Is mantra and meditation true or fake? | CJ

Is mantra and meditation true or fake?

Is mantra and meditation true or fake?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மந்திரமும் தியானமும் ஏமாற்றுவேலை என்ற கருத்தை எப்படி எதிர்கொள்வது?!


பதில்:

இந்த உலகில் வழிவழியாக மனிதனின் அறிவு, இயற்கையாற்றலால் அனுபவமாகி விரிந்துகொண்டே இருக்கிறது. அறிவில் தெளிவும் வந்துகொண்டே உள்ளது. அப்படியாக ஓவ்வொரு மனிதருக்கும் ஏற்கனவே இருந்த நம்பிக்கையும், புதிய கருத்தும், கொள்கையும், அதன் வழி நடத்தலும் வந்துகொண்டே இருக்கும் என்பதுதான் உண்மை. மனித இனத்தின் வரலாறு அப்படியானது. ஆனால் குறிப்பிட்ட இன்னார்தான் இதை கொண்டுவந்தார் என்று நாம் முடிவு செய்வது சரியாகாது. மனித சமூகத்தின் ஒவ்வொரு மனிதனுடைய சிந்தனையும், அளவில் பெரிதோ சிறிதோ கணக்கே இல்லை. அதில் கலந்துதான் உள்ளது. 

திருவள்ளுவர் மகான் சொன்னது போல, எண்ணினாலே, நினைத்தாலே போதுமானது, அந்த அறிவு நம்மோடும் கலந்துவிடும். இதனால் வாய்ச்சொல்லாகவோ, எழுத்தாகவோதான் பிறருக்கு பகிர்ந்து, அவர் அறிவில் மாற்றம் தரவேண்டும் என்பது பொய்யாகிவிடுகிறது. 

பிரச்சனை என்னவென்றால், தான் கருதியதை, தன்னுடைய புரிதலை, தன்னுடைய நம்பிக்கையை, வெளி உலகில், பொதுவெளியில் பகிர்ந்து கொள்ளும் பொழுது, இப்படி நாம் சிக்கிக் கொள்வது உண்டு. அதாவது நம்முடைய நம்பிக்கையை, இன்னொரு மனிதரின் வார்த்தைகள் சிதறடிக்கும், குழப்பும், சிந்திக்கச் செய்யும், விட்டுவிலவிடவும் உதவும். அப்படியாகவே, மந்திரமும், தியானமும் ஏமாற்றுவேலை என்று சொல்லும் மனிதர்கள் நம்மிடையே உண்டு.

முக்கியமாக ஏற்கனவே சொன்னபடி, அவரவர்களுக்கு அவரவர் கருத்தை சொல்ல இந்த உலகில் இடமுண்டு என்பதை மறவாதீர். அவர் யாராக இருந்தாலும், எதிரியாக, நண்பராக இருந்தாலும் அதை நீங்களோ, நானோ மறுத்துபேச வழியில்லை. அப்படி அவர் பேசினால் அதை அந்த இடத்தில் நாம் மறுப்பதாக இருந்தால், அதற்கான ஆதார செய்திகளை சொல்ல வேண்டும். நிரூபிக்கவும் வேண்டும். அது எப்போதும் இயலாதது. எந்நேரமும் ஆதாரங்களை கைகளில் வைத்திருக்க முடியுமா? எனவே அந்த நேரத்தில் கேட்டு நாம் விலகிவிட வேண்டியதுதான்.

வாழ்க வளமுடன் என்ற வார்த்தையே ஒரு மந்திரம் ஆகும். அதை சொன்னால் வருகின்ற பலன்கள் அளப்பறியது. ஆனால் யாரும் நம்பத்தான் தயாரில்லை. ஒரு மனிதரின் பெயரைச் சொன்னால், அவர் திரும்பிப் பார்க்கிறார்தானே? ஏன் திரும்பவேண்டும்? அந்த பெயருக்கும் அவருக்கும் தொடர்பு உள்ளது. அதுபோலவே மந்திரத்திற்கும், அதன் தேவதா சக்திக்கும், நம் மனதிற்கும் தொடர்பு இருக்கிறது. அதை நிரூபணமும் செய்திருக்கிறார்கள். ஒலி அதிர்வுகள் ஏற்படுத்துகின்ற மாற்றம் அது. பிரபஞ்சத்தில் எங்கோ நிகழ்கின்ற, ஈர்ப்பு அலைகளை, இங்கே அறிந்து CERN - European Organization for Nuclear Research விஞ்ஞானிகள் மகிழ்வதும் நாம் அறிந்ததே! 

ஆனால், மந்திரமும் தியானமும் ஏமாற்றுவேலை என்று சொல்லும்பொழுது, அது உண்மையா என்று நமக்குத் தெரியும்தானே? ஒருவேளை உங்களுக்கே அந்த சந்தேகம் இருந்தால், இதுவரை நீங்கள் பெற்ற அனுபவத்தைக் கொண்டு, ஆராய்ந்து உண்மை அறியவேண்டும். அதுதான் முக்கியம். இப்படி அவர் சொல்லிவிட்டாரே என்று நீங்கள் வருந்துவதும், அவரை திருத்த முயற்சிப்பதும் வேண்டாம், அது தேவையும் இல்லை. உங்களுக்கு அதன் உண்மை தெரியுமே? பிறகென்ன? அவருக்கு அதில் கிடைத்த அனுபவம் அப்படி இருக்கலாம் அல்லது அதில் இறங்கி உண்மை தெரியாமலேயே அப்படி சொல்லலாம் தானே?! எனவே உண்மை உங்கள்பக்கமாக இருக்கையில், நீங்கள் நிறைவாக, அமைதியாக தொடரலாம்!

வாழ்க வளமுடன்.