What is the relationship between man and God? Is that true and necessary?
மனிதனுக்கும் இறைநிலைக்கும் உள்ள தொடர்பு என்ன? அது உண்மையும், அவசியமும் தானா?
இந்த கேள்வியை கேட்கும் வகையில், உங்களுக்கு இறை நம்பிக்கையும், அதுகுறித்த சிந்தனையும், மனிதன் பிறப்பு குறித்த ஆராய்ச்சியும், இயற்கை குறித்த வியப்பும் இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.
கடவுள் என்பதே பொய் என்ற கருத்து, அவ்வப்பொழுது மேலோங்கி, இளையோர்களிடம் திணிக்கப்பட்டு வருவதையும் நாம் காண்கிறோம். எனினும் அதுகுறித்து நாம் கவனம் கொள்ள அவசியமில்லை. ஏனென்றால், இந்த பிரச்சனையை, அவர்களுக்குள்ளாக இருக்கும், இறையாற்றலே சரி செய்துகொள்ளும் என்பது உறுதி. என்ன அதுவரை அவர்களுடைய வாழ்க்கை, பல திசைமாற்றங்களை சந்தித்து, இறுதியாக ‘ஓ, இதுதான் கடவுளா?’ என்று அவர்களின் கேள்விக்கு பதிலை, காலமே தந்துவிடும். சிலருக்கு தன் வாழ்நாளிலேயே கிடைக்கும். சிலருக்கு அவர்களின் வழியாக வரும் வாரீசுகளுக்கு கிடைக்கும். நாம் அதை எப்போது என்று தீர்மானிக்க வழியில்லை. எனவே, நாம் அவர்களை அப்படியே விட்டுவிடுவோம். அது அவர்கள் பாதை, சென்று சேரட்டும், நாம் நம் பாதையில் பயணிப்போம்.
மனிதனுக்கும் இறைநிலைக்கும் உள்ள தொடர்பு அறியவேண்டும் என்றால், நாம், விஞ்ஞானத்தில் சொல்லப்படுகின்ற, ரிவர்ஸ் இன்ஞ்ஜீனியரிங் டெக்னாலஜிக்கு ( Reverse Engennering Technology) செல்லவேண்டும். இந்த பின்னோக்கிய அமைப்பியல் நுட்பம் என்பது, மனிதனின் மூலம் என்ன? என்ற கேள்வியாக ஆரம்பிக்கலாம். உயிர்வியல் ஆய்வாளரான, சார்லஸ் டார்வின், குரங்கிலிருந்து வந்தவன் மனிதன் என்றார். நவீன விஞ்ஞானம், இல்லை, குரங்குக்கு முன்னேயும், குரங்குக்கு பின்னேயும் பல நூறு பிறப்புக்கள் வந்தன. பிறகுதான் நவீன மனிதன் வந்தான் என்று சொல்லுகிறது. இந்த விஞ்ஞானம் எப்போது தொடங்கியது? புவியீர்ப்பு என்பதையே 17ம் நூற்றாண்டில்தான் கண்டுபிடித்தார்கள். அதற்கும் முன் இல்லையா? இருந்தது அதை, பதிவு செய்து விஞ்ஞானமாக்கவில்லை. அவ்வளவுதான்.
இவையெல்லாம், மக்களின் வாழ்வியலில் எல்லாம் கலந்துதான் இருந்தது. Proof என்று சொல்லக்கூடிய சான்று, தனியாக இல்லை. விஞ்ஞானம் என்ற அமைப்பும் உருவாகவில்லை. ஆனால், பல்லாயிரம் ஆண்டுகளாக, செய்யுள் வழியாக, கவி வழியாக வந்து கொண்டுதான் இருந்தது. இதையெல்லாம், பக்தி என்பதாக, சிலர் ஒதுக்கிவைத்தது, வாழும் மக்களுக்கான அநீதி. எனினும் உண்மை மறைவதில்லை.
இறை நிலை, தெய்வீகம், கடவுள், இயற்கை இப்படி எந்தெந்த வார்த்தையில் சொன்னாலும், ஒரே பொருளைக்குறிக்கும், மெய்பொருளை நாம், அவ்வளவு சுலபமாக ஒதுக்கிவிடவும் முடியாது. உயர்வான, மூலமான, என்றும், எங்கும், எப்போதும் இருக்கும் ஒன்றான முழுமை அது. வார்த்தைக்குள் சிக்கிடாதது. ஆனால், உணர்வுக்கும் அறிவுக்கும் கிடைப்பது. நிச்சயமாக அது கற்றறிவும், படிப்படிவும், அனுபவ அறிவும் அல்ல. சிந்தனையும், எண்ணமும் அற்ற ஓர் ஒப்பற்ற நிலை. இதை, வேதாத்திரி மகரிஷிதான், உள்ளது உள்ளபடி, விஞ்ஞானிகளுக்கும் புரியவைத்தார்.
அறிவும், விரைவுமாக, வேகமும் விவேகமுமாக, பேராற்றலும் பேரறிவுமாக, தன்னியல்பாக அதிர்ந்துகொண்டே இருப்பதும், தன்னிருக்க சூழ்ந்தழுத்தமாக இருப்பதும் எதுவோ அதுவே மெய்பொருள் என்கிறார். இதை உங்கள் வார்த்தை படி எப்படி அழைத்தாலும், அழைக்காவிட்டாலும், ஒதுக்கித்தள்ளினாலும்கூட ‘அது இருக்கும், அதற்குள் நாம் இருப்போம், நமக்குளும் அது இருக்கும்’.
பரிணாமத்தில் எழுச்சியில், தன்மாற்றமாக உண்டான, பரமாணு முதல், மனிதன் வரையில் வந்த பயணம், மனிதன், நான் யார்? என்று தன்னை அறிந்த பொழுது முழுமை அடைந்தது. துரதிர்ஷ்டவசமாக, ஓர் மனிதனில் அது திருப்தி அடையவில்லை. ஒவ்வொரு மனிதனும், அந்த பயணத்தை முடிக்கவேண்டிய அவசியம் இருக்கிறது. அதுவரை, பிறப்பு தொடர்ந்து கொண்டே இருக்கும். தலைமுறை தலைமுறையாக. உங்களிடம் எப்படி உங்கள் தாத்தா பாட்டியின் குணாதசியம் இருக்கிறதோ, அதுபோல உங்கள் குணாதசியம், உங்கள் பரம்பரைக்கு, வாரீசுகளுக்கு கடத்தப்படும். இல்லை என்று மறுப்பீர்களா?
இதையே கர்ம வினை என்று அமைகிறது. கர்மா என்ற வார்த்தை, உங்களை ஏதோ செய்கிற்து என்றால், செயல் விளைவு தத்துவமாக எடுத்துக்கொள்ளலாம். இதில் இயற்கையின், வினை விளைவு நீதி உள்ளடக்கமாக இருக்கிறது. யாரும், எதுவும், இதிலிருந்து தப்பமுடிவதில்லை. அதை புரிந்து கொண்டு, உங்களுக்கும், பிறருக்கும் பிரச்சனை ஏற்படுத்தும், ஏற்படுத்திய பதிவுகளை நாம் விலக்கி, தூய்மை செய்துகொள்வது அவசியம். பிறப்பின் நோக்கமும் அதுதான். இறைநிலையின் தீர்ப்பும் அதுதான். அதை புரிந்து கொள்ளாதவரை, உங்கள் வாழ்க்கைப்பாடு திண்டாட்டம் தான். அதை தனியாக, இங்கே வார்த்தைகளால் விளக்கவேண்டிய அவசியமில்லை. இந்த வகையில், உங்கள் கேள்விக்கு விடை, புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.
வாழ்க வளமுடன்.
-