Is it necessary to worship God? Can anyone get away from it? What happens if you don't? Give an explanation.
இறை வழிபாடு அவசியம்தானா? அதிலிருந்து யாரும் விலகிவிட முடியுமா? செய்யவில்லை என்றால் என்ன ஆகும்? விளக்கம் தருக.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, இறை வழிபாடு அவசியம்தானா? அதிலிருந்து யாரும் விலகிவிட முடியுமா? செய்யவில்லை என்றால் என்ன ஆகும்? விளக்கம் தருக.
பதில்:
ஒவ்வொரு மனிதனின், வாழ்க்கைச் சூழலிலும் இப்படியான கேள்வி எழுவதுண்டு. காரணம் என்னவென்றால், அவர்கள் இறையை, கடவுளை வேண்டிக் கேட்டுக்கொண்ட பொழுதெல்லாம், எதுவுமே உடனடியாக கிடைக்கவில்லை. கிடைத்ததும் கூட, பற்றாக்குறை ஆகிவிட்டது என்று கருதினார்கள். இதனால், அவர்களுக்கு ஏமாற்றமும், நம்பிக்கையின்மையும் தான் கிடைத்தது. அந்த அனுபவத்தின் வழியிலே, ‘அது’ இல்லையோ? என்ற கருத்துக்கு உடன்பட்டார்கள். இது இயல்புதான். உங்களுக்கும் கூட அப்படி இருக்கலாம்.
சமீபத்தில் ஒரு மீம்ஸ், நல்லவங்களை, கடவுள் சோதிப்பாரு, ஆனா கைவிட மாட்டாரு என்று ஒருவர் சொல்ல, இன்னொருவர், அதான் நல்லவங்கன்னு தெரியுதுல்ல, அப்புறம் ஏன் சோதிக்கிறாரு? என்று கேள்வி கேட்கிறார். மேம்போக்காக, இது கிண்டல் கேலி என்று இருந்தாலும், நல்லவனாக இருந்தவன், ஏன் தவறு செய்தான்? எப்போது செய்தான்? என்ற கேள்வியை முன்வைத்தால், அதற்குரிய உண்மை விளக்கமாகலாம்.
முதலில், நாம் ஏதேனும் கேட்பதற்காகத்தான், இறை வழிபாடு என்ற எண்ணத்தை கைவிட வேண்டியது அவசியம். கேட்டால் கொடுக்கவும், உடனே கொடுக்கவும் எதிர்பார்ப்பதும் தவறு. பிறந்த பொழுது, நீ அழுதாய், உனக்கான உணவை, தாயின் பாலாக்கித் தந்தது யார்? பதிலாக ‘இயற்கை’ என்பார்கள். அந்த இயற்கைக்கு மதிப்பளித்து, உயர்வாக, இறைநிலை, அதை அறியும் வழி கட உள் (கடவுள்) என்பதாகத்தான் உண்மை இருக்கிறது. ஆனால், இதை நாம், கைவிட்டு விட்டோம். கேட்கும் பொழுதெல்லாம் கொடுக்கவும், கேட்பதெல்லாம் கொடுக்கவும் இறைநிலை எப்படி அசைந்து கொடுக்கும்? உனக்கானது எல்லாமே, உன் வாழ்க்கையோடு, செயல்களோடு, விளைவுகளோடு பிணைக்கப்பட்டுள்ளது. அது கண்ணுக்கும், வெளிப்படையாகவும் தெரிவதில்லை. ஒரு விதைக்குள் அந்த மரத்தைத் தரும் விதை இணைக்கப்பட்டுள்ளது நமக்கு தெரிகிறதா? ஆனால், கருத்தாக உணர முடியும் தானே?
நம் வாழ்வோடும், செயல்களோடும், விளைவுகளோடும் நமக்கானது எல்லாம் கிடைப்பதை அறியாமல், அதையெல்லாம் மறந்துவிட்டு, கேட்டால் கொடுக்க வேண்டும், அதுவும் உடனடியாக கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியா? இறைநிலையை, நம் அளவிற்கு ஓர் சாராசரி மனிதராகவா நினைக்க முடியும்?
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி, தரும் நேரடியான விளக்கத்திற்கு, மேற்கண்ட முன்னோட்டம் உதவலாம் என்று கருதுகிறேன். இனி, அவர் தரும் விளக்கத்தை காண்போமா?
‘எல்லாம் வல்ல பரம்பொருள் (Providence) எனக்கு வேண்டியதை எல்லாம் உரிய காலத்தில் கிடைக்குமாறு வைத்திருக்கும் பொழுது, அந்தப் பரம் பொருள், இந்த இயற்கையாக, பிரபஞ்சமாக, உலகமாக, மக்களாக எனக்கு உரியவர்களாக, என்னுடைய அறிவாக இருந்து கொண்டு எல்லாவற்றையும் அளித்துக் கொண்டே இருக்கிற போது, நான் எதற்காக இது இல்லை, அது இல்லை என்று குறைபட்டுக் கொள்ள வேண்டும், பிச்சை எடுக்க வேண்டும்?’
‘செய்ய வேண்டியதை மனம் கோணாமல் செய்துவிட்டு கவலைப்படாமல், பிறரை நொந்து கொள்ளாமல் இரு. உனக்கு முரண்பட்டவர்கள் யாரேனும் இருப்பின் அவர்களை வாழ்த்திக் கொண்டே இரு.
உன்னை வாழ்த்திக் கொள். உன் குடும்பத்தை வாழ்த்து. சுற்றத்தாரை வாழ்த்து, சமுதாயத்தை வாழ்த்து.
மன அமைதியைப் பேணும் வகையில் தியானம், சிந்தனை, அகத்தாய்வு இவற்றில் தொடர்ந்து ஈடுபடு. உடற்பயிற்சியை நன்கு செய்து வா. இவ்வாறு தொடர்ந்து ஒட்டுமொத்தமான வாழ்க்கைப் பயிற்சியை கைக்கொண்டால் வேறு எந்த ஞானமும் வேண்டாம். இன்னும் ஒரு கடவுளும் வேண்டாம்.’
‘ஏனென்றால் எந்தச் செயல் செய்தாலும், அங்கே விளைவு, கடவுள் செயல்தான். (That is the cause and effect system). அது இயற்கையினுடைய விளைவு தான். நீ செய்யும் செயலுக்குத் தக்கவாறு, பொருளுக்குத் தக்கவாறு, உனக்கு இன்பமோ, துன்பமோ, வெகுமதியாகவும், தண்டனையாகவும் கொடுத்துக் கொண்டே இருப்பது எதுவோ, அதுதான் எல்லாம் வல்ல இறை. ஆகவே அந்த இறைவனை, உன்னுடைய செயலின் விளைவாக, காலையிலிருந்து மாலை வரையில் பார்த்தும் மதிப்புக் கொடுத்து வா. அதுவே கடவுள் வணக்கம். அதைவிட்டு தனியாக ஒரு கடவுளைத் தேட வேண்டாம். வாழ்க்கையையும், வாழ்க்கையின் நோக்கத்தையும்,
அந்நோக்கத்திற்கேற்ப, வாழும் முறை என்ன என்பதை அறிந்து கொள்வது ஞானம்.’
என்றவகையில், நமக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார். நமக்குள்ளாக, அமைதியான நிலையில், சிந்தித்தாலும், அந்த சிந்தனையின் வழியில் ஆராய்ந்தாலும், உங்களுக்கு உண்மை விளக்கம் கிடைத்துவிடும். இயற்கையோடு ஒன்றிணைந்த வாழ்க்கையும், எந்த வகையிலும் முரண்படாத செயல்முறைகளும் உண்டாகும் என்பது உறுதி.
வாழ்க வளமுடன்.
-