Any solution for thyroid problems in the Vethathiriyam?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, நீண்ட நாளாக தைராய்டு பிரச்சனையினால் அவதிப்படுகிறேன். இதற்கு எளியமுறை உடற்பயிற்சி, தவம் உதவுகிறதா?
பதில்:
உலகில் வாழும் பெரும்பாலோருக்கு இந்த தைராய்டு எனும் நாளமில்லா சுரப்பியின் செயல்பாடு இரண்டு விதமான பிரச்சனைகளுக்கு ஆளாகிறது. அனேகமாக பெண்பாலருக்கு இந்த நோய் தொல்லை அதிகம் எனலாம். அவை 1) அதிகமாக சுரப்பதினால் வரும் பிரச்சனை 2) இயல்பை விட சுரப்புத்தன்மை குறைவதால் வரும் பிரச்சனை ஆகியன ஆகும். இதை ஆங்கிலத்தில் Hyperthyroidism and Hypothyroidism என்கிறார்கள். பெருபாலாக, பெண்களுக்கே இந்த அதிக, குறைவு பிரச்சனைகள் இருப்பதாக மருத்துவ அறிக்கை சொல்லுகிறது. நாம் உண்ணும் உணவில் உள்ள குறைகளும், நம்முடைய அன்றாட எண்ணம், செயல் ஆகியனவும் காரணமாக அமைகிறது என்றும் மருத்துவர்கள் சொல்லுகிறார்கள்.
முக்கியமாக இந்த பிரச்சனை வந்துவிட்டால், உடலின் வெப்ப சமநிலை மிகவும் பாதிப்படைகிறது. இதுவே அடுத்தடுத்த பல உடல், மன, நல பிரச்சனைகளுக்கு ஆதாரமாகிவிடுகிறது. எனவே முதலாவதாக, தகுந்த மருத்துவரின் ஆலோசனை கேட்டுக்கொள்வது நல்லது. அவரின் வழிகாட்டுதலின்படி, உங்களுடைய பிரச்சனை எப்படிப்பட்டது என்று நீங்களே புரிந்துகொள்ளவும் முடியும். அதற்குப்பிறகு மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்.
அந்த நிலையில் இருந்தவாறே, வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சியை நீங்கள் தொடரலாம். குறிப்பிட்ட பயிற்சியைமட்டும் செய்து பலன் பெற நினைக்காமல், முழுமையாக எல்லா பயிற்சிகளையும் செய்துவந்தால், மாற்றத்தை பெறமுடியும். நீங்கள் தொடர்ந்து செய்வதில்தான் உங்களுக்கான முன்னேற்றம் அமையும்.
மனவளக்கலை மன்றத்தை அணுகி, ஆமைப்பயிற்சி என்ற பயிற்சியை (பெண்பாலருக்கு மட்டும்) கேட்டு கற்றுக்கொள்ளலாம். கூடுதலான முன்னேற்றம் கிடைக்க வழியுண்டாகும். இந்த ஆமைப்பயிற்சியின் பெயர் காரணத்தை அறிந்தாலே, இதன் உண்மையும் பலனும் உங்களுக்குத் தெரியவரலாம். ஆமையின் சிறப்பான அந்த தன்மையை உணர்ந்துதான், உலகெங்கும் ஆமைப்பயிற்சி சொல்லித்தரப்பட்டு வருகிறது. நீங்கள் இணையத்தில் தேடினாலும் கிடைக்கும். ஆனால் முறையாக, முழுமையான பயிற்சி முறையோடு, மன்றத்தில், தகுந்த அனுபவம் மிக்க ஆசிரியரின் வழியாகவே கற்றுக்கொண்டால், தெளிவான நிலை கிடைக்கும் பலனும் உறுதியாகும், முக்கியமாக ஏதோ ஒருவாரம், பத்துநாள், ஒருமாதம் செய்தேன் ஒரு பலனும் இல்லை என்று புலம்புவதிலும், அதனால் கைவிடுவதிலும் பிரயோஜனம் இல்லை. மருந்து இல்லாமல் பயிற்சி மூலம், முழுமையாக குணப்படுத்துவதற்கு நிச்சயமாக நாட்கள் ஆகலாம். மேலும் அதன் நோய்தன்மை எப்படி இருக்கிறது என்பதும் முக்கியமானது.
என்றாலும் கூட, ஆமைப்பயிற்சியை விடுத்து, நீங்கள் இதற்கென்று, பொதுவெளியில் கிடைக்கும் முத்திரைகள் செய்தும் பழகலாம் என்றாலும் கூட, தகுந்த ஆலோசனையின் அடிப்படையில் செய்யவும். இல்லையென்றால், இருக்கும் பிரச்சனையை நீங்களே அதிகப்படுத்தும் விதமாக மாறிவிடும்! கவனம் தேவை.
சில அக்குபங்க்சர் முறைகளும், ஹோமியோபதி மருந்துகளும் உதவுகிறது என்றாலும் கூட, முறையான வழிகாட்டல் இல்லாமல் எடுத்துக்கொள்ள வேண்டாம். வேதாத்திரிய எளியமுறை பயிற்சி நல்ல தீர்வாக, உடல் வெப்பத்தை சமன் செய்து, நாளமில்லா சுரப்பிகளை சரியானபடி செயல்பட ஊக்குவிக்கிறது. உடல் உறுப்புக்கள் சிறப்பாக செயல்பட துணை செய்கிறது. சுவாசம், தூக்கம் இயல்பாக்குகிறது! என்றாலும் கூட மருத்துவரின் ஆலோசனையை தவிர்த்துவிடாதீர்கள்!
தவம் உதவுகிறதா என்ற கேள்விக்கு, மிகச்சிறந்த வழியாக, ஆக்கினை தவம் உதவுகிறது. ஏனென்றால், ஆக்கினை தவம், நம் உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகளின் மொத்தமான செயல்பாடுகளை நிர்ணயித்து, வழி நடத்துகிறது எனலாம். அதன்வழியாக, இந்த தைராய்டு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வும் கிடைக்கும். இங்கே தகுந்த குருவின் / ஆசிரியரின் ஆலோசனை முக்கியமாகும்!
வாழ்க வளமுடன்.