்சேரி மூத்த பேராசிரியர் கே.ஜி. சாமி அவர்களின் அகத்தாய்வு பாடங்கள்தான்.

ஆனாலும், நான் மனவளக்கலை மன்றத்தின் தொடர்பிலிருந்து 1993க்குப் பிறகு விலகி இருக்கும்படி, சூழ்நிலைகள் அமைந்தன. அதன்பிறகு தனியனாகவே நான் என்னை, வேதாத்திரியத்தில் உயர்த்திக் கொண்டேன். வேதாத்திரி மகரிஷியின் நூல்களான, மனவளக்கலை, ஞானமும் வாழ்வும், காந்த தத்துவம் ஆகிய நூல்களும் பிற நூல்களும் கைவசம் இருந்தது. குறிப்பாக ஞானமும் வாழ்வும் நூல் எனக்கு உறுதுணையாக இருந்தது. தினமும் உடற்பயிற்சி, காயகல்ப பயிற்சி, தவம், ஆராய்ச்சி, அது குறித்தே சிந்தனை என்று இருந்தாலும் கூட, வெட்டவெளி என்ற தத்துவமும், பிரம்மஞானமும் பிடிபட, தீட்சை எடுத்ததில் இருந்து முப்பது ஆண்டுகள் (From 1988 to 2018 / 30 Years) தேவைப்பட்டன. அன்றுமுதல், எனக்குள் உணர்ந்ததை, உலகுக்கு பகிர்ந்தளிக்கிறேன். இன்றும் தொடர்கின்றேன்.

இதென்னாய்யா, மகரிஷியின் தெய்வீக தன்மையை கேட்டால், உன்னைப்பற்றி சொல்லிக்கொண்டிருக்கிறாயே? என்று உள்ளுக்குள் நினைக்கிறீர்களா? அதற்கு காரணம் இருக்கிறது. வேதாத்திரி மகரிஷியை புரிந்து கொள்ள வேண்டுமென்றால், நாமும் ஓரளவில், இறையுணர்வு தத்துவத்தை உணர்ந்து கொள்ளவேண்டியது அவசியம். இல்லையேல், ஒரு சாதாரண மனிதரைப்பற்றி சொல்லுவதுபோல, பெருமை மிகு வார்த்தை அலங்காரம் மட்டுமே தொக்கி நிற்கும்.  வேதாத்திரி மகரிஷி குறிப்பிட்டுச் சொல்லுவது போலவே, என்னை தகுதியாக்கிக் கொண்டு, பிறகுதான் அவரைப்பற்றி சொல்லுகிறேன் என்பதில் எனக்கு பெரும் திருப்தி. ஆனால், அதில் உங்களுக்கு சந்தேகம் இருக்கலாம். அதுபற்றி எனக்கு கவலையில்லை. என்னளவில், எது உண்மையோ அதைத்தான் சொல்லுகிறேன்.

‘நிறை உணர்வு’ எனும் தலைப்பிலான கவிதை (ஞானக்களஞ்சியம் பாடல் எண்: 709) வேதாத்திரி மகரிஷியின் முழுமையுணர்வை சொல்லுகிறது. இந்த கவியை 28/05/1986 ல் எழுதியிருக்கிறார் என்பதும் சிறப்பு. ‘உண்மை உணர்ந்தவர்கள் பல்லாயிரம் பேர் இருப்பார்கள். அவர்கள் வெளியில் தங்களை காட்டிக்கொள்வதில்லை’ என்று வேதாத்திரி மகரிஷியே குறிப்பிட்டிருக்கிறார். அந்த நாட்களில் அவரும் அப்படித்தான் இருந்திருப்பார். மற்றவர்களின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆட்கொள்ளப்பட்டிருப்பார் என்பதும் உறுதி. உதாரணமாக, நான் இறையுணர்வு பெற்றுவிட்டேன் என்று சொன்னால், நீங்களும் என்னை கிண்டலடிப்பீர்கள். ‘அப்படியா? நம்பிட்டோம்யா’ என்று சொல்லிவிட்டு ஓடி ஒதுங்குவீர்கள். ஆனாலும், திருவள்ளுவர் தன் குறளில்,

தக்கார் தகவிலர் என்பது அவரவர்

எச்சத்தாற் காணப்ப படும்.

என்று சொல்லுவது போல, என் செயலும், சேவையும், எழுத்தும், பதிவும், பகிர்வும் நின்று, அந்த உண்மையை சொல்லும் தானே?! உங்களுக்குமே கூட அப்படித்தான் என்பதையும் மறவாதீர்கள்.

வேதாத்திரி மகரிஷியும், தன் சொந்த ஊரான கூடுவாஞ்சேரியில், அப்படியான எள்ளலைத்தான் பெற்றார். எனினும், உண்மை உணர்ந்தோர் நிலை கொள்வதில்லை. அவர்களுக்குள் இருக்கும், இறையாற்றல், ‘இதை மற்றவர்களுக்கும் விளக்கி, நெறிப்படுத்துக’ என்று தூண்டிக்கொண்டே இருக்கும். மகான் மாணிக்கவாசர் கூட, தான் உண்மை அறிந்த பிறகு, ‘உடலே பாரமாக, உன்னோடு சேரமுடியாமல் தடுக்கிறதே’ என்று சொல்லுகிறார். என்றாலும் இறையுண்மையை, அதன் தன்மையை அழகாக ‘திருவாசகம்’ நூலில் தந்திருக்கிறார். இத்தகைய நிலையை, வேதாத்திரி மகரிஷியும் தன் கவியில் சொல்லுகிறார்.

இறையாற்றலே, தன் அன்பும் கருணையுமான அருளாற்றலால், வாழ்வின் ஓவ்வொரு நொடியிலும், உள்ளிருந்து உணர்த்தியதின் வழியாக, உருவெடுத்த காரணமும், காரியமும், முடிவும் தன்னுடைய, எழுபத்தைந்து வயதில் உணர்ந்துவிட்டதாக சொல்லுகிறார்.  கர்ம வினைப்பதிவுகளை திருத்தி, தூய்மை செய்துகொண்டேன் என்று தெளிவுபடுத்துகிறார். அதனால் மிச்சம் ஏதுமில்லை, கருத்தொடராக பின்பிறவி இல்லை இனி இல்லை என்று உறுதி செய்கிறார். கர்மவினை மிச்சமில்லை என்பது போலவே, கர்ம வினையை இனி உருவாக்கிடும் இச்சையும் இல்லை. அது எப்பொருளிலும் எதிலுமே இல்லை என்று திடமாக சொல்லுகிறார். தான் நிறைவில் இருப்பதாக தனக்குள் உணர்ந்த நிலையில். அருள் நிறைந்த பெரும்ஜோதி, தன்னை அரவணைத்துக் கொள்ளும், அந்தப்பரும் நன்னாளை எதிர்பார்த்து உள்ளேன் என்கிறார். இப்படியாக, தன் நிறை உணர்வினை கவிதை வழியாக பதிவு செய்கிறார்.

இது ஒன்றோடு ஒன்று கலப்பது. எது என்றும், எங்கும், எப்போதும், எல்லாமுமாக இருக்கிறதோ, அதனோடு தானும் ஒன்றாவது என்பதை உணர்ந்து சொல்லுகிறார். இது இறப்பு இல்லை, சொல்லப்போனால் எதுவுமே இறப்பு இல்லை. அது ஒரு தன்மாற்றம். பொருள் என்ற நிலையிலிருந்து, மெய்பொய்ப்பொருள் நிலை நோக்கி நகர்வது ஆகும். ஆனால், மனிதனோ, மெய்ப்பொருளின் ஓர் பகுதி என்பதை, உணர்வதே மனிதனின் பிறவி நோக்கமும், கடமையும் ஆகும். அதையே வேதாத்திரி மகரிஷின் வேதாத்திரியம் நமக்கு தருகிறது.

வாழ்க வளமுடன்.

-