உன்னை நெருக்கும் செய்தி
பொறுப்புத்துறப்பு
படிக்கும் யாரையும், இந்த கட்டுரை கட்டாயப்படுத்தவில்லை. சில ஆய்வுக்காக, விளக்கங்களுக்காக, ஆன்மீக தேடுதலுக்காக எழுதப்பட்டது. குறிப்பிட்ட எந்த செய்தித்தாள், பத்திரிக்கை, நிறுவனங்கள், வழங்குனர் நேராகவோ மறைமுகமாகவோ சார்ந்தது அல்ல. தவறுகளிருந்தால் மன்னிக்கவும்.
உலகம் சுருங்கிவிட்டது
உலகின் புதிய கண்டுபிடிப்புக்களையும், அது குறித்த வளர் சிந்தனைகளையும் நான், எங்கள் வீட்டில் உயபயோகப்படுத்திக் கொண்டிருந்த பொருட்களால் அறிவேன். ஆனாலும், அறிவியல் அறிஞர்களின் மகத்தான தொடர் கண்டுபிடிப்புக்களால் இந்த உலகம் எல்லைகளற்று சுருங்கிவிட்டது. இந்த கருத்து நான் 1985 ம் ஆண்டு, என் வகுப்பறையில், ஒரு ஆங்கில பாடத்தின் வழியாக தெரிந்துகொண்டேன். அதற்கு பிறகும் நிற்காத அறிவியல் முன்னேற்றம், இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இணையத்தால் ஒன்றுபட்ட உலகம், கையடக்கத்தில் சுருங்கி கைபேசியில் உள்ளது. ஆனால், என்னதான் இணைய சுதந்திரம் என்றாலும்கூட, அந்தந்த நாட்டுக்கான சர்வர்கள் (Worldwide web internet servers) மூலம், எல்லைகள் அமைந்துதான் இருக்கிறது.
தானியங்கி?!
இந்த சர்வர் எல்லைகள் சுதந்திரமானவை, மக்களுக்கானவை, அவர்களின் உரிமைகள் என்றாலும், அவை, அவ்வப்பொழுது கதவடைக்கும் அல்லது கதவை திறக்கும். அது அந்தந்த இணைய சேவை வழங்குனரைப் பொறுத்தது. சில நேரங்களில் இது காசுக்கும், கிளர்ச்சிக்கும், புரட்சிக்கும், தீர்வுக்கும், யுத்தத்திற்கும், உள்நாட்டு கலவரத்திற்கும் வேலை செய்யும். ஆனால் இது இதற்காக என்று யாருக்குமே தெரியாது. முக்கியமாக இணையத்துக்கு இயக்குனர் என்ற ஒருவர் இல்லவே இல்லை என்று சொல்லப்படுவதுண்டு.
காலையில் காஃபியும் செய்தியும்
சுடச்சுட என்று நாம் காலையில் குடிக்கும் காஃபியை மட்டுமல்ல, செய்திகளையும் சொல்லலாம். செய்தித்தாள் விற்பனையில் சுடச்சுட செய்திகள் என்றுதான் சொல்லப்படும். ஓவ்வொருநாளும் காலையில், செய்திகளை தாங்கி கடைவிரிக்கும் பத்திரிக்கைகள் நிறைய இருந்தன. இன்றைய இணையயுகத்தில் சில உலகளாவிய பெரும் செய்தித்தாள்கள் பரிதாபமாக, தன் கடைசி பதிப்பை தந்து ஓய்ந்துவிட்டன. வானொலியும், தொல்லைகாட்சிகளும் இருந்த நிலையிலும், உயிரோடு வலம் வந்த செய்தி பத்திரிக்கைகள், கைபேசி இணைய உலகத்தில் மூர்ச்சை ஆகிவிட்டன.
உலகில் என்ன நடந்திருக்கிறது என்ற ஆர்வமும், நேற்றிருந்தோர் இன்றில்லையே என்ற தலைவர்களின் கடைசி வாழ்க்கை நிகழ்வும், விளையாட்டின் வெற்றி தோல்வி நிலையும், பண மதிப்பின் தற்போதைய நிலையும், நாட்டின், அரசின் நிலைத்தன்மையும், எதிர்கட்சியின் சுட்டிக்காட்டுதலும் அறியவும், கல்வி கட்டுரைகள் படிக்கவும், வேலைவாய்ப்பு தேடவும், இயற்கை பேரழிவும், சமூக அவலங்களும், தீவிரவாதி, போராட்டங்கள், கிளர்ச்சியாளார்கள், குற்றங்கள், நோய் தன்மைகள், ராசி பலன்கள், ஆன்மீக செய்திகள் இப்படி இன்னும் பலப்பல விசயங்கள் குறித்து அறிந்து தெளிய செய்திகள் நமக்கு உதவுகிறது என்பது நன்றாக நமக்கு தெரிந்ததுதான். ஒவ்வொரு நாளும் செய்திகள் தெரியாமல் இருப்பது குற்றம் என்ற அளவில், பிறர் அதைபற்றி நம்மிடம் பேசும்பொழுது கூறியிருப்பார்கள் என்பது உண்மை.
NEWS
இந்த ஆங்கில வார்த்தையை அக்ரனிம் (Acronym) முறையில், வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு ஆகிய நான்கு திசைகளின் வழியாக பார்க்கும் பார்வையை, இந்த செய்திகள் வழங்குகிறது என்பது பொதுவான கருத்து. ஆனால் திசையும், பார்வையும் என்று எடுத்துக்கொண்டால், பத்துவகையானவை உள்ளன. அந்த கூடுதல் ஆறு வகை என்ன? வட கிழக்கு, வட மேற்கு, தென் கிழக்கு, தென் மேற்கு, மேலே, கீழே என்பன ஆகும்.
ஓசிபேப்பர்
அந்தக்காலத்தில் ஓசிபேப்பர் ஒரு மிகப்பெரும் பிரச்சனையாக இருந்துவந்தது. காசு கொடுத்து வாங்குபவர் ஒருவர், படிப்பவர்கள் பலபேர். ஒரு செய்தித்தாள் வரிசைப்படி படிக்க வேண்டும் என்பது பலரின் விருப்பம். ஆனால் இந்த ஓசி பேப்பர் ஆசாமிகள், ஒரு தாளை பிரித்து தாருங்கள் என்பார், அவர் படித்துவிட்டு, இன்னொருவருக்கு பகிர்ந்து விடுவார். பேப்பர் வாங்கியவருக்கு அந்த தாள் மீண்டும் வருமா என்பது கேள்விக்குறி!
இதனால், நிறைய ஒரிஜினலாக பேப்பர் வாங்கியவர், ஒரு நூல் கொண்டு தைத்து விடுவார். ஏனென்றால், பிரிந்த பேப்பர் தன்கைக்கு வராது என்பதும், வரிசை மாற்றினாலும் பிடிக்காது என்பதும் காரணம். வாங்கி படித்து, பக்கம் மாற்றி வைத்துக்கொடுத்தால், காசு கொடுத்து வாங்கியவருக்கு, கோபம் வரும். இதனாலேயே, தையல், பிரிக்கமுடியாது அப்படியே படித்துத்தான் தருவேன் என்பார். ஓசிபேப்பர் ஆசாமி விடமாட்டார். இவர் படிக்கும் பொழுதே, அவர் அங்கங்கே தலையை நுழைத்து தடங்கல் செய்து, ஆகமொத்தமாக இரண்டு பேரும் சரியாக படிக்கமாட்டார்கள்.
கொக்கி போடும் தலைப்பு
இந்த ஓசிபேப்பர் ஆசாமிகளையும், செய்தித்தாள் வாங்க வைத்த பெருமை, பத்திரிக்கை தலைப்பு செய்திகளுக்கு உண்டு. மத்திய மந்திரிக்கு சிறை? என்று ஒரு செய்தியை போட்டு, ஓசி பேப்பர் ஆசாமிகளை மாட்டவைத்து விடுவார்கள். வாங்கி படித்துப்பார்த்தால், செய்தியில், விசாரணை என்று, சிறை செல்ல நேரலாம் என்று ஒரு யூகம் மட்டுமே இருக்கும். சினிமா கிசு கிசு கொக்கிகள் அதிகம்.
ஆர்வத்தை முறைகேடாக்குதல்
இந்த செய்தித்தாள் படிக்கும் ஆர்வ பரம்பரையில் வந்த நாம், இக்காலத்திலும் செய்திகளில் ஆர்வமாக இருப்பது இயல்பானதுதான். ஆனால் காலமாற்றத்தில், செய்தி வழங்குனர்கள், மக்களின் இயல்பு வாழ்க்கையில் நடக்கும் செய்திகளைத் தருவதற்கு பதிலாக, செய்திகளை தந்து மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிப்புக்கு உள்ளாக்குகின்றனர். மறைமுகமாக, மனிதர்களின் மனங்களில் ஒரு கிளர்ச்சியை தூண்டி, அதன்மூலம் உணர்ச்சிகளை ஊக்குவித்து, தவறாகவும் எதிராகவும் செயல்பட தூண்டுகிறார்கள்.
சிலவகைகளில் தனக்குச் சாதகமான நாட்டிற்கும், தலைமைக்கும், தலைவருக்கும் ஆதரவாக மக்களை திரட்டி, தங்களின் எதிரிக்கு பலிகடா ஆக்குகின்றனர். இதற்கெல்லாம் ஆதாரம் எளிதில் சிக்குவதில்லை. இது, உடலில் சேர்ந்துவிட்ட மெதுவாக வேலைசெய்யும் விஷம் போலானது ஆகும். அவரவர் கையிலேயே இந்த செய்திகள் சேரும்வகையில் இருப்பதால், அவர்களுக்கும் வேலை எளிதாக ஆகிவிடுகிறது. இப்படியான செய்திகளை தடுப்பதிலும், உண்மை அறிவதிலும் எல்லோருமே சோர்ந்துவிடுகின்றனர்.
மக்களின் செய்திகள்
தனிப்பட்ட நபர்களும், இப்பொழுது யூடுயுப் காணொளி மூலமாக செய்திகள் வழங்கிறார்கள். கைபேசி வழி செய்திகள், காணொளிகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை. சில வேளைகளில், பெரும் நிறுவனங்கள் காட்டாத, அவர்களுக்கு கிடைக்காத செய்திகளை மிக எளிதாக, இந்த மக்களின் செய்திகள் தந்துவிடுகின்றன.
சமூக வளைத்தள தனி நபர் செய்திகளும், காணொளிகளும் விதிவிலக்கல்ல.
பேஸ்புக்கும், டிவீட்டரும் ஒரு நாட்டில், அம்மக்களின் கிளர்ச்சிக்கு உதவிசெய்வதை மறுக்கவும் முடியாது. ஆனாலும் இதிலும் பொய்யும் புரட்டும் கலந்திருக்கிறது, கட்டுக்கடங்காமல்.
உங்களை நெருக்கும் செய்திகள்
நாலாபக்கங்களிலும் வரும் செய்திகள், உங்கள் கழுத்தை அல்ல, உங்கள் மனதை, அறிவை, வாழ்க்கையை நெருக்குகின்றன. உன் கையில் எதிரி வேண்டுமா, கை பேசியில் செய்தி பார், உன் வரவேற்பறையில் எதிரி வேண்டுமா? உங்கள் வீட்டு தொல்லைகாட்சியை பார். சாவகாசமாக ஓய்வு நேரத்தில் எதிரி வேண்டுமா? செய்தித்தாள் படித்துப்பார்.
மனமும் நிம்மதியும்
ஒரு மனிதனுக்கு வாழ்வியல் பொக்கிசம், அவனின் மனம்தான். அது அமைதியாக இருந்தால், அவனுக்கு நிம்மதியும் கிடைக்கும். அவனின் மனம் அமைதியை தேடிச்செல்வதில் ஆர்வமாகத்தான் இருக்கிறது. ஆனால் பல வழிகளில் தோல்வியுறுகிறது.
உனக்கு உன் உன்னளவில் மனக்குழப்பங்கள் வேண்டுமா? உள்ளூர் செய்திகளை படி, கேள், பார்.
உனக்கு மாவட்ட அளவில் மனக்குழப்பங்கள் வேண்டுமா? மாவட்ட செய்திகளை படி, கேள், பார்.
உனக்கு மாநில அளவில் மனக்குழப்பங்கள் வேண்டுமா? மாநில செய்திகளை படி, கேள், பார்.
உனக்கு தேசம் அளவில் மனக்குழப்பங்கள் வேண்டுமா? தேசிய செய்திகளை படி, கேள், பார்.
உனக்கு உலக அளவில் மனக்குழப்பங்கள் வேண்டுமா? உலக செய்திகளை படி, கேள், பார்.
இப்படித்தான், இந்த செய்தி உலகம் நம்மோடு கலந்திருக்கிறது. இதில் ஆபாச செய்திகளும், போதைதரும் விளையாட்டு செய்திகளும் தனி.
செய்திகளை தேர்ந்தெடுங்கள்
அன்பர்களே, உங்களிடம் வந்து, மோதி, குவியும் செய்திகளை பிரித்தெடுங்கள். அதன் தலைப்புக்களில் மயங்காதீர்கள். உங்கள் மகத்தான ஓவ்வொரு நொடியையும், உங்கள் மனம் கெட பயன்படுத்தாதீர்கள். படித்தால், கேட்டால், பார்த்தால் என்ன ஆகிவிடப்போகிறது என்று இறங்கிவிடாதீர்கள். ஏற்கனவே நம் மனம் பலப்பல குப்பைகளில் சிக்கி தவிக்கிறது. இன்னும், இனிமேலும் குப்பைகள் வேண்டாம். விழிப்போடு இருங்கள், நிம்மதியோடு இருங்கள். அமைதியாக இருங்கள். வாழ்வியலை அனுபவியுங்கள்.
இயற்கையும், இரவு வானமும், தரும் செய்திகள் மகத்தானவை. அவைகளை படியுங்கள், கேளுங்கள், பாருங்கள். வாழ்க வளமுடன்.
------
Photos thanks to: Marjan Blan l Sierra Koder l Francisco Gonzalez l FreeVector l Google