கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, கடவுளை வேதாத்திரியம் எப்படி காண்கிறது என்று விளக்குவீர்களா?
பதில்:
வழக்கமாக நாம் இங்கே குறிப்பிடுவதுண்டு, கட+உள் என்ற செயல்குறிப்புத்தான் கடவுள் என்ற பெயர்ச்சொல்லாக மாறிவிட்டது. இதைச் சொல்லும்பொழுதே அந்த கடவுள் எப்படி காண்பது என்பதும், எதுவாக இருக்கும் என்ற ஊகமும் கிடைத்துவிடுகிறதுதானே?!
கடவுள் தனியாக இல்லை, நமக்குள்ளாக இருக்கிறதோ? என்ற ஐயப்பாடு எழுந்தால்கூட போதுமானதுதான்.
ஆனால் பெரும்பாலோர் என்ன சொல்லுவார்கள் தெரியுமா? அப்படியெல்லாம் இல்லை, உயர்ந்த பெரிய கோவில்களிலும், வழிபாடு தளங்களிலும், மலை உச்சிகளில் உள்ள வழிபாட்டு நிலைகளிலும் தான் இருக்கிறது என்பார்கள். தவறில்லை. அவரவர் எப்படி அந்தந்த வயதில், கடவுள் என்ற நிலையை புரிந்து வைத்திருக்கிறார்களோ அதன்படி அவர்கள் அதை புரிந்துகொண்டு, வழிபடுகிறார்கள் என்பதுதான் உண்மை. இதையே பக்தி மார்க்கம் என்று நாம் அழைக்கிறோம். அதாவது சராசரி மனிதருக்கான இறையுணர்தல் பாதை என்றும் சொல்லலாம்.
ஆனால் யோகத்தில் உள்ளவர்கள், பக்தியை கடந்து, அதன் உண்மை என்ன? என்று அறிந்துகொள்ள ஆர்வமும், முயற்சியும், உந்துதலையும் பெற்றவர்கள், தகுந்த குருவை நாடி, அவர் வழியாக குண்டலினி எனும் உயிராற்றல் திணிவு சக்தியை எழுப்பிக்கொண்டு, தவம் இயற்றி உண்மையான இறையை, கடவுளை காண்கிறார்கள்.
வேதாத்திரியம் என்பது, எளியமுறை குண்டலினி யோகமாகும். உலகில் இருக்கும் பலவித யோகங்களின் அடிப்படையில் உள்ள சிரமங்களை எல்லாம் நீக்கி, குருமகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், உலக மக்களுக்காக வழங்கியதாகும். வேதாத்திரியத்தில் கடந்து உள்ளே சென்றால், இறையை நாம், நமக்குள்ளாக ‘அறிவாக’ காண்கிறோம். அறிவு என்பது இங்கே உயர்ந்த மெய்யறிவு என்று பொருளாகும். வெறுமனே சும்மா, படிப்பினாலும், அனுபவத்தாலும், இயற்கையாகவும் பெறும் மூளை செயல்பாட்டு அறிவு அல்ல. இது உணர்வால் நாம் பெறும் உண்மை அறிவு ஆகும்.
இந்த அறிவு, விவேகம் என்றும் வழங்கப்படும். இந்த விவேகம், வேகம் என்ற ஆற்றலோடு, பிரபஞ்சத்தை தாங்கிக் கொண்டு இருக்கிறது. இந்த வேகம், விவேகம் என்பதையே ‘சித்தர்கள் வெட்டவெளி’ என்று குறிப்பிட்டார்கள்.
வேதாத்திரியத்தின் வழியாக ஆழ்ந்து செல்லச்செல்ல இந்த உண்மையை நீங்களும் உணர்வீர்கள்.
வாழ்க வளமுடன்.