Will virtue and God realization give you a fulfilling life? Is that the right way?
உங்களுக்கு அறநெறியும், இறையுணர்வும் நிறைவான வாழ்வைத் தருமா? அது சரியான வழிதானா?
சித்தர்களின் வரிசையில், தலைமையாக குறிப்பிடப்படுகிற, சித்தர் பெரும் மகான், திருமூலர், தன்னுடைய ‘திருமந்திரம்’ நூல் வழியாக, ‘வாழ்கின்ற ஒரு மனிதனுக்கு, தவமும், அறமும் துணையாகும். அந்த இரு துணைகள் கொண்டுதான், நீண்ட பெரும் பிறவித்தொடரை கடந்து, முழுமை செய்திட முடியும்’ என்கிறார். ஆனால், இதையெல்லாம் ‘மனித வாழ்வியல் உண்மை தத்துவம்’ என்று அறியாமல், பக்தி வழிபாடு கோட்பாடு என்று பெரும்பாலோர், ஒதுக்கி வைத்தும், புறந்தள்ளியும் விட்டார்கள். ஆனால், உண்மை நிலைத்து நிற்பதால். இத்தகைய, மனித வாழ்வுக்கான, அக்கறையான தத்துவங்களும், கருத்துக்களும் நிலைத்து நின்று, விருப்புவோருக்கு உதவுகின்றன. சித்தர்கள், தங்களுடைய வாழ்க்கை முழுவதுமே, ஈகை என்ற உயர்ந்த நோக்கத்தைக் கொண்டவர்கள். வாழ்வில் துன்பம் ஏற்று திசைமாறும் மனிதர்களுக்கு, அன்பும் கருணையுமாக இருந்து, வழி காட்டுபவர்கள். அந்த வழியில்தான், ஆசான் வேதாத்திரி மகரிஷி அவர்களும் வந்திருக்கிறார்.
வேதாத்திரி மகரிஷி அவர்களே தரும், உண்மை விளக்கத்தை, இங்கே காணலாம். மனித இன வாழ்வுக்கு ‘இறையுணர்வும் அறநெறியும்’ சரியான வழிகாட்டுதல்கள் ஆகும். இறைநிலை பற்றிய அறிவு என்பது ஒரு மாபெரும் மறைபொருள் விளக்கமாகும்.
இது ஒருவர் தன் அகத்தவத்தின் (Simplified Kundalini Yoga - SKY) மூலம் மனச் சுழல் விரைவைக் (Mind Frequency) குறைத்து அமைதி என்னும் மனநிலைக்கு வந்து, அந்த நிலையில் சிந்தித்து இறையுணர்வு பெற வேண்டும்.
சாதாரணமாக வாய் மொழியின் மூலமாகவோ, மந்திரங்கள் மூலமாகவோ, சடங்குகள் மூலமாகவோ, புத்தகங்கள் மூலமாகவோ இறைநிலையை உண்மையாக உணர முடியாது. ‘இறைநிலை உணர்வு ஏற்படவில்லை என்றால் ஒரு மனிதனுக்கு அறநெறி வாழ்வும் அமையாது’.
பல காரணங்களால் இக்காலத்தில் இறையுணர்வு என்ற அறிவின் முழுமைப்பேறும் (Perfection), அறநெறி என்ற சீரமைந்த வாழ்வும் நிலைகுலைந்து போயிருக்கின்றன. இதன் காரணமாகவே இன்று நாம் மனித குல வாழ்வில் காணுகின்ற எல்லா வகையான குழப்பங்களும், துன்பங்களும் நேர்ந்துள்ளன. அறிவின் சிந்தனையாற்றல் செயல்படாததனாலும், பழக்கத்தினாலும் தொடர்ந்து வருகின்ற செயல்கள் பலப்பல.
களைகளை அகற்றுவது போன்றே இவற்றையும் அகற்றி விட வேண்டியது மனித இன வாழ்வுக்கும், வளத்திற்கும் நலமளிக்கும். விவசாயத்தில் பயிரை வளரவிடாது தடுக்கின்ற களைகளை போன்ற பல செயல்கள் உருவாகி சமுதாயத்தில் மண்டிக்கிடக்கின்றன.
இறையுணர்வு பெற்று, அறம் ஆற்றி, வாழுகின்ற ஆன்மீக நெறியில் மனிதன் வாழ்ந்தால் - சமுதாயத்தில் ஏழ்மை என்பது இருக்காது. பொய், கொலை, களவு, சூது, விபச்சாரம் என்னும் ஐந்து வகையான பழிச் செயல்களும் இருக்காது. அறிவின் குறைபாட்டினால் தனக்கும், பிறருக்கும் துன்பங்களை விளைவிக்கின்ற குற்றங்களும் சமுதாயத்தில் நிலவா.
எனவே வயது வந்த அனைவரும் முறையாக "குண்டலினி யோகம்" (Simplified Kundalini Yoga) பயின்று இறையுணர்வு பெற வேண்டும். வாழ்வில் அறநெறியையும், இறையுணர்வையும் பின்பற்றி வாழ வேண்டும். விளைவறிந்த விழிப்போடு தனக்கும் பிறர்க்கும் துன்பம் வராமல் காக்கும் செயல் முறையே அறமாகும்.தனக்கும், பிறர்க்கும், நன்மை தரும் செயலின் விளைவாக இறைநிலையை உணரும் வழியே சிறந்த இறையுணர்வு ஆகும்.
இறைவனை வணங்குவதைவிட, இறைநிலையைப் பற்றி சிந்திப்பதே மேல். அறிவின் மதிப்பு குறையாமல் உயிர் போனாலும் சரி அதை ஏற்றுக்கொள்வோம். அறிவு கெட்டு உயிர் நீடித்து பயனில்லையென்பது அறிஞர் கண்ட தெளிவு. இவ்வாறாக நமக்கு வேதாத்திரி மகரிஷி அவர்கள் விளக்கம் தருகிறார். இந்த உண்மைகளை கவிதை வழியாகவும் தருகிறார்.
இறையுணர்வும் அறநெறியும் நிறைவான வாழ்வைத் தரும், என்ற தலைப்பில்
இறையுணர்ந்து, அறம்ஆற்றி, எல்லாரும் வாழ்ந்தால்,
ஏழ்மைஏது? பஞ்சமகா பாபங்கள் ஏது?
குறையறிவால் எழுகின்ற குற்றங்கள் ஏது?
கோயில்கள் தவம்பயில, தத்துவங்கள் கற்க.
முறையாகத் திருந்தியநற் கலாசாலை களாம்.
மொழிநாடு, பொருள்துறையில் பிணக்குபோர் ஏது?
சிறைச்சாலை விலங்கினங் கட்குக்கூட வேண்டாம்!
சிந்தனையும், சிக்கனமும், சீர்திருத்தம் ஏற்போம்.
வாழ்க வளமுடன்.
-