How to solve the problem of life and get peace of mind? What is the solution and the way?
வாழ்க்கைச் சிக்கலை தீர்த்து, மன அமைதியை பெறுவது எப்படி? தீர்வும் வழியும் என்ன?
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, சிக்கல் மிகுந்த வாழ்க்கையில் இருக்கிறேன். ஒவ்வொரு நாளும் நரக வேதனை என்பது போல உள்ளது. மனமும் அமைதியில் இல்லை. இதற்கு வழி என்ன? இறைவழிபாடுகளிலும் கவனமில்லை, அதில் மாற்றமும் நிகழவில்லை. என் சிக்கல் தீர வழி என்ன? உண்மை விளக்கங்களை தருக.
பதில்:
உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும், வாழ்க்கை என்பது இனிமையும், அமைதியும் நிறைந்துதான் என்பதில் ஐயமில்லை. இயற்கையின் பரிணாம எழுச்சியில், வந்த முழுமையாக, தன் மூலமான இயற்கையையே, முழுதாக அறிந்து கொள்ளும்படியான, ஆறாம் அறிவின் நிலை பெற்றவன், இந்த மனிதன். அது உண்மைதானே? எங்கேயோ ஒர் அணுவாக தோன்றி, முழு மனிதனாக வந்து நின்ற பயணம், நிறைவு பெறுவதற்கு பதிலாக, சிக்கிக்கொண்டு தவிக்கிறது. எத்தனையோ ஞானிகளும், மகான்களும், மெய்யுணர்வாளர்களும், பல்லாண்டு காலமாக விளக்கம் அளித்தும் கூட, யாரோ ஒரு சிலர்தான், அந்த மாற்றத்தை விருப்புகிறார்கள். அந்த தன்னையறியும் பாதையில் பயணித்து நிறைவடைகிறார்கள்.
இதில் விருப்பமின்றி, மாற்றம் ஏற்காத, ஒதுக்கித்தள்ளும் மனிதர்கள், வழக்கமான வாழ்வில், இருக்கும் சிக்கலோடு, இன்னும் பல சிக்கல்களை உருவாக்கிக் கொண்டு தவிக்கிறார்கள். அதிலிருந்து விடுபட போராடுகிறார்கள். யாரேனும் உதவ மாட்டார்களா? என்று நினைக்கிறார்கள். ஏற்கனவே பலர், பலவிதமாக எடுத்துச் சொல்லியும், அதை இவர்கள் ஏற்கவில்லை என்பதை மறந்துவிடுகிறார்கள்.
இவர்களை பொறுத்தவரை, வாழ்க்கைச் சிக்கல்கள், தானாக வந்து, எங்களை ஆட்கொண்டு விட்டது. எப்படி ஒரு மலைப்பாம்பு தன் இரையை சுற்று வளைத்து, நெருக்கி, நசுக்குகிறதோ, அதுபோலவே எங்களையும், எங்கள் வாழ்க்கையையும் நெருக்கி, நசுக்குகிறது என்பார்கள். ஆனால் உண்மை என்ன? இந்த சிக்கல்களுக்கு வழியும் என்ன? இந்த கேள்விகளுக்கு, பாமர மக்களின் தத்துவ ஞானி, வேதாத்திரி மகரிஷி அவர்கள், தரும் விளக்கத்தை இங்கே தருகிறேன். இதோ.
‘வாழ்க்கை என்பது சிக்கல் நிறைந்த மனப்போராட்டமாகும். உயிரும் உடலும் சேர்ந்ததே ஒரு சிக்கல்தானே. அதிலிருந்து உருவாகும் சிக்கல்களே மற்ற எல்லாச் சிக்கல்களுக்கும் காரணம். சில சிக்கலை விரைவாகத் தீர்த்துவிட வேண்டி உணர்ச்சி வயப்பட்டுச் செயலாற்றினால் பெரும்பாலும் அச்சிக்கல் பெருகிவிடும். சிக்கல் இல்லாத வாழ்வு ஒரு மனிதனுக்கு அமையாது. அப்படி அமைந்தாலும் ஏதேனும் ஒரு சிக்கலை உருவாக்கிக்கொண்டு தவிக்கும் வரையில் எந்த மனிதனும் சும்மாயிருக்கமாட்டான்.’
‘தன்னிலை அறிந்த உளவியல் நிபுணர்களே இதற்கு விதிவிலக்கு. நாமாகச் சிக்கல்களை உண்டு பண்ணிக்கொள்வதைத் தவிர்த்தால் வாழ்க்கையில் எதிர்கொண்டாக வேண்டிய சிக்கல்களின் எண்ணிக்கை குறையும்.’
‘சரி நம்மாலோ பிறராலோ உண்டாகிவிட்ட சிக்கல்களை என்ன செய்வது? சிக்கல்களை அவற்றின் நுட்பந்தெரிந்து அவிழ்க்கப் பழகிக்கொள்ள வேண்டும். இதையெல்லாம் நம் மனம்தான் செய்தாக வேண்டும்.
தகுந்த மனோ பயிற்சியின் மூலம் மனதின் தரத்தையும் மனதின் திறத்தையும் அதாவது மனதின் வளத்தை முதலில் உயர்த்திக் கொண்டாக வேண்டும். தன்நிலை அறிந்து, இறைநிலை உணர்ந்து, அந்தத் தெளிவோடு ஒழுக்கம், கடமை, ஈகை என்னும் அறநெறி காத்து வாழும் ஒரு தேர்ந்த சிந்தனை ஆற்றல் கொண்ட மனவளக்கலைஞனுக்கு தேர்ந்த குண்டலினியோகிக்கு கவலை என்பது எவ்விதத்தும் வர வாய்ப்பே இல்லை.’
வேதாத்திரி மகரிஷியின் இந்த விளக்கம், போதுமானதாக இருக்கும் என்று, நம்புகிறேன். இத்தகைய மாற்றத்தை, இன்றே, இப்பொழுதே தொடருங்கள். நிறைவு பெறுங்கள்.
வாழ்க வளமுடன்.
-