If everything has already been provided, is it okay to ask for it?
எல்லாம் ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கிறது என்றால், கேட்டுப் பெறலாம் என்பது சரியா?
கேள்வி
ஞானமும் வாழ்வும் என்ற நூல் 3வது பாகம் 4வது பாராவில் மனிதன் தெய்வத்தை வேண்டிப் பெறவேண்டியது ஒன்றுமே இல்லை, அவனுக்கு வேண்டிய அனைத்தும் பிறப்பிலேயே இணைக்கப்பெற்று உள்ளன என்று ஐயா முற்பகுதியில் கூறியிருக்கிறீர்கள்.
பிறகு 80வது பக்கத்தில் சங்கற்பங்கள் ஓதுவது சிறந்த பயனளிக்கும் என்று சொல்லியுள்ளீர்கள். இதன் உட் பொருள் விளக்கவும். பயன் சங்கற்பத்தால் எழுவது மறு பிறவிக்கா அல்லது நிகழ்காலத்திற்கு ஒக்குமா?
பதில்
பாமர மக்களின் தத்துவஞானியும், அருட்தந்தையுமான வேதாத்திரி மகரிஷி அவர்கள், இந்த கேள்விக்கான விளக்கம் அளிக்கிறார்.
‘எல்லா உயிர்களுக்கும் தேவையான அனைத்தும் பிறப் போடு இணைக்கப் பெற்றிருக்கின்றது உண்மை. இது இயற்கையின் ஒழுங்கமைப்பு. எந்த செயலுக்கும் விளைவு உண்டு செயலிலிருந்து விளைவைப் பிரிக்க முடியாத இணைப்பும் இயற்கையின் ஒழுங்கமைப்பே.
எனவே இனிய வாழ்விற்கு வேண்டியவற்றை மாத்திரம் முயற்சியால் அடைய எண்ணத்தில் வலுவேற்றிக்கொள்வது சிறந்தது.
மனிதன் நிலை பிறழாதிருக்கவும், முயற்சியை முறைப்படுத்தவும், செயல் பிறழாது காக்கவும் இம்முறை மிகவும் அவசியம். எச் செயலுக்கும் மூலம் எண்ணமே ஆகையால் எண்ணத்தில் உறுதி ஏற்படுத்திக் கொள்வதே சங்கற்பம் ஆகும்.
இயற்கையின் ஒழுங்கமைப்புப்படி மழை பெய்கிறது. அணைகட்டி, குளம், ஏரி, வெட்டி நீர் தேக்கி பயன் காண்கிறோம். இயற்கையின் ஒழுங்கமைப்பு இங்கு ‘விதி’ யாக அமைகிறது. முயற்சி ‘மதி’ யாகிறது, தெய்வச் செயலாகிய விதியை உணர்ந்து கொண்டால், முயற்சியின் ஒழுங்கமைப்பில் தான் வாழ்வு சிறப்படையும் என்ற உண்மை புலனாகும்.
அவ்வொழுங்கமைப்பிற்காக மனதிலே உறுதி பெறவேண்டும். எனவே சங்கற்பம் மனிதனுக்கு மிக்க பயன்தருகின்றது. உயர்ந்த நோக்கத்தில் வகுத்து உருப்போடப்படும் சங்கற்பங்கள், பொருள் துறைக்கும் நல்லது; அருள் துறைக்கும் நல்லது. இம்மைக்கும் நல்லது; மறுமைக்கும் நல்லது.’
வாழ்க வளமுடன்.
-