Who doesn't believe in God, can rise if he, she comes into yoga? | CJ

Who doesn't believe in God, can rise if he, she comes into yoga?

Who doesn't believe in God, can rise if he, she comes into yoga?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, என் நண்பருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை, அவர் யோகத்தில் வந்தால் உயரமுடியுமா?


பதில்:

யோகம் குறித்த ஒரு உண்மையை நீங்கள் புரிந்துகொள்வது வேண்டும். யோகம் என்பது உலகில் வாழும் எல்லா மக்களுக்கும், இனி வரப்போகிற தலைமுறை மனிதர்களுக்கும் பொதுவானது தான். இதில் மாற்றுக்கருத்தே இல்லை. கடவுள் நம்பிக்கை இல்லாதவர் எப்படியேனும் வேறேதோ ஒன்றின்மீதோ, இயற்கையின் மீதோ நம்பிக்கை வைத்திருக்கலாம். அப்படி நம்பிக்கை கொஞ்சமாவது இருந்தால் மட்டுமே, யோகம் என்பது என்ன? என்றாவது தெரிந்துகொள்ள ஆர்வம் பிறக்கும். பொதுவாகவே, உலகில் உள்ள யாருமே உடனடியாக இந்த யோகத்தில் ஆர்வமாக வந்து இணைந்து கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பது தவறு!

யோகத்தை நேரடியாக அணுகிட முடியாத எளிய மக்களுக்காகவேதான், யோகத்தில் உயர்ந்த முன்னோர்கள், பக்தியை உருவாக்கி அதன் வழியாக நன்மைகள் பெற்றிட வழி வகுத்தார்கள். அதையும் கூட கடவுள் (கட+உள்) என்ற வினைச்சொல்லாகவும் அமைத்தார்கள்.

ஒரு மனிதர் இப்பொழுது யோகத்தில் இணைந்துகொண்டு, தன்னை திருத்தி, தன் கர்ம வினைப்பதிவுகளின் களங்கம் நீக்கி, தன் வாழ்வில் பிறவி நிலையை உயர்த்திட நினைக்கிறார் என்றால் அதற்கு காரணம், அவருடைய முந்தைய தலைமுறையினர்களான, பெற்றோரோ, தாத்தா, பாட்டியோ, அதற்குமுன் இருந்தவர்களோ நினைத்திருக்கலாம். அந்த நினைப்பு வழிவழியாக வந்து, இவருக்கு உந்துதலை தந்திருக்கிறது என்பதுதான் அர்த்தம். இப்படியான ஒருவர், யாருடைய ஆலோசனையும் இன்றியே தானாக, யோகத்தில் இணைந்துவிடுவார்கள். இது உங்கள் வாழ்வில், உங்களுக்கே கூட நிகழ்ந்திருக்கலாம்.

அதுபோல, கடவுள் நம்பிக்கை இல்லாதவர், எது கடவுள் என்ற தேடுதலைக் கொண்டிருந்தால், யோகத்தில் இணைந்து உயரலாம். அதுவல்லாது கடவுளே இல்லை, கடவுளே பொய், அதற்கு ஈடாக இயற்கையை மதிப்பளிப்பதும், இயற்கையை வனங்குவதும்கூட முட்டாள்தனம் என்ற ரீதியில் இருப்பாரேயானால், யோகத்திற்கு அவராகவும் வரமாட்டார். நீங்கள் ஆலோசனை தந்தாலும் வரமாட்டார்.

மேலும் பக்தி என்பது யோகத்திற்கான முதல்படியும் ஆகும். பக்தி இல்லாமல் நேரடியாக யோகத்திற்கு வருவதும், அதை பின்பற்றுவதும் கடினமே!

வாழ்க வளமுடன்.

-