If we join in yoga, I think money earning will be lost. Correct? | CJ

If we join in yoga, I think money earning will be lost. Correct?

If we join in yoga, I think money earning will be lost. Correct?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பணம் என்ற ஒன்றை வைத்துத்தானே வாழவேண்டியுள்ளது. யோகத்திற்கு வந்துவிட்டால் அதில் இழப்பு வந்துவிடுமே?!


பதில்:

உங்களுடைய புரிதலில் தவறு இருக்கிறது. இல்லையென்றால் யாரோ உங்களுக்கு தவறான தகவல்களை தந்திருக்கிறார்கள் என்றும் சொல்லலாம். முதலாவதாக யோகத்தையும், பணத்தையும் இணைத்து சொன்னது யார்? எதிர் எதிராக சொன்னதும் யார்? என்று தெரியவில்லை. ஆனால் பற்பல கதைகள் சொல்லி மக்களை, உங்களைப்போன்ற பலரை குழப்பி வைத்திருக்கிறார்கள் என்று சொல்லமுடியும்!

மனிதர்களாகிய நாம் ஆதிகாலத்தில் விலங்குகள் போல, வேட்டையாடி, உண்டு, உறங்கி வாழ்ந்து வந்தோம். அந்த வாழ்வில் தொடர்ச்சியில், பல்லாயிரம் ஆண்டுகள் அனுவமாக அறிவில் உயர்ந்து, ஒருவருக்கொருவர் பயண்பாடு கொள்ளவும், இன்னொருவருக்கு உதவவும் பண்டமாற்றும், பணமும் வந்து சேர்ந்தது. முக்கியமாக யாரும் யாரையும் ஏமாற்றி, சோம்பேறியாக வாழ்ந்திடக்கூடாது என்ற நிலையிலும், ஒரு வேலை அதற்கான கூலி என்ற முறையும் வந்துவிட்டது. நவீன கால மாற்றத்தில், வேலை, வியாபாரம், தொழில், நிறுவனம் என்று பலவாறாக உலகளவில் மாற்றம் வந்துவிட்டது. இத்திறமைகளை கற்றுக்கொடுக்க எண்ணற்ற கல்வி நிறுவனங்களும் உள்ளன. எனவே எல்லாவற்றிற்கும் பணம் முதன்மை என்பதில் ஐயமில்லை. அந்தப்பணத்தை சம்பாதிப்பது ஒவ்வொரு மனிதனின் கடமை என்பது உலகம் ஏற்றுக்கொண்ட உண்மை.

இங்கே யோகம் எப்படி பணத்திற்கு விரோதமாக போய்விட்டது என்று தெரியவில்லை. யோகத்திற்கு வந்துவிட்டால் ஏன் பணத்தை ஒதுக்கிடவேண்டும்? ஏன் பணத்தை வெறுக்கவேண்டும்? சம்பாத்தியத்தை விட்டுவிட வேண்டும்? அப்படி பணத்தை விட்டுவிட்டால், யோகத்தில் சென்றவர், உலகில் எப்படி உயிர் வாழ்வார்?! யார் உதவுவார்? ஏதேனும் காட்டுக்குச் சென்று பழம், காய்கறிகள் பறித்து உண்பாரா? வாழும் மக்களிடம் யாசகம் கேட்டு புசிப்பாரா? தன் தேவைகளை எப்படி நிறைவேற்றுவார்? யோகத்தில் வந்ததினால், இந்த உலகுக்கு அவர் அவசியமில்லாதவராக போய்விடுவாரா? இப்படியான எத்தனையோ கேள்விகளுக்கு விடை இருக்கிறதா? சரி, இதற்கு யோகமே தேவையில்லை என்ற முடிவுக்கும் நீங்கள் போய்விடுவீர்களா? இல்லைதானே?!

நன்றாக புரிந்து கொள்ளுங்கள். யோகம் என்பது வாழ்வியல் உண்மை நெறியாகும். அப்படியான யோகத்தையும் பணத்தையும் முடிச்சுபோட்டு, விரோதம் செய்யவேண்டாம். உங்கள் வழக்கமான வேலை, தொழில், வியாபாரம், நிறுவனம் நடத்தி பணத்தை சம்பாதியுங்கள். அதில் எந்த சுணக்கமும் வேண்டாம். நீங்கள் யோகத்தில் இருந்தபடி இதைச் செய்தால், உண்மையும், அளவும், நிறைவும் அமைந்திருக்கும். அதன் பலனாக உங்களை பலர் தேடிவருவதையும், அப்படி வருகின்ற எல்லோருக்கும் நிம்மதியும் கிடைப்பதை காண்பீர்கள். அதன்மாற்றமாக உங்களுக்கு வாழ்வில் அமைதியும் கிடைக்கும். முக்கியமாக இந்த உலகில் நாம் வாழும் வரை, சம்பாத்தியமும் அதன் நிறைவும் நமக்குத்தேவைதான்!

வாழ்க வளமுடன்.