Do planets affect an individual's living environment? Changing? What is the truth?
கிரகங்கள் தனி மனிதனின் வாழ்க்கைச் சூழலை பாதிக்கிறதா? மாற்றுகிறதா? உண்மை என்ன?
இதை ஒரு நீண்ட, விளக்கத்தின் வழியாகவே காணலாம். இல்லையேல், உங்களுக்கு, சரியான புரிதல் கிடைக்காது என்பது உறுதி. நாம் வாழும் இந்த புவியும் ஒரு கிரகம்தான் என்பதை மறந்து விடக்கூடாது. மேலும் முக்கியமாக, நாம் நிலத்தில் நிலையாக வாழ்வதாகவே ஒரு கற்பனையில் இருக்கிறோம். ஆனால் உண்மை என்ன? நாம் பிறந்தது முதல், வாழ்க்கையின் முடிவுவரை, நாம் பயணித்துக்கொண்டே இருக்கிறோம். எங்கே? இந்த பிரபஞ்சத்தில், நாம் அறியமுடியாத ஏதோ ஒரு இலக்கு நோக்கியே. இதை எப்படி அறியலாம்? மிக எளிமையாக, சூரியன் கிழக்கில் உதிப்பதும், மேற்கில் மறைவதும் போதுமானது. உண்மையிலேயே, சூரியன் கிழக்கிலிருந்து மேற்காக நகர்கிறதா? என்று கேட்டால், ஆம் என்பது உங்கள் பதிலா? அப்படியானால் நீங்கள், மாய உலகில் இருக்கிறீர்கள்.
உண்மை என்ன? நாம் வாழ்கின்ற பூமிதான், வடக்கு தெற்கை அச்சாக கொண்டு, மேற்கிலிருந்து கிழக்காக, தனக்குத்தானே சுற்றிக்கொண்டு இருக்கிறது. கூடுதலாக சூரியனோடு இணைந்து, சூரியனை அச்சாக கொண்டு, சூரியனையும் சுற்றுகிறது. இந்த உண்மையை நன்கு விளக்கமாக்கிக் கொள்ளவேண்டியது அவசியம்.
நாம் வாழும் பூமியோடு, கூடுதலாக பூமியை சுற்றும் சந்திரனையும் அறிந்து கொள்க. மேலும் சூரிய குடும்பத்தில் பூமி, மூன்றாவது கிரகம். நாம் வாழும் இந்த பூமியோடு, புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனி ஆகிய கிரகங்களும் இணைந்து சுற்றி வருகின்றன. சனிக்கு அடுத்தும் நெப்டியூன், புளூட்டோ இரண்டு கிர்கங்கள் இருந்தாலும், அதனுடைய தூரம் காரணமாகவும், பலமில்லாத அலைகள் கொண்டிருப்பதால், இந்திய ஜோதிடத்தில் இணைத்துக் கொள்ளவில்லை. இந்த இடத்தில், ‘இல்லை அவை கண்டுபிடிக்கபடவில்லை, பிறகுதான் அதை விஞ்ஞானம் கண்டுபிடித்தது’ என்று ஒருவர் சொன்னால், அது அவரின் அறியாமை. சாதாரண கண்ணுக்கு தெரியாமல் இருக்கும் நட்சத்திரங்களை எப்படி இணைத்தார்கள்? அப்படியானால் அதெல்லாம் பொய்யா? அல்லது அப்போதே விஞ்ஞானம் இந்த, நட்சத்திரங்களை கண்டுபிடித்து அவர்களுக்குச் சொன்னதா? இதற்கு உங்கள் விடை என்ன?
இப்போது, உங்கள் கேள்வியின், பதிலுக்கு வருவோம். இப்படி தானும் சுற்றிக்கொண்டு, சூரியனை சுற்றிக்கொண்டே இருக்கும் கிரகங்கள், தன்னிலிருந்து அலைகளை வீசிக்கொண்டே இருக்கின்றன. இன்னொரு அதிசயம் என்னவென்றால், நாம் நிலையாக இருக்கிறது என்று எண்ணிக்கொண்டிருக்கும், சூரியனும், தன் குடும்பத்தை எடுத்துகொண்டு, நகர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில்தான் நட்சத்திரங்களின் அலைகளும் மாறிக்கொண்டே இருக்கின்றன. நட்சத்திரங்களும் கிரகங்கள்தான். வெகுதூரத்தில் இருப்பதால், அதை நட்சத்திரங்கள் என்கிறோம்.
இந்த அலைகள் எல்லாமே ஒன்றோடு ஒன்று கலந்து, அதன் தூரம், அருகாமை என்கிற வகையில், பூமியை வந்தடைகிறது. பூமியும் ஓரளவில் பாதிப்படைகிறது எனினும், அதை நாம் உணர்வதில்லை. ஆனால் பூமியில் வாழும் நமக்கு, அந்த அலைகள், தனித்தனியாக, ஒரு தூண்டுதலை ஏற்படுத்துகிறது. ஏன்? மனிதன் முதற்கொண்டு எல்லா உயிரினமும், எல்லா பொருட்களும், அணுக்களால் ஆனவையே. காணும் பொருட்களெல்லாம் அணுக்களின் கூட்டு, காண்கின்ற நாமும் அணுக்களின் கூட்டுத்தான். இதில் உங்களுக்கு சந்தேகம் உண்டா?
இதில், மனிதனுக்கு எப்படி, தனியான பாதிப்பை கிரகங்கள் ஏற்படுத்துகின்றன? என்று சிந்தித்தால், உயிரின பரிணாமம் என்ற முதல் நிலைக்கு நாம் கவனம் செலுத்த வேண்டும். Evaolution என்று சொல்லப்படும் ஒன்றன் பின் ஒன்றான, சங்கிலித்தொடரான பரிணாமத்தில், உடலின், உடலுக்குள்ளாக அந்தந்த உறுப்புக்களின், உயிரின், மனதின் உருவாக்கத்தில், தனித்தனியான கிரகங்களின் பங்கும் முக்கியமானதாக இருக்கிறது. இதை ஜோதிடத்தின் அடிப்படையிலேயே அறிந்து கொள்ள முடியும். நாம் பிறக்கும் பொழுது, ஆங்காங்கே இருக்கக்கூடிய கிரகங்கள், ஒரு பதிவை தருகின்றன. அதை நாம், நம்முடைய ஜாதகமாக எழுதிக்கொள்கிறோம். அன்றிலிருந்து, நமக்கு ஏற்படும் தூண்டுதல்களில், நம் செயல்பாடுகள் இருக்கின்றன.
இந்த தூண்டுதலை புரிந்து, அறிந்து அதற்கு விளக்கமான பாதையில், நாம் வாழ்வதற்கு பழகிக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இல்லையேல், உங்கள் வாழ்க்கைச் சூழல் மாற வாய்ப்புள்ளது. அதுபோல பாதிக்கப்படவும் செய்யும். மாறுதல் கொள்ளவும் செய்யும். உங்கள் ஜாதகம், உங்களுக்கான கையேடு என்பதை மட்டும் நினைவில் கொள்க. ஆனால் அது உங்கள் தலையெழுத்து என்று நம்பி விடாத விழிப்புணர்வு தேவை.
வாழ்க வளமுடன்.
-