What is the impact of Bhakti in the recent time on the Human Life and Lifestyle? | CJ

What is the impact of Bhakti in the recent time on the Human Life and Lifestyle?

What is the impact of Bhakti in the recent time on the Human Life and Lifestyle?


கடவுள், அவதாரம், பக்தி, வழிபாடு, சடங்குகள், விழாக்கள் ஆகியன தற்கால மக்களிடம் எத்தகைய தாக்கத்தை கொண்டிருக்கிறது என்பதை விளக்குவீர்களா?


இந்த கேள்விக்கான பதிலை, பாமர மக்களின் தத்துவஞானி, வேதாத்திரி மகரிஷி அவர்கள், மிகத்தெளிவான பதிலும் தந்து, அதற்கான தீர்வும் தந்திருக்கிறார். அவர் வார்த்தைகளிலேயே படிப்போம். இதோ,

வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொல்லுகிறார், ‘வரலாற்றுப்படி பார்த்தால், ஒரு சிலரே தெய்வம் பற்றிய உண்மை உணர்வைப் பெற்றிருக்கிறார்கள். பலரால் அது முடியவில்லை. எனவே மனிதப் பண்பாடு, கடவுள், அவதாரம் பற்றிய கதைகளையே நன்றாக மனதில், பதியச் செய்து கொண்ட காரணத்தால் கடவுளை, மனிதனுக்கு அப்பாற்பட்ட ஒன்றாகவே கருதுகிற நிலை இருந்தது. பெருவாரியான மக்களுக்கு, சுத்தவெளிதான் தெய்வம் என்பதையும், அதுவேதான் உடல், மனம், பேரியக்க மண்டல நிகழ்ச்சிகள் அனைத்தையும் நடத்துகின்றது என்பதையும் நம்புவது, சிரமமாக இருக்கிறது.

அவதாரம் என்று கொள்வதோ அல்லது சிலைவடிவில் எல்லை கட்டி வைத்திருப்பதோ வேகம், பருமன், காலம், தூரம் என்ற அளவைகளுக்கு உட்பட்டும், இன்ப துன்ப உணர்வுகளுக்கு உட்பட்டும், ஒரு குறுகிய மனநிலையையே விளைவித்து இருக்கிறது. மெய்யுணர்வு பெற்ற தத்துவ ஞானிகள் கடவுள் நிலை என்பதை, எல்லாம் வல்லது எங்கும் நிறைந்தது, எல்லாப் பொருட்களூடும் நின்று இயங்குவது என்றும், அதுதான் பிரபஞ்ச தோற்றங்கள் எல்லாவற்றிற்கும் ஆதிநிலை என்றும் விளக்கினார்கள்.

கடவுளை அவதாரங்களாகச் சிலை வடிவத்திலே வழிபட்டவர்களுக்கும், மெய்யுணர்வு பெற்ற தத்துவ ஞானிகளின் கூற்று ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை. சிலை வழிபாடு என்பது, குழந்தைகளுக்கும், அறிவு வளர்ச்சி பெறாதவர்களுக்கும், ஒரு வடிவத்தையும் குணத்தையும் மனதிலே உருவகப்படுத்திக் கொண்டு, அறிவை விரித்து வழிபடுவதற்காக ஏற்பட்ட முறை ஆகும். 

இத்தகைய வழிபாட்டு முறையில் வழிபடுபவர், தன்னுடைய அறிவையே விரித்து வழிபடுகிற பொருள் மீது பரவ விடுவதால், அவருடைய அறிவு எந்தத் தன்மையாக இருக்கிறதோ அந்தத் தன்மையிலேயேதான், வழிபடுகிற பொருளையும் காண்கிறார்.  இத்தகைய வழிபாடானது, ஏதாவது ஒரு தொழில் வெற்றியையோ அல்லது பொருள் வளத்தையோ மையமாகக் கொண்டே அமைகின்றது. இந்த வழிபாட்டு முறை பழக்கமானது, ஒருவரை, அவர் உணர்வாகப் பெறவேண்டிய இறைநிலை உணர்விலிருந்து பிரித்தே வைத்திருக்கிறது. மெய்யறிவை நாடி ஆன்மீக வளம் பெறாதவரை வாழ்க்கை, எப்படி பயனுள்ளதாக அமைய முடியும்?

வழிபாட்டு முறையிலே இருக்கிற பழக்கங்களும், வழக்கங்களும் மனதை ஒரு எல்லை கட்டிய நிலையிலேயே குறுகி இருக்கச் செய்து, தெய்வம் பற்றிய உண்மை நிலையை அறியவொட்டாமல் தடுக்கின்றன. ஆன்மீக முன்னேற்றத்திற்கு இந்த நிலையானது பெரிய தடையாகும். 

மனிதனுக்கு உரிய ஆறாவது அறிவை சிறப்பித்துக் கொள்ளவோ, முழுமை பெறவோ, பயிற்சியும் பழக்கமும் மேற்கொள்ளவில்லை என்றால் அம்மனிதன், ஐயறிவு வரையிலே எல்லை கட்டிக் கொள்வான். விலங்கினச் செயல்களிலிருந்தும், குணங்களிலிருந்தும் விடுபட முடியாது. 

இந்த நிலைமை நீடிக்க விட்டால் தனி மனிதன், குடும்பம், ஊர், நாடு, உலகம் என்ற அளவில் வாழ்வில் பிணக்கு, போர், குற்றங்கள், சிக்கல்கள் துன்பங்கள் பெருகிக் கொண்டேயிருக்கும். 

ஆன்மீகத் தாகம் நிரம்பியுள்ள எனதன்புக்குரிய சகோதர சகோதரிகளே! தயவுசெய்து மனிதனாகத் தனக்குத் தானே, அறியாமையினால் போட்டுக் கொண்ட, இத்தகைய கற்பனை வலையிலிருந்து விடுபட்டு, மனதை விரித்து, எல்லாம் வல்ல மெய்ப் பொருளை உணரப் பழகிக் கொள்ளுங்கள்.’என்று விளக்கிச்சொல்லி, அறிவுறுத்துகிறார்.

இதை நீங்கள் மேலோட்டமாக படித்து நகராமல், மறுபடி மறுபடி படித்து, அதன் வழியாக சிந்தனையில் ஆழ்ந்து, யோசிக்கும் பொழுது, இவ்வார்த்தைகளின் உண்மை, உள்ளது உள்ளபடியே புரிந்திடும் என்பது உறுதி. இத்தகைய உண்மை விளக்கம், எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் என்று நம் குருவோடு இணைந்து, நானும் வாழ்த்தி மகிழ்கிறேன்.

வாழ்க வளமுடன்.

-