How do I know that I have made progress in my penance?! | CJ

How do I know that I have made progress in my penance?!

How do I know that I have made progress in my penance?!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, என்னுடைய தவத்தில் முன்னேற்றம் அடைந்திருக்கிறேன் என்பதை எப்படி அறிவது?!


பதில்:

உங்களுடைய அன்றாட நடவடிக்கை என்ற வரிசையில், முதலில் தவம் இருக்கவேண்டியது முக்கியம். ஒரு நாளை தொடங்கினால் அதில் தவம் இல்லை என்பதற்கே இடமில்லை. தவம் செய்து முடிக்காமல், அந்த நாள் தொடராது என்ற முடிவில் நீங்கள் இருக்கவேண்டும். அந்த நிலைக்கு இயல்பாக நீங்கள் வர வேண்டும். கட்டாயத்திற்காகவோ, சூழலுக்காகவோ, யாரோ ஒருவருடைய வற்புறுத்தலுக்காகவோ செய்யக்கூடாது. முக்கியமாக அவசர நோக்கமும் கூடாதுதான். வழக்கமான கடமையாக அதை ஏற்று, இயல்பாக செய்துமுடிக்க பழக்கிக்கொள்வதே சிறப்பாகும். இதுதான் உங்களுடைய தவ பயணத்தில் சிறப்பான முதல் முன்னேற்றமாகும்.

இன்றைக்கு தவம் செய்யாமல் விட்டுவிட்டேனே என்ற வருத்தம் ஏற்படும்படியான கடமையும், ஆர்வமும் இருத்தல் நன்று. ஒரு பொதுவான, இயற்கையான முன்னேற்றம் என்பதை, அடையாளமிட்டு சொல்ல முடிந்தால், உங்களுக்குள் ஒரு உற்சாகம் எப்போதும் இருப்பதை உணரலாம். இதன் காரணம் என்னவென்றால், வழக்கமாக, அதாவது, தவம் கற்றுக்கொள்வதற்கு முன்னதாக, பலவிதங்களில் பலவித எண்ணங்கள் வழியாக அலைபாய்ந்து கொண்டே இருந்த மனம், கொஞ்சமாவது அமைதியாக இருப்பதை உணரலாம். இந்த நிலை, உங்களுக்கு கிடைத்த இரண்டாவது முன்னேற்றம் என்று சொல்லலாம்.

இது எப்படி அமைகிறது என்றால், தவத்தின் வழியாக மனம், சிறிது சிறிதாக தன் விரிந்த இயக்கத்தையும், ஒன்றிலிருந்து ஒன்றாக மாறிக்கொண்டே இருந்த இயக்கத்தில் இருந்தும் ஒடுங்குகிறது. அதன் வழியாக உங்களுக்கு மன அமைதியும் கிடைக்கிறது எனலாம். இந்த இரண்டு முன்னேற்றங்களை நீங்கள் உறுதி செய்துகொண்டால், அதற்குப்பிறகு நானோ, வேறு யாரோ எடுத்துச் சொல்லும் முன்பாகவே, நீங்களே அந்த முன்னேற்றத்தை புரிந்து கொள்ள முடியும்.

ஆனாலும் உங்களால், இந்த இரண்டு முன்னேற்றங்களையும் உறுதி செய்ய முடியவில்லை என்றால், அதற்கு நீங்கள் மாற்றுவழி கண்டாகவேண்டும். தினமும் ஒருவேளை தவம், வாய்ப்பு இருந்தால் காலையும் மாலையும் தவம் என்பதை தொடர்வேண்டும். வாரம் ஒருநாள் அகத்தாய்வும், தற்சோதனையும் செய்துவர வேண்டும். இதனோடு, வழக்கமான தினசரி எளியமுறை உடற்பயிற்சியும், காயகல்ப யோகபயிற்சியும் செய்துவந்தால், உங்கள் தவம் நன்கு சிறக்க உதவிடும். ஏனென்றால், நன்கு தவம் முழுவதும், இயல்பாக உட்கார்ந்து தவம் செய்யவும், நல்ல உணர்வு கிடைக்கவும் துணையாக இருக்கும். மேலும் வாய்ப்பு கிடைத்தால், உங்கள் வேதாத்திரிய ஆசிரியரோடு கலந்துரையாடுங்கள். 

வாழ்க வளமுடன்.