November 2023 | CJ

November 2023

Who doesn't believe in God, can rise if he, she comes into yoga?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, என் நண்பருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை, அவர் யோகத்தில் வந்தால் உயரமுடியுமா?


பதில்:

யோகம் குறித்த ஒரு உண்மையை நீங்கள் புரிந்துகொள்வது வேண்டும். யோகம் என்பது உலகில் வாழும் எல்லா மக்களுக்கும், இனி வரப்போகிற தலைமுறை மனிதர்களுக்கும் பொதுவானது தான். இதில் மாற்றுக்கருத்தே இல்லை. கடவுள் நம்பிக்கை இல்லாதவர் எப்படியேனும் வேறேதோ ஒன்றின்மீதோ, இயற்கையின் மீதோ நம்பிக்கை வைத்திருக்கலாம். அப்படி நம்பிக்கை கொஞ்சமாவது இருந்தால் மட்டுமே, யோகம் என்பது என்ன? என்றாவது தெரிந்துகொள்ள ஆர்வம் பிறக்கும். பொதுவாகவே, உலகில் உள்ள யாருமே உடனடியாக இந்த யோகத்தில் ஆர்வமாக வந்து இணைந்து கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பது தவறு!

யோகத்தை நேரடியாக அணுகிட முடியாத எளிய மக்களுக்காகவேதான், யோகத்தில் உயர்ந்த முன்னோர்கள், பக்தியை உருவாக்கி அதன் வழியாக நன்மைகள் பெற்றிட வழி வகுத்தார்கள். அதையும் கூட கடவுள் (கட+உள்) என்ற வினைச்சொல்லாகவும் அமைத்தார்கள்.

ஒரு மனிதர் இப்பொழுது யோகத்தில் இணைந்துகொண்டு, தன்னை திருத்தி, தன் கர்ம வினைப்பதிவுகளின் களங்கம் நீக்கி, தன் வாழ்வில் பிறவி நிலையை உயர்த்திட நினைக்கிறார் என்றால் அதற்கு காரணம், அவருடைய முந்தைய தலைமுறையினர்களான, பெற்றோரோ, தாத்தா, பாட்டியோ, அதற்குமுன் இருந்தவர்களோ நினைத்திருக்கலாம். அந்த நினைப்பு வழிவழியாக வந்து, இவருக்கு உந்துதலை தந்திருக்கிறது என்பதுதான் அர்த்தம். இப்படியான ஒருவர், யாருடைய ஆலோசனையும் இன்றியே தானாக, யோகத்தில் இணைந்துவிடுவார்கள். இது உங்கள் வாழ்வில், உங்களுக்கே கூட நிகழ்ந்திருக்கலாம்.

அதுபோல, கடவுள் நம்பிக்கை இல்லாதவர், எது கடவுள் என்ற தேடுதலைக் கொண்டிருந்தால், யோகத்தில் இணைந்து உயரலாம். அதுவல்லாது கடவுளே இல்லை, கடவுளே பொய், அதற்கு ஈடாக இயற்கையை மதிப்பளிப்பதும், இயற்கையை வனங்குவதும்கூட முட்டாள்தனம் என்ற ரீதியில் இருப்பாரேயானால், யோகத்திற்கு அவராகவும் வரமாட்டார். நீங்கள் ஆலோசனை தந்தாலும் வரமாட்டார்.

மேலும் பக்தி என்பது யோகத்திற்கான முதல்படியும் ஆகும். பக்தி இல்லாமல் நேரடியாக யோகத்திற்கு வருவதும், அதை பின்பற்றுவதும் கடினமே!

வாழ்க வளமுடன்.

-

Why astrology prediction is available for Jupiter, Saturn and Rahu Ketu only?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.




கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, குரு கிரக பெயர்ச்சி, சனி கிரக பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி என்று மட்டுமே ஜோதிடர்கள் பலன் சொல்லுவது ஏன்?


பதில்:

ஜோதிடர்கள், உங்களுடைய ஜாதக கணிப்புப்படி எல்லா கிரக நிலைகளையும் ஆராய்ந்து, இப்போதுள்ள கோள் சார பெயர்ச்சி நிலைகளையும் கொண்டுதானே பலன் சொல்லுகிறார்கள். என்றாலும் பொதுவெளியில், ஜாதகம் கொண்டு சொல்லாமல் பொதுபலன் சொல்லும் பொழுது, ராசிகட்டங்கள் படி, குரு, சனி, ராகு, கேது கிரங்களின் பெயர்ச்சிகளை சொல்லுவார்கள். அப்படி இந்த நான்கு கிரங்களை மட்டும் மைப்படுத்திக் கொண்டு சொல்லுவதற்கும் சில காரணங்கள் உண்டுதான்.

ஏனென்றால், இவற்றின் நகர்வு கடந்து நீண்டகாலம் ஒரே வீட்டில் சஞ்சரிக்கும் தன்மை கொண்ட கிரகங்கள் ஆகும். உதாரணமாக சனி கிரகம், கிட்டத்தட்ட 2.5 ஆண்டுகள் ஒரு ராசி வீட்டில் தங்கிச்செல்லும். சில காலம், பின்னோக்கியும் நகர்ந்திடும். அதை வக்கிர நிலை என்று சொல்லுவார்கள். மேலும் சனி கிரகம் மிக மெதுவாக நகரும் கிரகமும் ஆகும். இதனால் எப்படிப் பார்த்தாலும் 3 ஆண்டுகள் என்று வைத்துக்கொள்ளலாம். அந்த மூன்று ஆண்டுகள் ஜாதகருக்கு என்னென்ன பலன்களை தரும் என்பது ஆராய்ச்சிக்குறியதுதானே?! எனவே சனி கிரகம் பட்டியலில் இருக்கிறது.

குரு கிரகம் அளவிலும், நன்மையான சக்தி அளிப்பதிலும் பெரியது. கிட்டதட்ட 1 ஆண்டுக்காலம் ஒரு ராசியில் தங்கி செயல்படும். இக்கிரகத்திற்கும் வக்கிர நிலை உண்டு. அதனால் குருவும் பட்டியலில் இருக்கிறது.

ராகு மற்றும் கேது நிழல் கிரகங்கள், கிட்டதட்ட 1.5 ஆண்டுகள் ஒரு ராசியில் தங்கி, அந்த ராசிக்குரிய கிரக பலன்களை தருவார்கள். இக்கிரங்களுக்கும் வக்கிர நிலை உண்டு. நம்மை வாழ்வில் வழி நடத்தும் கிரகங்களில், ராகு கேது கிரங்களே முக்கியமானவையாகும். இதனால் ராகுவும் கேதுவும் பட்டியலில் இருக்கிறது.

மற்றபடி சூரியன், செவ்வாய், சுக்கிரன் 1 மாதம் எடுத்துக்கொண்டு அடுத்தடுத்த ராசிகளுக்கு போய்விடுகிறது. புதன் கொஞ்சம் சீக்கிரமாகவே ஒவ்வொரு ராசிவீடாக போய்வரும். சந்திரன் 2.5 நாளுக்கு ஒருமுறை ஒவ்வொரு ராசிக்கட்டமாக நகர்ந்துவரும். இந்த சூரியன், செவ்வாய், சுக்கிரன், புதன், சந்திரன் ஆகியவையும் ஒரு ஜாதகருக்கு பாதிப்பை தருகிறது என்றாலும் கூட காலம் சிறியதாக இருப்பதால், உடனடியாக அது கடந்தும் விடுமே? அதனால் பொதுவாக சொல்லும் பொழுது தவிர்த்துவிடுகிறார்கள். இதுதான் காரணம்! 

மேலும் இத்தகைய பெரிய கிரகங்களின் அருகாமையும், தூரமும் கூட நம்மை பாதிக்கிறது என்று வேதாத்திரி மகரிஷி அவர்களும் சொல்லுகிறார்.

வாழ்க வளமுடன்.

Does this Vethathiriyam teach the good ways to earn money?!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பணம் சம்பாதிக்க நல்லவழிகளை சொல்லித்தருகிறதா இந்த வேதாத்திரியம்?!


பதில்:

நிச்சயமாகவே சொல்லித்தருகிறது! அது எப்படி என்று வரிசையாக பார்க்கலாம். முதலில் மனிதனின் உலக கடமைகளில் ஐந்தில் ஒன்றாக, சம்பாத்தியம் ( பணத்தை சம்பாதித்தல்) இருப்பதை, குருமகான் வேதாத்திரி மகரிஷி விளக்கிச் சொல்லுகிறார். அதனால் அதை விட்டுவிடவும் கூடாது என்று வலியுறுத்துகிறார். உடனே எதிர்கேள்வி கேட்பார்கள் ‘அப்படியானால் சம்பாதித்துக்கொண்டே இருக்கலாமா?” என்று. (எதிராளியை மடக்குவதற்க்குத்தான் அவர்களுக்கு எவ்வளவு ஆசையும் தன்முனைப்பும்!) இதற்கும் விளக்கம் தருகிறார் நம் மகரிஷி! இப்படியெல்லாம் கேட்பார்கள் என்று அவருக்குத் தெரியாதா என்ன?

‘போதும் என்ற நிலை வரை சம்பாதியுங்கள்’ என்கிறார். அதாவது என் வாழ்நாளுக்கு இவ்வளவு பணமும், பொருளும் போதும். இதில் நான் நிறைபெறுகிறேன். இதற்கு மேல் வரக்கூடிய என் சம்பாத்தியத்தை, இந்த சமூகத்திற்கு ஏதேனும் வழியில் திருப்பி அளிக்கிறேன் என்ற முடிவுக்கும் வர வேண்டும் என்றும் சொல்லுகிறார். சரி ஏன் சமுகத்திற்கு திருப்பி அளிக்கவேண்டும் என்றும் கேட்பீர்கள் தானே? அதற்கும் விடை உண்டு.

‘நீங்கள் பிறந்தது முதல் இன்றுவரை, பல்வேறு நிலைகளில், பல்வேறு வகைகளில் உணவு, பயன்படுத்திய பொருட்கள், துணிமணிகள், வாழ்க்கை பொருட்கள், தன்னலமற்ற சேவைகள் இப்படியாக எல்லாவற்றிலும் சமூகமக்களின் உதவியை, உழைப்பை மறைமுகமாகவோ, நேர்முகமாகவோ பெற்றிருக்கிறீர்கள்தானே? அதை நாம் மறந்துவிடலாமா? அதற்கு நாம் நம்மாலான உதவியை திருப்பித்தரவேண்டுமே’ என்று வலியுறுத்துகிறார்.

மேலும் பணம் சம்பாதிக்க 1) நேர்வழிகளை தேர்ந்தெடுக்கவேண்டும் 2) உங்கள் உழைப்பின் வழியாகவே அந்த பணம் கிடைக்க வேண்டும் 3) உங்களுக்கு பணம் கிடைப்பதின் வழியாக எவரும் மனதளவிலோ, உடலளவிலோ பாதிக்கப்படக் கூடாது 4) உங்களுக்கு திருப்தி அளிக்கும் நிலைவரை சம்பாதிக்கலாம் 5) உங்கள் வாழ்க்கைக்கு போதுமானது என்றபோது திருப்தியில் நிறைவு பெற வேண்டும் 6) நீங்கள் வாழும் சமூகத்திற்கு திருப்பியளிக்கவேண்டும்! என்பதான ஆறு வழிகளை வேதாத்திரியம் சொல்லித்தருகிறது! 

இன்னும் விளக்கமாக அறிந்துகொள்ள இந்த காணொளி உதவும்: இங்கே காண்க!

வாழ்க வளமுடன்.

If we join in yoga, I think money earning will be lost. Correct?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பணம் என்ற ஒன்றை வைத்துத்தானே வாழவேண்டியுள்ளது. யோகத்திற்கு வந்துவிட்டால் அதில் இழப்பு வந்துவிடுமே?!


பதில்:

உங்களுடைய புரிதலில் தவறு இருக்கிறது. இல்லையென்றால் யாரோ உங்களுக்கு தவறான தகவல்களை தந்திருக்கிறார்கள் என்றும் சொல்லலாம். முதலாவதாக யோகத்தையும், பணத்தையும் இணைத்து சொன்னது யார்? எதிர் எதிராக சொன்னதும் யார்? என்று தெரியவில்லை. ஆனால் பற்பல கதைகள் சொல்லி மக்களை, உங்களைப்போன்ற பலரை குழப்பி வைத்திருக்கிறார்கள் என்று சொல்லமுடியும்!

மனிதர்களாகிய நாம் ஆதிகாலத்தில் விலங்குகள் போல, வேட்டையாடி, உண்டு, உறங்கி வாழ்ந்து வந்தோம். அந்த வாழ்வில் தொடர்ச்சியில், பல்லாயிரம் ஆண்டுகள் அனுவமாக அறிவில் உயர்ந்து, ஒருவருக்கொருவர் பயண்பாடு கொள்ளவும், இன்னொருவருக்கு உதவவும் பண்டமாற்றும், பணமும் வந்து சேர்ந்தது. முக்கியமாக யாரும் யாரையும் ஏமாற்றி, சோம்பேறியாக வாழ்ந்திடக்கூடாது என்ற நிலையிலும், ஒரு வேலை அதற்கான கூலி என்ற முறையும் வந்துவிட்டது. நவீன கால மாற்றத்தில், வேலை, வியாபாரம், தொழில், நிறுவனம் என்று பலவாறாக உலகளவில் மாற்றம் வந்துவிட்டது. இத்திறமைகளை கற்றுக்கொடுக்க எண்ணற்ற கல்வி நிறுவனங்களும் உள்ளன. எனவே எல்லாவற்றிற்கும் பணம் முதன்மை என்பதில் ஐயமில்லை. அந்தப்பணத்தை சம்பாதிப்பது ஒவ்வொரு மனிதனின் கடமை என்பது உலகம் ஏற்றுக்கொண்ட உண்மை.

இங்கே யோகம் எப்படி பணத்திற்கு விரோதமாக போய்விட்டது என்று தெரியவில்லை. யோகத்திற்கு வந்துவிட்டால் ஏன் பணத்தை ஒதுக்கிடவேண்டும்? ஏன் பணத்தை வெறுக்கவேண்டும்? சம்பாத்தியத்தை விட்டுவிட வேண்டும்? அப்படி பணத்தை விட்டுவிட்டால், யோகத்தில் சென்றவர், உலகில் எப்படி உயிர் வாழ்வார்?! யார் உதவுவார்? ஏதேனும் காட்டுக்குச் சென்று பழம், காய்கறிகள் பறித்து உண்பாரா? வாழும் மக்களிடம் யாசகம் கேட்டு புசிப்பாரா? தன் தேவைகளை எப்படி நிறைவேற்றுவார்? யோகத்தில் வந்ததினால், இந்த உலகுக்கு அவர் அவசியமில்லாதவராக போய்விடுவாரா? இப்படியான எத்தனையோ கேள்விகளுக்கு விடை இருக்கிறதா? சரி, இதற்கு யோகமே தேவையில்லை என்ற முடிவுக்கும் நீங்கள் போய்விடுவீர்களா? இல்லைதானே?!

நன்றாக புரிந்து கொள்ளுங்கள். யோகம் என்பது வாழ்வியல் உண்மை நெறியாகும். அப்படியான யோகத்தையும் பணத்தையும் முடிச்சுபோட்டு, விரோதம் செய்யவேண்டாம். உங்கள் வழக்கமான வேலை, தொழில், வியாபாரம், நிறுவனம் நடத்தி பணத்தை சம்பாதியுங்கள். அதில் எந்த சுணக்கமும் வேண்டாம். நீங்கள் யோகத்தில் இருந்தபடி இதைச் செய்தால், உண்மையும், அளவும், நிறைவும் அமைந்திருக்கும். அதன் பலனாக உங்களை பலர் தேடிவருவதையும், அப்படி வருகின்ற எல்லோருக்கும் நிம்மதியும் கிடைப்பதை காண்பீர்கள். அதன்மாற்றமாக உங்களுக்கு வாழ்வில் அமைதியும் கிடைக்கும். முக்கியமாக இந்த உலகில் நாம் வாழும் வரை, சம்பாத்தியமும் அதன் நிறைவும் நமக்குத்தேவைதான்!

வாழ்க வளமுடன்.

What is the purpose of worship the Deepa Aradhana?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, நெருப்பை தீபமாக வணங்குவதால் என்ன நன்மை வந்துவிடப்போகிறது என்று விளக்குவீர்களா?


பதில்:

உலகில் உள்ள பெரும்பாலான மக்களிடம் நெருப்பை வணங்கும் பழக்கம், உளப்பூர்வமாக இருக்கிறது. காரணம் ஆதிகாலத்தில் நம் முன்னோர்கள் அப்படி வணங்கிவந்த பழக்கம்தான். தற்கால நவீன விஞ்ஞான காலத்தில், ‘இதையெல்லாம் வணங்குவதா? என்ன ஒரு மூட நம்பிக்கை’ என்று விலகி இருக்கிறார்கள் எனலாம். ஒன்றை ஏற்பதும், மறுப்பதும் அவரவர் விருப்பம்தானே தவிர குறை சொல்லுவதற்கு ஏதுமில்லை.

ஆனாலும் நெருப்பு என்றால் கொஞ்சமாவது பயம் இருக்கத்தானே செய்கிறது? இல்லை என்று மறுப்பீர்களா? பெரும் நெருப்பு உண்டாக சிறு பொறி போதுமே, உலகில் பெரும் காடுகள் பற்றி எரிந்து சாம்பலாகின்றன. காரணம் அறியமுடியாமல் திணறுகிறார்கள் என்பதுதான் உண்மை. மேலும் அந்த நெருப்பை வெறுமனே கண்டு ஒதுக்கிடாமல், அதை ஒரு முறை அனுபவமாக பெற்றிருக்கிறீர்களா? அந்த அனுபவம் இன்னும் பலவிதமான உண்மைகளை உங்களுக்குச்சொல்லும்.

ஆதிகால மனிதன், நெருப்பைக்கண்டு அஞ்சினான். நெருப்பின் தன்மை, தாக்கம், வளர்ச்சி, படருதல், அழித்தல், சாம்பலாக்கிடுதல் என்று எல்லாம் கண்டு திகைத்தான். அதனால் அதில் ஏதோ தெய்வத்தன்மை உள்ளது என்று உணர்ந்து அதை வணங்கினான். என்றாலும் கூட அந்த நெருப்பை, பக்குவமாக கையாண்டு, உணவை சமைக்கவும் கற்றுக்கொண்டான் என்பது மகத்தான உண்மைதானே?!

இப்போது உங்களுக்குத்தோன்றும் ‘அடுப்பில், சமையலுக்கு எரியும் நெருப்பை ஏன் தீபமாக வணங்க வேண்டும்? முட்டாள்தனம் இல்லையா?’ என்று கேட்ப்பீர்கள். இப்படி நீங்கள் கேட்பதாக இருந்தால், உங்களுக்கும் நெருப்பிற்கும் உள்ள தொடர்பில் விலகி இருக்கிறீர்கள். அந்த நெருப்பை அனுபவமாக பெறவில்லை என்று உறுதியாக சொல்லலாம்! முக்கியமாக, வெப்பம் தான் நெருப்பாக மாறுகிறது. நம் உடலில் சராசரி வெப்ப நிலையாக 98.6 ஃபாரன்ஹீட் டிகிரி வெப்பம் இருக்கிறது. அது அந்த அளவில் இருந்தாகவேண்டும். குறைந்தாலும், கூடினாலும் உயிர்வாழ்தலில் சிக்கல்தான்.

பஞ்சபூதங்கள் என்று சொல்லப்படும் பௌதீக தோற்றத்தில் மூன்றாவது நிலையே, வெப்பம் ஆகும், இந்த வெப்பம் தன்மாற்றம் பெற்றால் நெருப்பாக மாறிவிடும். நெருப்பு நிலையானதல்ல, உடனே அது எரிந்து / எரித்து மறைந்துவிடும். அந்த நிலையில் அங்கே ஒரு தெய்வீக மாற்றமும் நிகழ்கிறது. இந்த உண்மை அறிந்த அறிவார்ந்த முன்னோர்கள், ஆதிகாலத்தில் பயந்துபோய் வணங்கிய தன்மையை விலக்கி, உண்மையோடு தெய்வீகமாக, தீபாராதனை வழியில் வணங்கலாம் என்று வழியமைத்தார்கள். தீபராதனையை கண்களால் பார்ப்பதும், தீபத்தை கைகளால் ஏற்று கண்களில் ஒற்றிக்கொள்வதும் அந்த ஆற்றலை, சக்தியை நமக்குள் உள்வாங்கிக் கொள்வதாகும். இதுதான் நெருப்பை தீபமாக வணங்குவதால் கிடைக்கும் நன்மையாகும்.

வாழ்க வளமுடன்.

What is truth and benefit of the Thiruvannamalai Girivalam?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, கார்த்திகை நாளில், திருவண்ணாமலை சிறப்புப் பெறுவது ஏன்? யோகத்தில் உள்ளவர்களுக்கு உதவுமா?


பதில்:

நாம் யோகத்தில் வந்துவிட்டதினால், இப்படியான விசயங்களை தவிர்த்துவிட வேண்டும் என்ற அவசியம் இல்லை.  அதில் இருக்கின்ற நன்மைகளை மட்டும் ஆராய்ந்து, வேண்டுவோருக்கு நீங்களே உதவலாமே?! திருவண்ணாமலை, நீண்டகாலமாக இருந்துவரும் ஒரு பஞ்சபூத வழிபாடு தலங்களில், நெருப்புக்கானது. மேலும் சித்தர்களின் போற்றுதலுக்கும் உரியது. அங்கே சித்தர்கள் ஜீவசமாதியாக அடக்கமும் பெற்றிருக்கிறார்கள் என்பதும் உண்மை. அவர்களுடை நோக்கம், எந்த ஒரு மனிதரும், இங்கே வந்து திருவண்ணாமலையை வணங்கும் பொழுது, கருத்தாக, உள்முகமாக உள்ள மெய்ப்பொருளையே வணங்குகிறார். 

மேலும், மலையை கிரிவலமாக, பௌர்ணமி தினத்திலும், கார்த்திகை நாளிலும் சுற்று வரும் பொழுது, அங்கே இருக்கக்கூடிய காந்த அலைகளை, உடலும், மனமும், உயிரும் ஏற்றுக்கொள்கிறது.

திருவண்ணாமலை என்ற மலையே குறிப்பிட்ட தன்னதிர்வினால் அலைகளை பரப்ப, பௌர்ணமி நிலவும் தன்னுடைய காந்த அலைகளை பரப்பி பக்தர்களுக்கு உதவுகிறது. இதில் பெரும்பான்மையாக யோகம் கற்காத நபர்கள், இருப்பதை அப்படியே ஏற்றுக்கொள்வர். யோகத்தில் இருக்கிற நாம், அதன் உண்மை அறிந்து ஏற்றுக்கொள்வோம். 

உண்மையாக இந்த பௌர்ணமி கிரிவலம் என்பதில், பக்தி யோகமும், கர்ம யோகம் இணைந்தே இருக்கிறது. மனதை ஒருமுகப்படுத்தி, கிரிவலமாக சுற்றி வருகையில், காந்த அலைகளின் செறிவை நாம் ஏற்றுக்கொள்கிறோம். அந்த அலைகள், எந்த மனிதருடைய உடலுக்கும், மனதிற்கும், உயிருக்கும் ஊக்கம் அளிப்பதாகவே இருக்கிறது.

மெய்ப்பொருள் உணர்ந்த சித்தர்கள், சில உண்மைகளை உணர்வுபூர்வமாக பெற்றுக்கொள்ளும் பொருட்டு, அந்த அன்பர்களை சிரமமப்படுத்தாமல், இப்படி இப்படி செய்துவா, இந்த பக்தி முறை உனக்கு போதுமானது என்று எளிமைப்படுத்திவிட்டார்கள். அதுதான் இன்றும் தொடர்கிறது.

மனம் ஒன்றி மௌனமாக, கிரிவலம் சுற்றுவந்த பிறகு, ஒரு ஆழமான அமைதிய அன்பர்கள் உணரமுடியும் என்பதே உண்மையாகும். யோகத்தில் ஆரம்ப சாதகரும், அதில் ஆழ்ந்து பயணிக்கும் சாதகரும் கூட பயன்பெறலாம். இங்கே மனம் ஒன்றி, லயித்து இருத்தல்தான் பலன் தரும். சில மந்திரங்கள் சொல்லிக்கொண்டும் கிரிவலம் வரலாம். மற்றவர்களோடு பேசாத தனிமையில் சுற்றிவருதல் சிறப்பு.

வாழ்க வளமுடன்.

Any solution for thyroid problems in the Vethathiriyam?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, நீண்ட நாளாக தைராய்டு பிரச்சனையினால் அவதிப்படுகிறேன். இதற்கு எளியமுறை உடற்பயிற்சி, தவம் உதவுகிறதா?


பதில்:

உலகில் வாழும் பெரும்பாலோருக்கு இந்த தைராய்டு எனும் நாளமில்லா சுரப்பியின் செயல்பாடு இரண்டு விதமான பிரச்சனைகளுக்கு ஆளாகிறது. அனேகமாக பெண்பாலருக்கு இந்த நோய் தொல்லை அதிகம் எனலாம். அவை 1) அதிகமாக சுரப்பதினால் வரும் பிரச்சனை 2) இயல்பை விட சுரப்புத்தன்மை குறைவதால் வரும் பிரச்சனை ஆகியன ஆகும். இதை ஆங்கிலத்தில் Hyperthyroidism and Hypothyroidism என்கிறார்கள். பெருபாலாக, பெண்களுக்கே இந்த அதிக, குறைவு பிரச்சனைகள் இருப்பதாக மருத்துவ அறிக்கை சொல்லுகிறது. நாம் உண்ணும் உணவில் உள்ள குறைகளும், நம்முடைய அன்றாட எண்ணம், செயல் ஆகியனவும் காரணமாக அமைகிறது என்றும் மருத்துவர்கள் சொல்லுகிறார்கள்.

முக்கியமாக இந்த பிரச்சனை வந்துவிட்டால், உடலின் வெப்ப சமநிலை மிகவும் பாதிப்படைகிறது. இதுவே அடுத்தடுத்த பல உடல், மன, நல பிரச்சனைகளுக்கு ஆதாரமாகிவிடுகிறது. எனவே முதலாவதாக, தகுந்த மருத்துவரின் ஆலோசனை கேட்டுக்கொள்வது நல்லது. அவரின் வழிகாட்டுதலின்படி, உங்களுடைய பிரச்சனை எப்படிப்பட்டது என்று நீங்களே புரிந்துகொள்ளவும் முடியும். அதற்குப்பிறகு மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்.

அந்த நிலையில் இருந்தவாறே, வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சியை நீங்கள் தொடரலாம். குறிப்பிட்ட பயிற்சியைமட்டும் செய்து பலன் பெற நினைக்காமல், முழுமையாக எல்லா பயிற்சிகளையும் செய்துவந்தால், மாற்றத்தை பெறமுடியும். நீங்கள் தொடர்ந்து செய்வதில்தான் உங்களுக்கான முன்னேற்றம் அமையும்.

மனவளக்கலை மன்றத்தை அணுகி, ஆமைப்பயிற்சி என்ற பயிற்சியை (பெண்பாலருக்கு மட்டும்) கேட்டு கற்றுக்கொள்ளலாம். கூடுதலான முன்னேற்றம் கிடைக்க வழியுண்டாகும். இந்த ஆமைப்பயிற்சியின் பெயர் காரணத்தை அறிந்தாலே, இதன் உண்மையும் பலனும் உங்களுக்குத் தெரியவரலாம். ஆமையின் சிறப்பான அந்த தன்மையை உணர்ந்துதான், உலகெங்கும் ஆமைப்பயிற்சி சொல்லித்தரப்பட்டு வருகிறது. நீங்கள் இணையத்தில் தேடினாலும் கிடைக்கும். ஆனால் முறையாக, முழுமையான பயிற்சி முறையோடு, மன்றத்தில், தகுந்த அனுபவம் மிக்க ஆசிரியரின் வழியாகவே கற்றுக்கொண்டால், தெளிவான நிலை கிடைக்கும் பலனும் உறுதியாகும், முக்கியமாக ஏதோ ஒருவாரம், பத்துநாள், ஒருமாதம் செய்தேன் ஒரு பலனும் இல்லை என்று புலம்புவதிலும், அதனால் கைவிடுவதிலும் பிரயோஜனம் இல்லை. மருந்து இல்லாமல் பயிற்சி மூலம், முழுமையாக குணப்படுத்துவதற்கு நிச்சயமாக நாட்கள் ஆகலாம். மேலும் அதன் நோய்தன்மை எப்படி இருக்கிறது என்பதும் முக்கியமானது.

என்றாலும் கூட, ஆமைப்பயிற்சியை விடுத்து, நீங்கள் இதற்கென்று, பொதுவெளியில் கிடைக்கும் முத்திரைகள் செய்தும் பழகலாம் என்றாலும் கூட, தகுந்த ஆலோசனையின் அடிப்படையில் செய்யவும். இல்லையென்றால், இருக்கும் பிரச்சனையை நீங்களே அதிகப்படுத்தும் விதமாக மாறிவிடும்! கவனம் தேவை.

சில அக்குபங்க்சர் முறைகளும், ஹோமியோபதி மருந்துகளும் உதவுகிறது என்றாலும் கூட, முறையான வழிகாட்டல் இல்லாமல் எடுத்துக்கொள்ள வேண்டாம். வேதாத்திரிய எளியமுறை பயிற்சி நல்ல தீர்வாக, உடல் வெப்பத்தை சமன் செய்து, நாளமில்லா சுரப்பிகளை சரியானபடி செயல்பட ஊக்குவிக்கிறது. உடல் உறுப்புக்கள் சிறப்பாக செயல்பட துணை செய்கிறது. சுவாசம், தூக்கம் இயல்பாக்குகிறது! என்றாலும் கூட மருத்துவரின் ஆலோசனையை தவிர்த்துவிடாதீர்கள்!

தவம் உதவுகிறதா என்ற கேள்விக்கு, மிகச்சிறந்த வழியாக, ஆக்கினை தவம் உதவுகிறது. ஏனென்றால், ஆக்கினை தவம், நம் உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகளின் மொத்தமான செயல்பாடுகளை நிர்ணயித்து, வழி நடத்துகிறது எனலாம். அதன்வழியாக, இந்த தைராய்டு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வும் கிடைக்கும். இங்கே தகுந்த குருவின் / ஆசிரியரின் ஆலோசனை முக்கியமாகும்!

வாழ்க வளமுடன்.

Why I getting the breathing problems when practice meditation?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, தவத்தில் செய்வதற்கு உடகார்ந்த உடனே மூச்சு மூட்டுவதாகவும், சுவாசிக்க கடினமாகவும் இருக்கிறது ஏன்? இதை எப்படி சரிசெய்வது?


பதில்:

இதுபோலவே நிறைய அன்பர்கள் சொல்லுவதை கேட்டிருக்கிறேன். இப்படி இயல்பான சுவாசம் மாறி உங்களுக்கு தொந்தரவாக மாறுவதற்கு சில காரணங்கள் அமைந்துவிடுகின்றன. முக்கியமாக நம்முடைய வாழ்க்கைச் சூழலும் பெரும் காரணமாகும். கிட்டதட்ட மூன்று ஆண்டுகள், கரோனா நோய் தொற்று, நம்மை மட்டுமல்ல, உலகெங்கும் வாட்டி வதைத்தது. எத்தனையோ மக்களை நாம் இழந்தும் விட்டோம். நம் வீட்டிலும் கூட அப்படி நிகழ்ந்துவிட்டது வருத்தமானதே! இந்த கொடிய அனுபவத்திற்குப்பிறகு, இந்த வருடம் முதலாகவே நல்ல மாற்றம் வந்துவிட்டது. எனினும் கூட நாம் அந்த அனுவத்தின் வழியாக பாடம் கற்று, அதை திருத்திக்கொண்டோமா? என்றால் நாம் என்ன பதில் சொல்லுவோம்?

தடுப்பு ஊசிகள் செலுத்திக்கொண்டோம், மருந்துகள் எடுத்துக்கொண்டோம், முககவசம் அணிந்து, தனிமை செய்துகொண்டோம், தூர அளவில் நின்று பேசுதல், பழகுதல் நிகழ்த்திக்கொண்டோம் என்று சொல்லுவோம். ஆனால் இதற்கு மேலாக ஏதேனும் செய்தோமா? என்றால்?!

வாழ்கின்ற நமக்கு சுவாசம் எவ்வளவு முக்கியம் என்பது தெரிந்தும், நம் சுவாசம் சிறக்க தனியே பயிற்சி செய்வதில்லை. ஆனாலும் அது இயற்கையாக, இயல்பாக, தானாக நிகழ்கிறது. நுரையீரலும், உதரவிதானமும், வயிறும் நன்கு சுருங்கி விரிந்தால்தான் நல்ல முழுமையான சுவாசம் ஏற்படுகிறது என்பதுதான் உண்மை. இந்த மூன்று உறுப்புக்களும், அதன் அசைவும் உங்களுக்கு, சுவாசிக்கிற நமக்கு வசமாக வேண்டும்.

அதற்கு பயிற்சி செய்தலும் வேண்டும். அதில், வேதாத்திரிய எளியமுறை பயிற்சியை நாம் கற்றுக்கொண்டோம். அதை ஒவ்வொருநாளும் செய்யவேண்டும். தவத்திற்கு முன்பாக செய்தல் மிகச்சிறப்பு. இந்த வழியில்தான் நீங்கள் இந்த சுவாச பிரச்சனையை சரி செய்யமுடியும்.

வாழ்க வளமுடன்.

How do I know that I have made progress in my penance?!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, என்னுடைய தவத்தில் முன்னேற்றம் அடைந்திருக்கிறேன் என்பதை எப்படி அறிவது?!


பதில்:

உங்களுடைய அன்றாட நடவடிக்கை என்ற வரிசையில், முதலில் தவம் இருக்கவேண்டியது முக்கியம். ஒரு நாளை தொடங்கினால் அதில் தவம் இல்லை என்பதற்கே இடமில்லை. தவம் செய்து முடிக்காமல், அந்த நாள் தொடராது என்ற முடிவில் நீங்கள் இருக்கவேண்டும். அந்த நிலைக்கு இயல்பாக நீங்கள் வர வேண்டும். கட்டாயத்திற்காகவோ, சூழலுக்காகவோ, யாரோ ஒருவருடைய வற்புறுத்தலுக்காகவோ செய்யக்கூடாது. முக்கியமாக அவசர நோக்கமும் கூடாதுதான். வழக்கமான கடமையாக அதை ஏற்று, இயல்பாக செய்துமுடிக்க பழக்கிக்கொள்வதே சிறப்பாகும். இதுதான் உங்களுடைய தவ பயணத்தில் சிறப்பான முதல் முன்னேற்றமாகும்.

இன்றைக்கு தவம் செய்யாமல் விட்டுவிட்டேனே என்ற வருத்தம் ஏற்படும்படியான கடமையும், ஆர்வமும் இருத்தல் நன்று. ஒரு பொதுவான, இயற்கையான முன்னேற்றம் என்பதை, அடையாளமிட்டு சொல்ல முடிந்தால், உங்களுக்குள் ஒரு உற்சாகம் எப்போதும் இருப்பதை உணரலாம். இதன் காரணம் என்னவென்றால், வழக்கமாக, அதாவது, தவம் கற்றுக்கொள்வதற்கு முன்னதாக, பலவிதங்களில் பலவித எண்ணங்கள் வழியாக அலைபாய்ந்து கொண்டே இருந்த மனம், கொஞ்சமாவது அமைதியாக இருப்பதை உணரலாம். இந்த நிலை, உங்களுக்கு கிடைத்த இரண்டாவது முன்னேற்றம் என்று சொல்லலாம்.

இது எப்படி அமைகிறது என்றால், தவத்தின் வழியாக மனம், சிறிது சிறிதாக தன் விரிந்த இயக்கத்தையும், ஒன்றிலிருந்து ஒன்றாக மாறிக்கொண்டே இருந்த இயக்கத்தில் இருந்தும் ஒடுங்குகிறது. அதன் வழியாக உங்களுக்கு மன அமைதியும் கிடைக்கிறது எனலாம். இந்த இரண்டு முன்னேற்றங்களை நீங்கள் உறுதி செய்துகொண்டால், அதற்குப்பிறகு நானோ, வேறு யாரோ எடுத்துச் சொல்லும் முன்பாகவே, நீங்களே அந்த முன்னேற்றத்தை புரிந்து கொள்ள முடியும்.

ஆனாலும் உங்களால், இந்த இரண்டு முன்னேற்றங்களையும் உறுதி செய்ய முடியவில்லை என்றால், அதற்கு நீங்கள் மாற்றுவழி கண்டாகவேண்டும். தினமும் ஒருவேளை தவம், வாய்ப்பு இருந்தால் காலையும் மாலையும் தவம் என்பதை தொடர்வேண்டும். வாரம் ஒருநாள் அகத்தாய்வும், தற்சோதனையும் செய்துவர வேண்டும். இதனோடு, வழக்கமான தினசரி எளியமுறை உடற்பயிற்சியும், காயகல்ப யோகபயிற்சியும் செய்துவந்தால், உங்கள் தவம் நன்கு சிறக்க உதவிடும். ஏனென்றால், நன்கு தவம் முழுவதும், இயல்பாக உட்கார்ந்து தவம் செய்யவும், நல்ல உணர்வு கிடைக்கவும் துணையாக இருக்கும். மேலும் வாய்ப்பு கிடைத்தால், உங்கள் வேதாத்திரிய ஆசிரியரோடு கலந்துரையாடுங்கள். 

வாழ்க வளமுடன்.

How to fix the deficit in materialistic life?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, ஏதோ ஒரு பற்றாக்குறையிலேயே வாழ்வதாக தோன்றுகிறது. அது எப்பொழுது மாறும்?!


பதில்:

நீங்கள் சொல்வது உண்மைதான். இந்த உலகில்வாழும் பெரும்பான்மையான மக்களுக்கு, ஏதோ ஒரு பற்றாக்குறையிலேயே வாழ்வதாக தோன்றுகிறது. சிலர் உங்களைப்போல வெளியில் சொல்லுவார்கள். சிலர் சொல்லுவதில்லை. இதற்கு பலவித காரணங்களை சொல்லுவார்கள். அதாவது, வாழ்க்கையில் இப்படி அப்படி நிறைவு செய்துகொள். அதை இதை கழித்தும், பெற்றும் வாழ பழகிக் கொள் என்று எண்ணற்ற அறிவுரைகள் கிடைக்கும். என்றாலும் கூட இதற்கு முக்கியமாக இருக்கக்கூடிய காரணம் ஒன்று உண்டு. அதன் வழியாகத்தான் இந்த பற்றாக்குறை நின்றுவிடுகிறது. அது என்ன?

அதுதான் நம்முடைய மனம். இந்த மனம் நமக்குள்ளாக இருந்தாலும், அதனுடைய மூலம் மிகப் பிரமாண்டமானது. அதை நாம் அறிந்துகொள்வதில்லை. அதற்கான வழியையும் தேடுவதில்லை.  அசட்டையாக இருந்து தவிர்த்தும் விடுகிறோம். 

ஆனால், நாம் வாழ்கின்ற இந்த உலகில், அடிப்படையான விசயங்களை முழுமை செய்தாகவேண்டியது அவசியம். ஏனென்றால் பொருள் இல்லாமல் இந்த உலகம் இல்லை. உணவு, உடை, இருப்பிடம் என்பதோடு பொருளும், பணமும் அவசியமானது தான். அந்த பணத்தைப் பெற, வேலை, தொழில், வியாபாரம், உழைப்பு என்ற வகையில் நாம் செயல்பட வேண்டியதும் முக்கியமானது. இந்தவகையில் பற்றாக்குறையை, அதாவது அடிப்படை பற்றாக்குறையை சரி செய்தாகவேண்டும்.

இவை எல்லாம் இருந்தும், தனக்கும், தன் குடும்பத்திற்கும், வரக்கூடிய வாரீசுகளும் நிறைவாக வாழக்கூடிய அளவுக்கு இருந்தும் கூட, நீங்கள் பற்றாக்குறையை அனுபவித்தால், அதற்கு காரணம் மனதில் நிறைவில்லை என்பதுதான் அர்த்தம். அந்த மனம், இயல்பான அதன் ஆற்றலை, சக்தியை, நிலையை மறந்து சிக்கித் தவிக்கிறது என்பதுதான் உண்மை.

அத்தகைய மனதை, அதன் உண்மை நிலையை நோக்கி திருப்பினால் மட்டுமே, எல்லாம் இருந்தும் பற்றாக்குறையாக நினைக்கும் நிலை மாற்றமடையும். இதற்கு நீங்கள் யோகத்தில் இணைந்து, அதில் மனதையும் இணைத்தால் மட்டுமே மாறிடும். எளியமுறை குண்டலினி யோகமான வேதாத்திரியம் அதற்கு உதவிடும்!

வாழ்க வளமுடன்.

Following the Karma Yoga is easy, so no need any other yogas!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, கர்ம யோகம் மிக சுலமானதாக, திருப்தியாக இருக்கிறது, அதனால் மற்ற யோகங்கள் அவசியம்தானா?


பதில்:

மிக நல்ல விஷயமாக, முதலாவதான பக்தியோத்தில் இருந்து, கர்மயோகத்திற்கு, உயர்ந்திருக்கிறீர்கள் என்பது சிறப்பு. உண்மையாகவே, யோகம் எளிமையாகவும், புரிந்துகொள்ளும்படியும் இருக்கவேண்டும் என்பதற்காகவும், அதற்கு மக்கள் பழகிக் கொள்வதற்காகவுமே யோகம், பல நிலைகளாக உருவாக்கப்பட்டது. இதனால் கர்ம யோகம் எளிதானதுதான் என்பதில் ஐயமில்லை. இது அடிப்படை நிலையில் இரண்டாவது ஆகும். 

உலகில் நாம் காணும் பல்வேறு வகையிலான கருத்துக்களும், விளக்கங்களும், அறிவுரைகளும் இந்த கர்ம யோகத்தின் வெளிப்பாடுகள் தான். அதாவது பக்தி யோகம் என்பதில் ஏதேனும் திருத்தம் பெற்று, தன்னை அதிலிருந்து விடுவித்துக் கொண்டவர்கள், மக்களின் நலன் சார்ந்து, இந்தமாதிரி நல்ல விசயங்களை கடைபிடியுங்கள்.  நல்லதே நினையுங்கள், அதன்வழி நல்லதே செய்யுங்கள், மனதை இப்படியாக பக்குவப்படுத்துங்கள், உடலை இப்படி பேணிகாத்திடுங்கள் என்று சொல்லுவதும் கூட, கர்ம யோக நிலைதான். ஒருவகையில், நம்முடைய அடிப்படை பழக்க வழக்கங்களை மாற்றி அமைத்துக் கொள்வதாகவும் அமையும்.  பிறருக்கும் அது விளக்கமாகவும் அமையும். அதாவது நம்முடைய செயல் வெளிப்பாடுகளைப் பார்த்து, பிறர் திருத்திக் கொள்கின்ற அளவில் உதவலாம். எனவே கர்ம யோகம் என்பது, பிறருக்கு நேரடியாக உதவி செய்வதுதான் என்ற அர்த்தத்திலிருந்து விலகி, தன்னை திருத்திக் கொண்டு இயங்கினாலும்கூட அது பிறருக்கு உதவும் என்ற நிலை இங்கே அமைந்துவிடுகிறது.

இதுதான் உங்களுக்கும், பெரும்பாலோருக்கும் மிக சுலபமானதாகவும், திருப்தியாகவும் இருக்கிறது. அப்படியானால், உங்களுடைய வாழ்நாள் முழுவதும், கர்ம யோகத்தை தொடரலாம். அதில் எந்த குறையுமில்லை. இந்த கர்ம யோகத்தின் நிலையில், நானும் பிறமக்களும் சமம் என்ற உணர்வு தோன்றும். அது மிகவும் அற்புதமானதுதான். இந்த நவீன, இணைய தொழில்நுட்ப காலத்தில், இந்த கர்ம யோகம்தான் முதன்மையாக இருக்கிறது எனலாம். எல்லோருமே தனக்குத் தெரிந்ததை, தான் கற்றதை, தன் அனுபவத்தை பிறருக்கு அறியத்தருகிறார்கள். அதை மற்றவர்கள் அறிந்துகொள்கிறார்களோ, கடைபிடிக்கிறார்களோ இல்லையோ என்ற ஆராய்ச்சிக்கு இடமின்றி, தொடர்ந்து பகிர்ந்துகொண்டே இருக்கிறார்கள். ‘ஏன்யா? இதெல்லாமா கர்ம யோகம்?’ என்கிறீர்களா? இவற்றையெல்லாம் பார்க்கும் பொழுது, அப்படி கேள்வி கேட்கும்படியாகத்தான் இருக்கிறது! ஒன்று செய்யுங்கள், நீங்கள் அவரிடம் சென்று ‘ஏன்யா நீங்கள் இதையெல்லாம் பகிர்கின்றீர்கள்?’ என்று கேள்வி கேளுங்கள். அதற்கு அவர் ‘கர்ம யோகம்’ என்ற விளக்கத்தில்தான் பதில் தருவார்.

ஆனால் இங்கே, இப்படியான கர்ம யோகத்தில் பெரும் சிக்கல் இருக்கிறது. கர்ம யோகம் என்ற புரிதலில் வரும் சிக்கல் அது. கர்ம என்பது, எண்ணம், சொல், செயல் இந்த மூன்றின் வழியாக தோன்றுவது ஆகும். இதனூடாக, கர்ம வினைப்பதிவும் நமக்குள்ளாக அமைந்தது வெளிவரும், புதிதாகவும் நமக்குள் பதியும் என்பது இயற்கை நீதி. எனவே கர்ம யோகத்தை நீங்கள் செயல்படுத்திவரும் பொழுது, இந்த கர்ம வினைப்பதிவு குறித்த விழிப்புணர்வு அவசிமாகிறது. இல்லையேல் அது உங்களுக்கும், பிறருக்கும் தடையை ஏற்படுத்திவிடுமே?! மேலும் இதன் வழியாக உயர்வதுதான் முறையானது, இங்கே நின்றுவிடுவது உங்கள் விருப்பமாக இருக்கலாம், எனினும் அது பிறவி நீள்வதற்கான காரணமாகிவிடும்! இதனால், பக்தி யோகம், கர்ம யோகம், ஞான யோகம், ராஜ யோகம் என்று அடுத்த நிலைகளுக்கு மாறியே ஆகவேண்டும்.

வாழ்க வளமுடன்.

Why someone reject the truthful and experienced advice?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, நம் வாழ்க்கையின் ஊடாக, நாம் அறிந்துகொள்ளும் நல்லதைக் கூட பிறருக்கு சொல்லமுடிவதில்லையே? அதை அவர்கள் ஏற்றுக்கொள்வதும் இல்லையே? ஏன்?


பதில்:

நல்ல சிந்தனைமிக்க கேள்விதான், அந்த அளவிற்கு நீங்கள் மாற்றம் பெற்றிருக்கிறீர்கள் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. இந்த உலகில் நல்லது, சரியானது, அறம் என்பது இதுதான் என்று, இதுவரையில் எத்தனையோ சித்தர்களும், ஞானிகளும், மகான்களும், தத்துவாதிகளும், மனிதவாழ்வின் முன்னேற்ற சிந்தனாவாதிகளும், சமூக படைப்பாளிகளும் சொல்லாதது அல்ல. உலகம் முழுவதும், எல்லைகளற்று, ஓவ்வொடு சமூகத்தோடும் இந்த அறம் சார்ந்த, ஒழுக்க பழக்க அறிவுரைகள் மக்களிடையே கலந்துதான் இருக்கிறது. என்றாலும் கூட, எத்தனை மக்கள் இந்த அறிவுரைகளை ஏற்று திருந்த்தம் பெற்று வாழ்ந்தார்கள், வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள், இனியும் வாழ்வார்கள் என்று கணக்கெடுத்தால் மிக சொற்பமே மிஞ்சும்!

இதற்கு காரணம் என்ன? அவரவர் வாழ்க்கைக்கு அவரவரே பொறுப்பு எனும் நிலையில், அடுத்தவர் சொல்வதை ஏற்று திருத்தம் பெறும் மனநிலைக்கு மனிதர்கள் வருவதில்லை. ‘இதெல்லாம் உங்களுக்கு சரியாகவருமய்யா, எனக்கு அதெல்லாம் சரிப்படாது’ என்ற சொல்லியே அதை தவிர்த்துவிடுவார்கள். நீங்கள் சொன்னதுபோலவே, உங்கள் வாழ்வின் ஊடாக, வந்த அனுபவத்தின் வாயிலாகத்தானே, நீங்கள் எது நல்லது? என்று தெரிந்துகொண்டீர்கள். அதுபோலவே, பிறமனிதர்களும், தங்கள் வாழ்வின் ஊடாக, பற்பல அனுவங்களுக்குப் பிறகுதான் அதை ஏற்றுக் கொள்வார்கள். இதுதான் மனித இயல்பு என்று ஒரு சப்பைக்கட்டு கட்டுவார்கள். வருமுன் காப்பது என்றால், அது மருத்துவத்திற்கு மட்டும்தானா?, மனித வாழ்க்கைக்கு இல்லையா?

மகான் திருவள்ளுவர், 

முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை

பின்னூறு இரங்கி விடும். (குறள் 0535)

என்று குறிப்பிடுகின்றார். இதன்படி, வரும் இடையூறுகளை முன்னே அறிந்துக் காக்காமல் மறந்து சோர்ந்தவன், பின்பு அவை வந்துற்றபோது தன் பிழையை நினைத்து இரங்குவான், என்பதாக மு. வரதராசன் அவர்கள் விளக்கம் தருகிறார்.

எனவே, உங்களுக்கு அனுபவமானதைப் போலவே, அவர்களும் அனுபத்தை பெற அனுமதியுங்கள், நீங்கள் முன்கூட்டியே, உங்கள் அனுபவத்தால் சொல்வதை, அவர்கள் ஏற்பது இல்லையே என்று வருந்தாதீர்கள். அதற்கு பதிலாக, குருமகான் வேதாத்திரி மகரிஷி சொல்வதுபோல, அவர்களை தினமும் ‘வாழ்க வளமுடன்’ என்று வாழ்த்தி மகிழுங்கள். அந்த வழியில் அவராக மாற்றம் பெற்றிட வாழ்த்து உதவிடும்.

வாழ்க வளமுடன்.

Why are poverty and money unrelated to each other?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, ஏழ்மையும் பணமும் ஏன் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருக்கிறது? எப்படி சரி செய்வது?!


பதில்:

இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும், தனித்தனியான வாழ்வியலும், ஒருவரோடு ஒருவர் கலந்து வாழும் வாழ்விலும் இருக்கிறது. அதுதான் இயற்கையானதும், இயல்பானதும் ஆகும். இதில் இரண்டாவது நிலையில் இருக்கும் கலந்து வாழ்தலில் பகிர்ந்து கொள்ளுதலும் உண்டு. கொடுக்கல் வாங்கல் என்றும் சொல்லலாம். அது பொருளாக இருக்கவேண்டியதில்லை. அறிவாக, அனுபவமாக, முன்னெச்சரிக்கையாக இருக்கலாம். இங்கே ஒருவருக்கு பொருளை, பணத்தை தரவேண்டும், பெறவேண்டும் என்று நினைப்பதுதான், அந்த ஒருவருக்கு ஏழ்மையை கொண்டுவந்து விடுகிறது! எப்படி?!

நான், என்னால் முடிந்தவரை இப்படித்தான் இருப்பேன். எனக்குத் தெரிந்தது இவ்வளவுதான், என்னால் செய்யமுடிந்தது இதுதான். இதற்கு மேல் நீதான் உதவவேண்டும். எனவே உன்னிடமிருப்பதை எனக்குத் தா, என்று எதிர்பார்ப்பதுதான் ஏழ்மையை வரவழைக்கிறது.

இந்த உலகில், மூன்று பிரிவில் இருக்கும் மனிதர்கள்தான், பிற மனிதர்களின் உதவியைப் பெற தகுதியானவர்கள் என்று குருமகான் வேதாத்திரி மகரிஷியும் குறிப்பிடுகின்றார். யார் அவர்கள் என்றால், 1) வயதான பெரியோர்கள் 2) 14 வயதுக்குள்ளான குழந்தைகளும், சிறியவர்களும் 3) உடலில், மனதில் ஏதெனும் ஒருவகையில் பாதிப்படைந்தோர் ஆகியோர் மட்டுமே! (சிறப்புப் பெற்றவர்கள்)

ஆனால் உலகில் எல்லாமனிதர்களுமே ஒரு எதிர்பார்ப்பில் சிக்கிக் கொண்டார்கள். ஏழ்மை என்பது தலைவிதி அல்ல என்று எத்தனையோ ஞானிகளும், மகான்களும், அனுபவசாலிகளும் சொன்னாலும் அதை ஏற்பதில்லை. ஒருவர் பிறக்கும் பொழுதும், வளரும் பொழுதும் ஏழ்மையாக, ஏழையாக இருக்கலாம். ஆனால், தன்னால் உடல் உழைப்பையும், அறிவையும், அனுபவத்தையும் இந்த உலகோடு, உலகமக்களோடு, வாழும் சமுகத்தோடு பகிர்ந்துகொள்ள முடியும் என்றால், அந்த ஏழ்மையை, இதுவரை இருந்து வந்த ஏழ்மையை மாற்றிவிடலாமே? தனக்கும், தன்னை சார்ந்த சக மனிதர்களுக்கும், இந்த சமூகத்திற்கும் தேவையான, அவசியமான, துணையான ஒன்றை செய்து பயன்பெறலாமே?! அது சேவையாக, தொழிலாக, வியாபாரமாக, உதவியாகவும் இருக்கலாம். அதன்வழியாக பணமும் பொருளும் பெறலாம் தானே?!

ஏழ்மையும் பணமும் விரோதிகள் அல்ல, அப்படி நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். உங்கள் வாழ்க்கையூடாக மாற்றத்தை சிந்தித்து, அதை செயல்படுத்தி வாருங்கள். நீங்களும் வாழ்வில் உயர்வீர்கள். நலமும் பலமும் அடைவீர்கள்!

வாழ்க வளமுடன்.

Is mantra and meditation true or fake?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மந்திரமும் தியானமும் ஏமாற்றுவேலை என்ற கருத்தை எப்படி எதிர்கொள்வது?!


பதில்:

இந்த உலகில் வழிவழியாக மனிதனின் அறிவு, இயற்கையாற்றலால் அனுபவமாகி விரிந்துகொண்டே இருக்கிறது. அறிவில் தெளிவும் வந்துகொண்டே உள்ளது. அப்படியாக ஓவ்வொரு மனிதருக்கும் ஏற்கனவே இருந்த நம்பிக்கையும், புதிய கருத்தும், கொள்கையும், அதன் வழி நடத்தலும் வந்துகொண்டே இருக்கும் என்பதுதான் உண்மை. மனித இனத்தின் வரலாறு அப்படியானது. ஆனால் குறிப்பிட்ட இன்னார்தான் இதை கொண்டுவந்தார் என்று நாம் முடிவு செய்வது சரியாகாது. மனித சமூகத்தின் ஒவ்வொரு மனிதனுடைய சிந்தனையும், அளவில் பெரிதோ சிறிதோ கணக்கே இல்லை. அதில் கலந்துதான் உள்ளது. 

திருவள்ளுவர் மகான் சொன்னது போல, எண்ணினாலே, நினைத்தாலே போதுமானது, அந்த அறிவு நம்மோடும் கலந்துவிடும். இதனால் வாய்ச்சொல்லாகவோ, எழுத்தாகவோதான் பிறருக்கு பகிர்ந்து, அவர் அறிவில் மாற்றம் தரவேண்டும் என்பது பொய்யாகிவிடுகிறது. 

பிரச்சனை என்னவென்றால், தான் கருதியதை, தன்னுடைய புரிதலை, தன்னுடைய நம்பிக்கையை, வெளி உலகில், பொதுவெளியில் பகிர்ந்து கொள்ளும் பொழுது, இப்படி நாம் சிக்கிக் கொள்வது உண்டு. அதாவது நம்முடைய நம்பிக்கையை, இன்னொரு மனிதரின் வார்த்தைகள் சிதறடிக்கும், குழப்பும், சிந்திக்கச் செய்யும், விட்டுவிலவிடவும் உதவும். அப்படியாகவே, மந்திரமும், தியானமும் ஏமாற்றுவேலை என்று சொல்லும் மனிதர்கள் நம்மிடையே உண்டு.

முக்கியமாக ஏற்கனவே சொன்னபடி, அவரவர்களுக்கு அவரவர் கருத்தை சொல்ல இந்த உலகில் இடமுண்டு என்பதை மறவாதீர். அவர் யாராக இருந்தாலும், எதிரியாக, நண்பராக இருந்தாலும் அதை நீங்களோ, நானோ மறுத்துபேச வழியில்லை. அப்படி அவர் பேசினால் அதை அந்த இடத்தில் நாம் மறுப்பதாக இருந்தால், அதற்கான ஆதார செய்திகளை சொல்ல வேண்டும். நிரூபிக்கவும் வேண்டும். அது எப்போதும் இயலாதது. எந்நேரமும் ஆதாரங்களை கைகளில் வைத்திருக்க முடியுமா? எனவே அந்த நேரத்தில் கேட்டு நாம் விலகிவிட வேண்டியதுதான்.

வாழ்க வளமுடன் என்ற வார்த்தையே ஒரு மந்திரம் ஆகும். அதை சொன்னால் வருகின்ற பலன்கள் அளப்பறியது. ஆனால் யாரும் நம்பத்தான் தயாரில்லை. ஒரு மனிதரின் பெயரைச் சொன்னால், அவர் திரும்பிப் பார்க்கிறார்தானே? ஏன் திரும்பவேண்டும்? அந்த பெயருக்கும் அவருக்கும் தொடர்பு உள்ளது. அதுபோலவே மந்திரத்திற்கும், அதன் தேவதா சக்திக்கும், நம் மனதிற்கும் தொடர்பு இருக்கிறது. அதை நிரூபணமும் செய்திருக்கிறார்கள். ஒலி அதிர்வுகள் ஏற்படுத்துகின்ற மாற்றம் அது. பிரபஞ்சத்தில் எங்கோ நிகழ்கின்ற, ஈர்ப்பு அலைகளை, இங்கே அறிந்து CERN - European Organization for Nuclear Research விஞ்ஞானிகள் மகிழ்வதும் நாம் அறிந்ததே! 

ஆனால், மந்திரமும் தியானமும் ஏமாற்றுவேலை என்று சொல்லும்பொழுது, அது உண்மையா என்று நமக்குத் தெரியும்தானே? ஒருவேளை உங்களுக்கே அந்த சந்தேகம் இருந்தால், இதுவரை நீங்கள் பெற்ற அனுபவத்தைக் கொண்டு, ஆராய்ந்து உண்மை அறியவேண்டும். அதுதான் முக்கியம். இப்படி அவர் சொல்லிவிட்டாரே என்று நீங்கள் வருந்துவதும், அவரை திருத்த முயற்சிப்பதும் வேண்டாம், அது தேவையும் இல்லை. உங்களுக்கு அதன் உண்மை தெரியுமே? பிறகென்ன? அவருக்கு அதில் கிடைத்த அனுபவம் அப்படி இருக்கலாம் அல்லது அதில் இறங்கி உண்மை தெரியாமலேயே அப்படி சொல்லலாம் தானே?! எனவே உண்மை உங்கள்பக்கமாக இருக்கையில், நீங்கள் நிறைவாக, அமைதியாக தொடரலாம்!

வாழ்க வளமுடன்.

What is Mukti and Moksha? Perfect Informations!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, முக்தி மோட்சம் என்றால் என்ன? அதை எப்படி அடைவது?

பதில்:

நாம் வாழும் இந்த உலகில், இந்த முக்தி, மோட்சம் என்பதை எப்படியாவது உள்வாங்கி விடுகிறோம். நம் குடும்பத்திலும், வெளி உலகிலும் இந்த வார்த்தைகளும், விளக்கங்களும் நமக்கு கிடைத்துவிடுகின்றன. மேலும் நூல்கள், பிறருடைய கருத்துக்கள் வழியாகவும் நமக்கு அறியவருகிறது. ஆனால் தெளிவாக உண்மையான விளக்கம் கிடைக்கிறதா? என்றால் அதான் இல்லை. எதோ கதை மாதிரியாக, இப்படி, அப்படி என்று ஏதோ புரிதலுக்காக சொல்லப்படுகிறதே தவிர, முழுமையான விளக்கம் இல்லை.

சிலர், உனக்கு தெரியவில்லை என்றால் விட்டுவிடு, இல்லை என்று சொல்லாதே என்று வம்புக்கு வருவார்கள். பெரும்பாலும், எதையுமே நம்பிக்கை அடிப்படையில் இருப்பதை கேள்வி கேட்கவே நமக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்பதுதான் உலக வழக்கம்.

சரி, சொல்லப்பட்டபடி முக்தி, மோட்சம் அறிந்துவிட்டோம் என்றே வைத்துக்கொள்ளலாம். அது எப்போதைய்யா கிடைக்கும்? என்று கேளுங்கள். அதற்கு என்னபதில் கிடைக்கும் தெரியுமா? முக்தி மோட்சம் என்பது நாம் இறந்த பிறகு கிடைக்கும் என்பார்கள். ஐயா, நான் இறந்த பிறகு கிடைப்பதற்கு இப்போது நான் இதை, நீங்கள் சொல்வதை கடைபிடிக்கவேண்டுமா? அப்போது கிடைப்பதை நான் எப்படி அறியமுடியும்? என்று மறு கேள்வி கேட்டால், அதற்கு பதில் கிடைக்குமா? யார் அதற்கான பதிலை தருவார்கள்?

இப்படியான சூழலில்தான், சொர்க்கம் நரகம் என்பது காலாவதி ஆகிவிட்டது. பாவம் புண்ணியமும் சிலருக்கு காலாவதி ஆகிவிட்டது. அதுபோல இந்த முக்தி மோட்சம் என்பது காலாவதி ஆகிவிடுமோ?!

ஆனால், பாவம் புண்ணியம் இருக்கிறது, அது பாவம், அறம் என்ற சித்தர்களின் கருத்தாக. அதுபோல முக்தி மோட்சம் இருக்கிறது. எங்கே? இறந்த பிறகா? நாம் வாழும் பொழுதே இருக்கிறது, கிடைக்கிறது என்பதுதான் உண்மை.

ஆனால் உலகில் வாழும் பெரும்பாலோர், எல்லாவற்றையுமே மறுத்து, ஒதுங்கி வாழ்கிறார்கள் என்பதையும் நாம் அறிவோம் தானே?! இப்பொழுது நாம்  முக்தி மோட்சம் என்பதற்கான, உண்மை அறிதலுக்கு வருவோம். 

இதோ இந்த இணைப்பின் வழியாக, இணையத்தில் காணலாம்: உலகின் மிகச்சிறந்த முக்தி மோக்ஷம் உண்மை விளக்கம்!

வாழ்க வளமுடன்.

Why some of best chances missing in my life?!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வாழ்க்கையில் நல்ல வாய்ப்பு ஏன் தட்டிக் கழித்துக்கொண்டே இருக்கிறது?!


பதில்:

இதற்கு பதில் உங்கள் கேள்வியிலேயே இருக்கிறது எனலாம். எப்படி தெரியுமா? இதோ, வாழ்க்கையில் நல்ல வாய்ப்பு இருக்கிறது, ஏன் தட்டிக் கழித்துக் கொண்டே போகிறது? என்று சொல்லலாம். ஆம், ஒருநாளில், நீங்கள் கண்விழித்தது முதல் என்ன நிகழ்கிறது? என்ன நிகழ்ந்தது என்று சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் கண்விழித்ததே நல்ல வாய்ப்பு தானே? உலகில் எத்தனையோ மனிதர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் போகிறதே?! உண்மைதானே?!

எனவே நீங்கள் கண்விழித்தது நல்ல வாய்ப்பு, முதலாவதாக கிடைத்துவிட்டது. பிறகு இயற்கை கடன்களை தீர்த்துவிட்டீர்கள். அதுவும் இயற்கை உங்களுக்கு வழங்கிய வாய்ப்புத்தான். இல்லை என்று மறுத்துவிடுவீர்களா? அடுத்ததாக நல்ல காஃபி, தேனீர் உங்கள் வாழ்க்கைத்துணைவர் தருகிறார். நீங்கள் அவருக்கு தயாரித்துக் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதுதான். திருமணம் ஆகாதவர்களுக்கு, தாயோரோ, உடன்பிறந்தோரோ தயாரித்து தரலாம். சரியான நேரத்திற்கு காலை உணவும் கிடைத்துவிடுகிறது. உணவகத்திற்குப் போய் சாப்பிட்டாலும் கூட, யாரோ ஒருவர் உங்களுக்காக சமைத்து தருகிறார். யாரோ ஒருவர் உங்களுக்கு பரிமாறுகிறார். இப்படி எல்லாவகையிலும் நல்ல வாய்ப்பு கிடைக்கிறதுதான்.

ஆனால் இதையெல்லாம் நாம், நல்ல வாய்ப்பாக எடுத்துக் கொள்வதும் இல்லை, அப்படி கருதிக்கொள்வதும் இல்லை. நாம் என்ன நினைக்கிறோம் என்றால், நான் கேட்டது, நான் எதிர்பார்த்தது கிடைக்குமா? கிடைக்கவில்லையே என்று இந்த எதிர்பார்ப்பினால், ஏற்கனவே கிடைக்கின்ற எல்லா வாய்ப்புக்களையும் கவனம் செலுத்தாமல் இழந்து விடுகிறோம். இகழ்ந்தும் விடுகிறோம்.

இதற்கு காரணம், நாமும், நம்முடைய மனமும், அதில் எழுகின்ற எண்ணங்களும், இதனோடு தொடர்புடைய மூளையும் பரபரப்பாகவே இருக்கிறது. அமைதியும் பொறுமையும் இல்லை. இந்த அமைதியையும், பொறுமையையும் உங்களுக்குள்ளாக கொண்டு வாருங்கள். உண்மையை அறிவீர்கள். உங்களைச்சுற்றி எண்ணற்ற வாய்ப்புக்கள் கொட்டிக்கிடப்பதை அறிவீர்கள்! 

வாழ்க வளமுடன்.

How vethathiriyam make understand the God to us?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.



கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, கடவுளை வேதாத்திரியம் எப்படி காண்கிறது என்று விளக்குவீர்களா?

பதில்:
வழக்கமாக நாம் இங்கே குறிப்பிடுவதுண்டு, கட+உள் என்ற செயல்குறிப்புத்தான் கடவுள் என்ற பெயர்ச்சொல்லாக மாறிவிட்டது. இதைச் சொல்லும்பொழுதே அந்த கடவுள் எப்படி காண்பது என்பதும், எதுவாக இருக்கும் என்ற ஊகமும் கிடைத்துவிடுகிறதுதானே?!
கடவுள் தனியாக இல்லை, நமக்குள்ளாக இருக்கிறதோ? என்ற ஐயப்பாடு எழுந்தால்கூட போதுமானதுதான்.

ஆனால் பெரும்பாலோர் என்ன சொல்லுவார்கள் தெரியுமா? அப்படியெல்லாம் இல்லை, உயர்ந்த பெரிய கோவில்களிலும், வழிபாடு தளங்களிலும், மலை உச்சிகளில் உள்ள வழிபாட்டு நிலைகளிலும் தான் இருக்கிறது என்பார்கள். தவறில்லை. அவரவர் எப்படி அந்தந்த வயதில், கடவுள் என்ற நிலையை புரிந்து வைத்திருக்கிறார்களோ அதன்படி அவர்கள் அதை புரிந்துகொண்டு, வழிபடுகிறார்கள் என்பதுதான் உண்மை. இதையே பக்தி மார்க்கம் என்று நாம் அழைக்கிறோம். அதாவது சராசரி மனிதருக்கான இறையுணர்தல் பாதை என்றும் சொல்லலாம்.

ஆனால் யோகத்தில் உள்ளவர்கள், பக்தியை கடந்து, அதன் உண்மை என்ன? என்று அறிந்துகொள்ள ஆர்வமும், முயற்சியும், உந்துதலையும் பெற்றவர்கள், தகுந்த குருவை நாடி, அவர் வழியாக குண்டலினி எனும் உயிராற்றல் திணிவு சக்தியை எழுப்பிக்கொண்டு, தவம் இயற்றி உண்மையான இறையை, கடவுளை காண்கிறார்கள்.

வேதாத்திரியம் என்பது, எளியமுறை குண்டலினி யோகமாகும். உலகில் இருக்கும் பலவித யோகங்களின் அடிப்படையில் உள்ள சிரமங்களை எல்லாம் நீக்கி, குருமகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், உலக மக்களுக்காக வழங்கியதாகும். வேதாத்திரியத்தில் கடந்து உள்ளே சென்றால், இறையை நாம், நமக்குள்ளாக ‘அறிவாக’ காண்கிறோம். அறிவு என்பது இங்கே உயர்ந்த மெய்யறிவு என்று பொருளாகும். வெறுமனே சும்மா, படிப்பினாலும், அனுபவத்தாலும், இயற்கையாகவும் பெறும் மூளை செயல்பாட்டு அறிவு அல்ல. இது உணர்வால் நாம் பெறும் உண்மை அறிவு ஆகும்.

இந்த அறிவு, விவேகம் என்றும் வழங்கப்படும். இந்த விவேகம், வேகம் என்ற ஆற்றலோடு, பிரபஞ்சத்தை தாங்கிக் கொண்டு இருக்கிறது. இந்த வேகம், விவேகம் என்பதையே ‘சித்தர்கள் வெட்டவெளி’ என்று குறிப்பிட்டார்கள். 
வேதாத்திரியத்தின் வழியாக ஆழ்ந்து செல்லச்செல்ல இந்த உண்மையை நீங்களும் உணர்வீர்கள்.

வாழ்க வளமுடன்.

What is the old method to fix the meditation energy stagnation?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, சாந்தி தவம் அந்தக்காலத்தில் இல்லை என்றால், வேறெப்படி சமாளித்தார்கள்?


பதில்:

உண்மைதான். வேதாத்திரி மகரிஷியின் காலத்திற்கு முன்பே, சாந்தி தவம் என்ற இறங்குபடி தவம், யாரோலோ எங்கேயோ உருவாக்கம் பெற்று உலகில் நடைமுறையில் இருந்துவந்திருக்கிறது. ஆனால் அது எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் பரலாக்கப்படவில்லை. இதனால், வழக்கமான, கடினமான, பிரச்சனைகள் மிகுந்த தவமுறைகள்தான் அங்காங்கே செயல்முறையில் இருந்தன. அதனால், தவம் இயற்றிடும் யோகியர்கள் பலவழிகளில் துன்பமே அனுபவித்தனர் என்பதுதான் உண்மை.

சாந்தி யோகம் என்ற சாந்தி தவத்தை நமக்கு வழங்கிய வேதாத்திரி மகரிஷி அவர்களுமே, தன்னுடைய தவ ஆற்றலின் தேக்கத்தால் அவதியுற்றார் என்று நீங்கள் அறிவீர்களா? அந்த தவ ஆற்றலின் தேக்கப்பிரச்சனைகள் குறித்து அவரே அனுபவமும் பெற்றிருக்கிறார். அதை தன்னுடைய உரைகளிலும், என் வாழ்க்கை கதை நூலிலும், ஞானக்களஞ்சிய கவிகளிலும் குறிப்பிட்டுள்ளார். நீண்ட நாட்கள் அந்த பிரச்சனைகளுக்கு வழிதெரியாமல் திண்டாடி, பிறகுதான் அதை வழிப்படுத்திக்கொள்ள அவருக்கு வழிபிறந்தது. அது எப்படி? எங்கு என்பதை, நம் ‘வேதாத்திரிய யோகா’ காணொளி தளத்தில் பதிவாக தந்திருக்கிறேன். நீங்கள் என்னுடைய குரல்வழியாக உண்மையை அறிந்துகொள்ளலாம்.

-

இதோ அதற்கான சுட்டி(Link): https://youtu.be/hvSv2YuMhyg?feature=shared

-

வாழ்க வளமுடன்.
-

உலகம் பார்ப்பதற்கு முன்பாகமவே, உங்களுக்கு மட்டுமே முதலில் காணக் கிடைக்கும் பதிவுகள் பெறலாம், . உறுப்பினராக இணைந்துகொள்க.

Join this Channel - Only you can get posts that are available to see first, before the world sees it. 

https://www.youtube.com/channel/UCKov60ULoBQ76KIiUXhLL-A/join

-


Suppression for Yoga in ancient times


விந்துவை அடக்குதல் சாத்தியமானதா?


அந்தக்கால வாசியோக முறைகள் வழியாக யோகத்தில் இணைந்துகொண்ட அனைவரும், பிரம்மச்சார்யம் என்ற இளமைநோன்பு ஏற்று, வீடு, சுற்றம், ஊர், உலகம், ஆசாபாசம் விலக்கி, தனியே காடுஏகி, விந்துவை அடக்கியே, குண்டலினியை மூலாதாரத்திலிருந்து, பயிற்சிகளால் உயர்த்தி ஏற்றினர் ஓவ்வொரு ஆதாரமாக ஆக்கினை வரை! இதற்கு பன்னிரண்டு ஆண்டுக்காலம் ஆகிற்று. அப்படியானால்?

ஆம் அவர்கள் இல்லறவாழ்வை விட்டு விலகி, பாலுறவையும் தவிர்த்துத்தான் பன்னிரண்டு ஆண்டுக்காலம்...

எதனால் அப்படி செய்தார்கள்? அப்படி என்ன தேவையும் அவசியமும்? என்ற கேள்விகளுக்கு இந்த வேதாத்திரி யோகா, வகுப்பறை காணொளி உங்களுக்கு உதவிடும். இணைப்பு கீழே இருக்கிறது. காண்க!

அத்தகைய முன்னோர்களை, சித்தர்களை, ஞானிகளை, மகான்களை போற்றி வணங்குவோம். அவர்கள் பெற்ற அனுபவமே, நமக்கு குருமகான் வேதாத்திரி மகரிசியின் எளியமுறை குண்டலினி யோகம் ஆகிற்று!

இறையாற்றலே, எளிமையாக்கி தந்ததுபோன்ற அதிசயம் தானே?! வாழ்க வளமுடன்!

-
-

Can you explain how we get wealth through yoga?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, எனக்கு பணமும் பொருளும் எப்போது கிடைக்கும் என்பதை யோகத்தில் அறிந்துகொள்ள முடியுமா?


பதில்: 

உங்களுக்கு பணமும் பொருளும் மட்டுமல்ல, எல்லா செல்வ வளங்களும் கிடைக்கவேண்டும் என்பதுதானே உண்மை. இந்த பணமும் பொருளும், எல்லா செல்வ வளங்களும்,  இந்த உலகில் வாழும் எல்லா மனிதர்களுக்கும் தேவையானது என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை. எப்போது கிடைக்கும் என்று தெரிந்து கொள்வது மட்டுமல்ல. நிறைவாக தொடர்ந்து கிடைப்பதையும் நாம் யோகத்தின் வழியாக தெரிந்து கொள்ள முடியும். இது ஒன்றும் மாயாஜால வித்தை என்று நினைக்காதீர்கள். நிச்சயமாக நடக்கக்கூடியதுதான். அதை எப்படி என்று பார்க்கலாமா?!

இல்லை நீங்கள் பொய் சொல்லுகிறீர்கள்! அதெப்படி யோகத்தின் வழியாக அறிந்துகொள்ள முடியும்? என்று ஒரு கேள்வியை நீங்கள் இப்பொழுது முன்வைத்தால், யோகத்தின் வழியாக கிடைக்காது என்பது உங்கள் நம்பிக்கையாக இருக்கிறது என்று அர்த்தமாகிறது. அதாவது இந்த கேள்விக்கான பதில் ஏற்கனவே உங்களுக்கு தெரிந்திருக்கிறது. அதனால் இங்கே என்னிடம் கேட்ட கேள்வியே தப்பாகவும் மாறிவிடுகிறது அல்லவா?!

ஆனால், யோகத்தில் அறிந்துகொள்ள முடியும், பணமும் பொருளும், எல்லா செல்வ வளங்களும் கிடைக்க, அதற்கு துணையாக யோகமும் உதவி செய்யும் என்பது உண்மையே! அது குறித்த விளக்கத்தை, இங்கே ‘வேதாத்திரிய யோகா’ காணொளி தளத்தில் காணலாம்!

-

அதற்கான இணைப்புச்சுட்டி இதோ: பிரபஞ்ச இயற்கை ஆற்றல் உங்களுக்கு பணம் பொருள் செல்வவளம் தருமா?

-

வாழ்க வளமுடன்.

Is it true to say that there is a purpose in the birth of man?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, ஏதோ ஒரு நோக்கம், மனிதனின் பிறப்பில்  இருப்பதாக சொல்லுவது உண்மையா?


பதில்:

இந்த கேள்விக்கான பதிலை நீங்கள், உங்களுடைய வாழ்க்கையிலேயே புரிந்துகொள்ள முடியும் என்பதே உண்மை. நான் தனியாக விளக்கிச் சொல்வதற்கு தேவையே இல்லை என்று நினைக்கிறேன். உங்களைப்போலவே எல்லோருமே இந்த சந்தேகத்தில்தான் இருந்திருப்பார்கள். நாளடைவில், தங்கள் வாழ்வில் நிகழும் சம்பவங்கள், அது தொடர்பான துன்பம், இன்பம், குறை, நிறை இப்படி பலவகைகளில் அனுபவம் பெறும்பொழுது, நம்முடைய வாழ்வில், இப்படியான சராசரி வாழ்வையும் தாண்டி ஏதோ ஒன்று இருக்கிறது. அது என்ன என்ற கேள்வி பிறந்துவிடும்.

ஒருசிலர் தானாகவே அதற்கான பதிலை கண்டுபிடித்து அதற்கான வழியில் செல்ல தயாராகிவிடுவார்கள். ஒருசிலர் பக்தி, வேதாந்தம், ஆன்மீகவாதிகள், மகான்கள், ஞானிகள் தருகின்ற விளக்கங்களின் வழியாக தெரிந்துகொள்ள முயற்சிப்பார்கள். சிலர் தன்னுடைய வாழ்வில் கிடைக்கக்கூடிய விளக்கத்திற்காக, யோகத்தில் தன்னை இணைத்துக் கொள்வார்கள்.

ஆனாலும் பெரும்பாலோர், நம்முடைய பிறப்பில் எது இருந்தால் என்ன? இப்போது வாழ்வோம், அதெல்லாம் கடைசி காலத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவுசெய்து, வழக்கமான வாழ்வையே வாழ்ந்து அனுபவிக்க தயாராகிவிடுவார்கள். நான் பிறந்தே தப்பு, நான் பிறந்த நேரம் சரியில்லை, என் ஜாதகம் பிரச்சனை, கிரகக்கோளாறு, போன பிறவியில் நான் செய்த பாவம், தெய்வத்திற்கு என்மீது இரக்கமே இல்லை, கடவுளே இல்லை, எல்லாம் பொய், வாழ்க்கையும் பொய் என்பதாக அப்படி இப்படி என்று புலம்பிக்கொண்டே வாழ்க்கையை ஓட்டுவார்கள். அவர்களை வேறொன்றும் செய்யவேண்டாம், அவர்கள் தேர்ந்தெடுத்தது அது என்றால் நாம் என்ன செய்யமுடியும்?

நீங்கள் இந்த கேள்வி கேட்டதே ஒரு நல்ல நகர்வு என்று சொல்லலாம். அதற்காக உங்களை பாராட்டுகிறேன்.

மேலும் தெளிவான விளக்கம் பெற, இந்த காணொளியில் கேட்டு அறியலாம். உண்மைகளை அறிய குரல்வழி விளக்கம் போதுமானது என்பதால், குரல்பதிவாக தந்திருக்கிறேன். 

வாழ்க வளமுடன்.

-