Home » yoga » Is God man Correct? What is the truth on it? What is the connection between the God and Human?
மெஞ்ஞானத்தின் வழியாக, சித்தர்கள், ஞானிகள், மகான்கள், இறை என்ற மெய்ப்பொருள் உண்மையை அறிந்து உணர்ந்தார்கள். அந்த விளக்கத்தை எளிதில் புரிந்துகொள்ள முடியாத பாமர மக்களுக்கு, பக்தி வழியாக, கருத்தாக வடிவமைத்தார்கள். விருப்பமுள்ளோர் கற்றுத்தேர யோகம் என்ற மனதின் வழியாக உண்மையறியும் பயிற்சிகளையும் கொடுத்தார்கள். ஒரு மனிதனின் ‘பிறவி நோக்கமும், கடமையும், நான் யார்? என்ற உண்மை அறிதலே’ என்பதையும் அறிவுறுத்தினார்கள். அந்த வகையில்தான், அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் என்று சொன்னார்கள். விஞ்ஞானமும், எல்லாம் அணுக்களால் ஆனவை என்பதை, ஏற்றுக் கொள்கிறது. எனினும், பக்தி வழியிலான கருத்துக்களை, படைப்புத் தத்துவங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. இறை, தெய்வம் என்பதையும் நம்புவதில்லை. வழிபாடு, மந்திரம் இவற்றையும் புறந்தள்ளுகிறது. ஆனால், சில உண்மைகளுக்கு, விடை தெரியாமல் தடுமாறுகிறது என்பதும் உண்மையே.
உதாரணமாக, ‘உலகில் இருப்பதெல்லாம், காட்சியும், பொருளும் ஆனவை. அவை மாறிக்கொண்டே இருக்கும்’ என்று வேதாத்திரி மகரிஷி சொல்லுகிறார். அப்படியானால், மாறாதிருப்பது எது? என்ற கேள்விக்கு ‘என்றும், எப்போதும், எவ்விடத்திலும் இருப்பது எதுவோ அதுவே முதன்மையானது. அதை மெய்ப்பொருள் என்று உயர்வாக அழைக்கிறோம்’ என்கிறார். இதை வெட்டவெளி, சுத்தவெளி, இறை, தெய்வீகம், சிவம், ஈசன் என்று சித்தர்கள் அழைக்கிறார்கள். வேதாத்திரி மகரிஷி, இதனில் நான்கு தன்மைகள் கொண்டதாக குறிப்பிடுகின்றார். அவை, 1) பூரணம் என்ற வற்றாயிருப்பு 2) வேகம் என்ற பேராற்றல் 3) விவேகம் என்ற பேரறிவு 4) காலம் என்று வகைப்படுத்துகிறார். இந்த விளக்கத்தை, அந்த உண்மை நிலையை, யோகத்தின் வழியாக, அறிந்து உணர்ந்தவர் மட்டுமே, தெளிவு செய்திட முடியும். சும்மா, வெறுமனே, மேம்போக்காக சொல்லுவதும், புரிந்து கொள்வதும் உண்மை விளக்கம் ஆகாது. மேலும் அது குழப்பத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி.
இந்த உணர்தலை, ‘அதுவாகி நின்று அந்நிலையில் உணர்வதாகும்’ என்றும் வேதாத்திரி மகரிஷி தெளிவு செய்கிறார். மாணிக்க வாசகரும், திருவாசகத்தில் ‘அவன் அருளாலே அவன் தாள் வணங்கி’ என்ற ஒருமையை குறிப்பிடுகின்றார். இங்கே தான், அத்துவைதம் இரண்டற்ற நிலை தெளிவாகிறது. ஆனால், உலகவாழ்வில் மயங்கி, அன்றாடம் இன்பம் தேடி, துய்த்து வாழும், சராசரி மனிதனுக்கு இது புரியுமா? தெரியுமா? என்றால் மிகக் கடினமே. இந்த நிலையில்தான், அந்த சராசரி மனிதர்களிடம், சித்தர்கள் சொன்ன ‘நான் கடவுள்’ விளக்கம் தொக்கி நிற்கிறது. இந்த வார்த்தையை, சாராசரி மக்களுக்கு ஏற்றபடி, இன்னொருவிதமாக சொன்னால், ‘கடவுளே நானாகவும் இருக்கிறது’ என்பதே சரியாகும்.
மேற்கண்ட நீண்ட விளக்கத்திற்குப் பிறகு, வேதாத்திரி மகரிஷி தரும், விளக்கத்தையும் இங்கே அறிந்து கொள்வோம். இதோ,
மனிதன், அறிவின் உயர்வில் ஈசன்_ என்ற தலைப்பிலான ஞானக்களஞ்சிய கவிதையில்...
கடவுள் எனப் படுபவனே மனிதனானான்,
கருத்தியங்கி, கருத்தறிந்தான்;
கடவுளாய் அனைத்துமே கண்டு விட்டான்
காண்பவனே ஆதியந்த மாகி நின்றான்
கடவுள் நிலை யறிந்தவனே அறியாதோர்க்குக்
கருத்துணர்ந்த நூல்கள் பல எழுதிவைத்தான்
கடவுள் ரகசியமதனைவெளியாய்க் காட்டும்
கடமையே சிறந்ததெனக் கொண்டான் ஞானி.
இந்த கவிதையில் பொதிந்துள்ள, உண்மையையும், அவரே விளக்குகிறார். எந்தத் தத்துவத்தைக் கடவுள் என்று சொல்லுகிறோமோ, அதுவே அதன் பரிணாம உச்சத்தில் மனிதனாகவும் இருக்கிறது.
மனிதன் தன் அறிவை இயக்கி, அறிவை உயர்த்தி, அறிவையும் அறிந்து விட்டான். அவ்விளக்க நிலையில் தானே எல்லாமாய் இருக்கும் நிலையையும் கண்டுவிட்டான். காண்பவனே மூலமாகவும் முடிவாகவும் இருக்கும் ஏக நிலையைக் கண்டு கொண்டான்.
இந்த நிலையை அறிந்தவன் அறியாதவர்களுக்கு உணர்த்தும் சிறந்த நோக்கத்தோடும், பொதுவாக அறிவைப் பண்படுத்தும் பொருட்டும், ஆராயத் தூண்டும் பொருட்டும், பல நூல்களும் எழுதினான்.
மூலாதாரத் தத்துவத்தின் இரகசியத்தை அறியா நிலையில் – அறிய வேண்டிய நிலையில் – உள்ள யாவருக்கும் அறிய ஆவன செய்வதைத் தன்னிலை விளக்கம் பெற்ற ஞானிகள் தங்கள் கடமையாகக் கொண்டார்கள். தம்மையறிந்தவுடன் ஞானிகளின் கடமை தீர்ந்து விடவில்லை.
அரூபமான பேராதார சக்தி நிலையில், ஞாபகத்துடன் பிரபஞ்சத்தை நோக்குகிறான். கோடானு கோடி உருவங்களில், தானே பல்வேறு திறத்தவனாய், வேறுபாடாய், உயிரியக்கம் அறிவியக்கமாய், அறிவியக்க நிலையிலும் பல தரப்பட்டதாய், அறிவு நிலையாய், அறிவு நிலையிலும் பல்வேறு துறைகளாய், அளவினதாய், இருப்பதை உணருகிறான். இந்தவகையில், விளக்கமும் அளிக்கிறார்.
வாழ்க வளமுடன்.
-