Do you want to understand karma in a modern, scientific way? What is the way to do that?
உங்களுக்கு கர்மா என்பதை நவீனமாக, விஞ்ஞான விளக்கமாக புரிந்து கொள்ள விருப்பமா? அதற்கான வழி என்ன?
கர்மா என்ற வினையை முதலில் புரிந்து கொள்வது அவசியம். கர்மா என்பது குறித்து, உதாசீனம் செய்வதற்கும் முன்பும், ஐயோ என்று பயப்படுவதற்கு முன்பும், கர்மா எப்படி ஏற்படுகிறது என்பதை தெரிந்து கொள்வதும் அவசியம். ஒரு உதாரணமாக, இக்கால கம்ப்யூட்டர் (கணினி) மொபைல் (கைபேசி) வழியாக, இணையத்தில் நிறைய செய்திகள், படங்கள், சினிமா, பாடல், இசை, நூல்கள் எல்லாம் பார்க்கிறீர்கள். உங்கள் நண்பர்களுக்கும், பிரியமானவர்களுக்கும் ஏதேனும் செய்திகள் அனுப்புகிறீர்கள். அவர்களும் உங்களுக்கு அனுப்புகிறார்கள். இக்கால இளவட்டங்கள் போல சில கெட்ட சமாச்சாரங்களும் கூட இருக்கலாம் தானே?
இப்போது இந்த, அனுப்பியதும், பெறுவதும் ரகசியமாக இருக்கும். நீங்களும், நீங்கள் யாருக்கு அனுப்பினீர்களோ அவர்கள் மட்டுமே பார்க்க முடியும். எனினும், இந்த நடவடிக்கை எல்லாமே, பதிவும் ஆகும். உங்களவிலும், அவர் அளவிலும் அதை அழித்துவிடலாம். ஆனால், கணினி, கைபேசி இவற்றின் மூலத்தில், நீங்கள் கைவைக்க முடியாது. அழிக்க முடியாது. ஒரு சாஃப்ட்வேர் என்ஜீனியர், ஒரு நிமிடத்தில், உங்களுக்கு இடையே என்ன நிகழ்ந்தது? என்ன பரிமாறிக்கொண்டீர்கள்? என்று அறியமுடியும் அல்லவா? முடியாது என்கிறீர்களா?
இந்த நடவடிக்கைகள் நல்லது, நேர்மையானது, உபயோகமானது என்றால் ஒருபிரச்சனையும் எழப்போவது இல்லை. யாரும் உங்களை குறை சொல்லவோ, திருத்தவோ, தண்டிக்கவோ, சிறைபிடிக்கவோ போவதில்லை. ஆனால் எல்லாமே தவறு, அடுத்தவரை கெடுப்பது, பிரச்சனைக்குரியது, ஆபாசமானது, சட்டத்திற்கு புறம்பானது என்றால், எல்லாமே ஆரம்பமாகிவிடும் அல்லவா? இதை நான் செய்யவே இல்லை என்று உங்களால் மறுக்கவும் வழி உண்டா? யாரோ செய்தார்கள் என்று கடந்துவிட முடியுமா?
இந்த வழியில், ஓர் உண்மை உங்களுக்கு புரியவரும். செயலை செய்தது நீங்கள். அதையெல்லாம் பதிந்தது யார்? சாஃப்ட்வேர் என்பீர்கள். ஒரு சாஃப்வேர் உங்கள் நடவடிக்கையை பதிந்து வைக்கிறது என்றால், இந்த இயற்கை, உங்கள் நடவடிக்கையை பதிந்து வைத்துகொள்ளாது என்கிறீர்களா? அதற்கு அந்த திறமை இல்லை என்று எடைபோடுகிறீர்களா? இயற்கையை, இதையெல்லாம் செய்யத் தெரியாத முட்டாள் என்கிறீர்களா?
உங்களுக்கு இப்போது வயது என்ன? என்று எனக்குத் தெரியாது. ஆனால், மூன்று வயதுக்கு முன் நீங்கள் எங்கே இருந்தீர்கள்? எப்படி இருந்தீர்கள்? நினைவிருக்கிறதா? பிறந்ததில் இருந்து, கிட்டதட்ட ஆயிரம் நாட்கள் உங்களை, வழி நடத்தியது யார்? நீங்களே தானா? இந்த கேள்விக்கு விடை இருக்கிறதா?
அந்த ஆயிரம் நாட்களும், அதற்குப்பிறகு, இன்றுவரை நீங்கள் செய்துவந்தது, உங்களுக்கு நினைவில் இல்லாவிட்டாலும், பதிவு என்பது இருக்கும்தானே? இதை நீங்கள் மறுக்கமுடியுமா? உங்கள் ஹார்ட் டிஸ்கில் அழித்துவிடலாம். ஆனால் இணையம் வழியான, நெட்வொர்க் வழியான சர்வர் என்ற சோர்ஸ் டிஸ்கில் இருக்கும் அல்லவா? அதுதான் கர்மா என்ற வினை ஆகும். இது பதிவுதான். நல்லதை அப்படியே விட்டுவிடலாம். கெட்டதை, தீய விளைவு தந்ததை, திருத்த வேண்டிய கட்டாயம், ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளது.
அப்படியானால், உங்கள் கர்ம வினை மட்டும்தான் இருக்கிறாதா? என்ற கேள்வி எழுந்தால், இல்லை. நீங்கள் தனித்த ஒரு நபர் அல்ல. உங்களை உருவாக்க, தாயும் தந்தையும் துணையாக இருந்தார்கள். அவர்களுக்கு அவர்களின் தாயும், தந்தையும், இப்படி ஒன்று இரண்டாக, இரண்டு நான்காக அடுக்குகளாக போய்க்கொண்டே இருக்கும். இதில், ஏழு தலைமுறை என்று எடுத்துக் கொண்டால், அத்தனையும், உங்களுக்குள்ளாக இருக்கும். ஏற்கனவே பார்த்த உண்மையில், உங்கள் மூன்றுவயதிற்கு முன்னால், உங்கள் பசி, தூக்கம், எழுதல், இயற்கை உபாதைகள் இதையெல்லாம், இயற்கை கவனித்தது. அதனோடு உங்கள் நடவடிக்கைகள், ஏதோ ஒரு பதிவின் வழியாகவே நிகழ்ந்தது. ஒரு களிமன் பானையாக மாற்றம் பெறுவது, பானையால் அல்ல. மண்ணால் அல்ல. அந்த வடிவத்தை தரும் மண் கலைஞனால் தானே? அவனும் அந்த சக்கரங்களை சுழற்றி, நீர் ஊற்றி குழைத்து, வழித்து உருவாக்குகிறான். இப்படி உங்களுக்குள்ளாக நீங்கள் இல்லாமலேயே எல்லாம் நிகழ்ந்தது தானே? அந்த நிகழ்வுகளின், செயல்களின், வெளிப்பாடுகளின் பதிவுகள்தான் கர்மா. அதை தமிழில் வினை என்று சொல்லுகிறோம்.
இந்த வினைகள் மூன்று பிரிவுகள் ஆகும். சஞ்சிதம், பிராரப்தம், ஆகாமியம் ஆகியன ஆகும். சித்தர்கள் சஞ்சிதம் என்பதை பழவினை என்றும், பிராரப்தம், ஆகாமியம் இரண்டையும் சேர்த்தே புதுவினை என்றும் சொல்லுகிறார்கள். சஞ்சிதம் என்ற பழவினை, நாம் அறியாதது, நமக்குள்ளாக இருப்பது. பிராரப்தம், ஆகாமியம் என்ற புதுவினை, நாம் பிறந்தது முதல் இன்றுவரை நாமே நமக்குள் சேர்த்துக் கொண்டது.
இந்த கர்மா என்ற வினை தீர்க்கவே பிறப்பெடுத்தோம். ஆனால், அதை முற்றாக மறந்துவிட்டு, உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம் தாய் தந்தைக்கும் தெரியவில்லை. நமக்கும் தெரியவில்லை. நம் பிள்ளைகளுக்கும் தெரியப்படுத்தவில்லை. அவர்களுடை பிள்ளைகளுக்கும் தெரியப்போவதில்லை.
சரி, இந்த கர்மா என்ற வினை தீர்க்கப்பட்டால் என்னய்யா ஆகும்? இதை வார்த்தைகளால், உங்களுக்கு புரியவைத்திட முடியாது. அதை நீங்கள் உண்வாக பெறலாம். ஆம் முற்றிலும் விடுதலை உணர்வாக, உலகில் வாழ்ந்து மகிழலாம். நிறைவாக, வாழ்நாள் முழுவதும் என்பது உறுதி.
வாழ்க வளமுடன்.