Does this Vethathiriyam teach the good ways to earn money?! | CJ

Does this Vethathiriyam teach the good ways to earn money?!

Does this Vethathiriyam teach the good ways to earn money?!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பணம் சம்பாதிக்க நல்லவழிகளை சொல்லித்தருகிறதா இந்த வேதாத்திரியம்?!


பதில்:

நிச்சயமாகவே சொல்லித்தருகிறது! அது எப்படி என்று வரிசையாக பார்க்கலாம். முதலில் மனிதனின் உலக கடமைகளில் ஐந்தில் ஒன்றாக, சம்பாத்தியம் ( பணத்தை சம்பாதித்தல்) இருப்பதை, குருமகான் வேதாத்திரி மகரிஷி விளக்கிச் சொல்லுகிறார். அதனால் அதை விட்டுவிடவும் கூடாது என்று வலியுறுத்துகிறார். உடனே எதிர்கேள்வி கேட்பார்கள் ‘அப்படியானால் சம்பாதித்துக்கொண்டே இருக்கலாமா?” என்று. (எதிராளியை மடக்குவதற்க்குத்தான் அவர்களுக்கு எவ்வளவு ஆசையும் தன்முனைப்பும்!) இதற்கும் விளக்கம் தருகிறார் நம் மகரிஷி! இப்படியெல்லாம் கேட்பார்கள் என்று அவருக்குத் தெரியாதா என்ன?

‘போதும் என்ற நிலை வரை சம்பாதியுங்கள்’ என்கிறார். அதாவது என் வாழ்நாளுக்கு இவ்வளவு பணமும், பொருளும் போதும். இதில் நான் நிறைபெறுகிறேன். இதற்கு மேல் வரக்கூடிய என் சம்பாத்தியத்தை, இந்த சமூகத்திற்கு ஏதேனும் வழியில் திருப்பி அளிக்கிறேன் என்ற முடிவுக்கும் வர வேண்டும் என்றும் சொல்லுகிறார். சரி ஏன் சமுகத்திற்கு திருப்பி அளிக்கவேண்டும் என்றும் கேட்பீர்கள் தானே? அதற்கும் விடை உண்டு.

‘நீங்கள் பிறந்தது முதல் இன்றுவரை, பல்வேறு நிலைகளில், பல்வேறு வகைகளில் உணவு, பயன்படுத்திய பொருட்கள், துணிமணிகள், வாழ்க்கை பொருட்கள், தன்னலமற்ற சேவைகள் இப்படியாக எல்லாவற்றிலும் சமூகமக்களின் உதவியை, உழைப்பை மறைமுகமாகவோ, நேர்முகமாகவோ பெற்றிருக்கிறீர்கள்தானே? அதை நாம் மறந்துவிடலாமா? அதற்கு நாம் நம்மாலான உதவியை திருப்பித்தரவேண்டுமே’ என்று வலியுறுத்துகிறார்.

மேலும் பணம் சம்பாதிக்க 1) நேர்வழிகளை தேர்ந்தெடுக்கவேண்டும் 2) உங்கள் உழைப்பின் வழியாகவே அந்த பணம் கிடைக்க வேண்டும் 3) உங்களுக்கு பணம் கிடைப்பதின் வழியாக எவரும் மனதளவிலோ, உடலளவிலோ பாதிக்கப்படக் கூடாது 4) உங்களுக்கு திருப்தி அளிக்கும் நிலைவரை சம்பாதிக்கலாம் 5) உங்கள் வாழ்க்கைக்கு போதுமானது என்றபோது திருப்தியில் நிறைவு பெற வேண்டும் 6) நீங்கள் வாழும் சமூகத்திற்கு திருப்பியளிக்கவேண்டும்! என்பதான ஆறு வழிகளை வேதாத்திரியம் சொல்லித்தருகிறது! 

இன்னும் விளக்கமாக அறிந்துகொள்ள இந்த காணொளி உதவும்: இங்கே காண்க!

வாழ்க வளமுடன்.