Is there any other guides by Vethathiri Maharshi after simplified exercises to get fit? | CJ

Is there any other guides by Vethathiri Maharshi after simplified exercises to get fit?

Is there any other guides by Vethathiri Maharshi after simplified exercises to get fit?


உடல் நலம் பெறுவதற்கு, எளியமுறை உடற்பயிற்சிக்கு அடுத்து, வேதாத்திரி மகரிஷி வேறேதேனும் பயிற்சிகள் உள்ளதா?

கேள்வி

வாழ்க வளமுடன் ஐயா. உடல் நலம் பெறுவதற்கு, எளியமுறை உடற்பயிற்சிக்கு அடுத்து, வேதாத்திரி மகரிஷி வேறேதேனும் பயிற்சிகள், வழிமுறைகள் சொல்லியிருக்கிறாரா? 


பதில்

தன்னுடைய வாழ்நாளில், தன் இறையுணர்தல் பயணத்தோடு, அதை மற்றவர்களுக்கும், அறித்தரும் வேளையில், அன்பர்களின் உடல்நலம் குறித்த அக்கறையும் கொண்டிருந்தார் வேதாத்திரி மகரிஷி அவர்கள். பிறருக்கு அப்பயிற்சிகளை கற்றுத்தந்து, அதன் வழியாக கிடைத்த, அந்த மாற்றங்களையும், விளைவுகளையும் கூட ஆராய்ந்து, திருத்தி, முழுமை செய்திருக்கிறார்.  பல்வேறு வகையான ஆசனம், மூச்சுப்பயிற்சி, உடலியக்கம், அக்குபிரஷர் என்று எல்லாம் கலந்த ஒன்றாகவே, எளியமுறை உடற்பயிற்சியை அமைத்துத் தந்திருக்கிறார். 

    முக்கியமாக, கிட்டதட்ட உண்மையை இழந்திருந்த, சித்தர்களின், அற்புதமான காயகல்ப யோக கலையை, முழுமை செய்தும் தந்தார். எளிமையான குண்டலினி யோகத்தையும் கற்றுத்தந்தார். தன்னைப்போலவே நாமும், மெய்ப்பொருள் விளக்கம் பெற வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வமும் கொண்டிருந்தார்.

அந்த வகையில், அவர் சொன்ன, உடல் நலம் பெறுவதற்கான அடிப்படை வாழ்க்கை நெறிமுறைகளை இங்கே காணலாம். வாழும் வாழ்க்கையில், உடல் நலம் மீது அக்கறை கொண்டோர் யாவரும், கடைபிடிக்க வேண்டிய விதிகள் என்று கூட சொல்லமுடியும். தங்களின் உடலின் மீதும், உயிரின் மீதும், வாழ்நாளின் மீதும் விருப்பம் கொண்டோர், இந்த நெறிமுறைகளை கடைபிடிக்கவேண்டியது அவசியம். மற்றவர்கள், வழக்கம்போல, ஒதுக்கி, தள்ளி வைத்துவிடலாம்.

இனி, 

  அடிப்படை: அணுக்களின் கொத்து இயக்க நிகழ்ச்சியே தூல உடல்.அதனூடே பரமாணு நிலையில் ஊடுருவிச் ஓடிச் சுழன்று கொண்டேயிருப்பது உயிர்ச்சக்தி. உயிர்ச்சக்தியின் ஓட்டத்தில் தடையுண்டானால் அதுவே உணர்ச்சியாகின்றது.  அந்த உணர்ச்சி ஒரு ஜீவன் தாங்கும் அளவிற்கும் தாங்கிப்பழகிய அளவிற்கும் மேலாக ஓங்கும்போது அது வல்லுணர்ச்சியாகி துன்பமாக, நோயாக உணரப்பெறுகின்றது. 

        அந்த தடை நீடித்து, அதன் விளைவாக உடலில் மின் சாரம், காற்று, இரத்தம், ஆகிய மூன்று சுழல்களும் தடைப்படுமானால் உடலுக்கு மூலமான வித்து, தாங்கும் அளவுக்கு மேல் கனல் கொண்டு, அதன் நாளங்களைத் தகர்த்து வெளியேறிவிடும். உணர்ச்சி என்ற அறிவோடு கூடிய உயிச்சக்தி தொடர்ந்து அந்த உடலில் சுழன்று இயங்க முடியாமல் உடலை விட்டு வெளியேறி விடும். இந்த நிகழ்ச்சியே மரணம் எனப்படுகிறது.

ஐந்தில் அளவுமுறை: உயிர்ச்சக்தி உடலில் ஒழுங்காக ஓடிக்கொண்டிருப்பதே இன்ப உணர்வாகும்; உடல் நலமாகும். அதைப் பாதுகாக்க (1) உணவு, (2) உழைப்பு, (3) உறக்கம், (4) ஆண்-பெண் உடலுறவு, (5) எண்ணம் இந்த ஐந்து அம்சங்களில் தொடர்ந்த கவனம் தேவை. இவை அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் முறை தவறிக் கொள்ளப் பெற்றாலும் உயிர்ச்சக்தி ஓட்டம் பாதிக்கப்படும். நோய்கள் உண்டாகும்.

உணவில் எளிமை: வாரத்திற்கு ஒரு முறை இரவில் உணவு கொள்ளாமல், இலேசாகப் பழ வகை உண்டோ, அல்லது சிறிது பால் அருந்தியோ உறங்குவது நோய்களை ஒரு அளவில் தடுக்க உதவும். உடல் ஜீரணிக்கத்தக்க அளவு உணவு உண்டால் அது நன்மை பயக்கும். அளவுக்கு மீறினால், அந்த உணவு உடலை ஜீரணிக்கும்.

சமநிலை தாக்கங்கள்: கருவமைப்பு, எண்ணம், செய்கை, கோள்களின் சஞ்சாரத்தில் அமையும் நிலை, சந்தர்ப்ப மோதல் ஆகிய காரணங்களால் உடலில் இரசாயன வேறுபாடுகள் உண்டாகின்றன. இத்தகைய வேறுபாடுகளால் உடலிலுள்ள அணு மூலகங்கள் அதற்கு ஏற்ப விரைவில் வேறுபடும். அதன் பயனாக உடலில் சுழன்றோடிக் கொண்டிருக்கும் காந்தம், மின்சாரம், இரத்தம், காற்று ஆகிய நால்வகையும் அவற்றின் விரைவில் ஏற்றத்தாழ்வுகளைப் பெறும்.  விளைவாக ஒவ்வொரு அவயங்களூடேயும் ஊடுருவிச் செல்லும் அவற்றின் ஓட்டத்தில் தடையும் உண்டாகும். இந்தத் தடை நோயாக உணரப்படுகிறது. எந்த அவயத்தில் எந்த அளவு எந்தச் சக்தியின் ஓட்டத்தில் தடைப்படுகிறதோ அதற்கு ஏற்ப நோயின் வலுவும், பெயரும், அதற்குக் காலமும் நிர்ணயிக்கப்பெறுகின்றன.

மரு உந்து சக்தி: நோய்களை நீக்கிக் கொள்ளும் சக்தி இயற்கையாக உடலில் அமைந்துள்ளது.ஒத்த முறையில் பத்தியம் காத்து ஓய்வும் எடுத்துக்கொண்டால் நோய்கள் மிகவும் விரைவாகத் தீர்ந்துவிடும். நோய் கடினமாக இருந்தால் தக்க மருந்து வகைகளை உபயோகிக்கலாம்.

ஆர்வமும் மாற்றமும்: நோயற்ற உடலில்தான் அறிவும் திறன்பட இயங்கும். இயற்கை இன்பங்களைத் துய்க்க இயலும். எனவே ஒவ்வொருவரும் நோயுற்று வாழ வழிகண்டு நின்று ஒழுகி வாழவேண்டும்.

அகத்தாய்வு: மனத்தூய்மை, ஒழுங்கான உணவு, அளவான உழைப்பு இவற்றுடன் கூடிய வாழ்க்கை, நோய்கள் இல்லா உடல் நலத்தோடு இருக்க உதவும். பொறாமை, சினம், வஞ்சம், கவலை, காம எண்ணங்கள் இவை உடல் காந்த சக்தியினை அளவுக்கு மீறி அழித்து விடும். தவத்தாலும் ஆராய்ச்சியாலும் இந்த உணர்ச்சி நிலைகளை மாற்றி விடலாம். உணர்ந்தோரை அண்டி முயலுங்கள். வெற்றி நிச்சயம்.

தவிர்க்க வேண்டியவை: உணவு உண்ட உடனே ஓட்டம், சைக்கிள் சவாரி, கடினமான வேலை, ஆண் பெண் உடலினைப்பு இவை கூடாது. அடுத்தடுத்து இச்செயல்களில் ஈடுபடுவோருக்கு வயிற்றுப்புண் உண்டாகிவிடும். அது குன்மம் (Peptic Ulcer) நோயாக வழங்கப் பெறுகின்றது. 

தூய்மை பெறல்: உடலிலிருந்து கழிவாகி வெளியேறும் எந்தப் பொருளும் உடலின் மீது தங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவை உடனே கிருமிகளாக மாறும் வாய்ப்பு இருக்கின்றது. ஒரு நாளைக்கு ஒரு முறையாகிலும் வெந்த நீரிலே தண்ணீரிலோ குளிக்க வேண்டியது அவசியம். மலபந்தம் (Constipation) அஜீரணம் இவை ஏற்படாமல் பாதுகாப்பது உடல் நலத்தைப் பேணும் வழிகளில் மிக முக்கியமானது.

தன்னில் அக்கறை: எந்தக் காரணத்தைக் கொண்டும் பிறர் அணியும் செருப்பு, உடுத்தும் துணி, படுக்கும் பாய் இவற்றை மற்றவர் உபயோகிக்கக் கூடாது. தவிர்க்க முடியாத சமயத்தில் பிறர் பாயின் மீது துணி விரித்துப் படுப்பது நல்லது. மக்கள் கூட்டமாக கூடும் இடங்களில் மூன்று அடிக்கு ஒருவர் மேல் நெருங்கி இருக்கக் கூடாது. மூச்சு விடும்போது அவற்றில் வெளிவரும் சத்துக்கள் மிகவும் வேகமானவை. இருவர் மூச்சும் ஒன்று சேரும்போது உடனே கிருமிகளாக மாறும் தன்மையுடையன. அத்தகைய காலங்களில் கிருமி நாசினிப் புகையோ அல்லது சாம்பிராணிப் புகையோ இடைவிடாமல் பரப்பிக் கொண்டே இருக்கவேண்டும்.

வேதாத்திரி மகரிஷி அவர்களின், இந்த விளக்கத்தை, நன்கு அறிந்து, நினைவில் கொண்டு, அதன்படி, நம் வாழ்க்கைமுறையை அமைத்துக் கொண்டால். தனிமனிதனாகவும் இன்புறலாம். குடும்பமாகவும், சமூகமாகவும் இன்புறலாம். உலக மக்கள் யாவருமே இன்புறலாம். இனிமை நிறைந்த வாழ்வை, எல்லோரும் வாழவும் வழியுண்டாகும்.

வாழ்க வளமுடன்.

-