Why someone reject the truthful and experienced advice?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, நம் வாழ்க்கையின் ஊடாக, நாம் அறிந்துகொள்ளும் நல்லதைக் கூட பிறருக்கு சொல்லமுடிவதில்லையே? அதை அவர்கள் ஏற்றுக்கொள்வதும் இல்லையே? ஏன்?
பதில்:
நல்ல சிந்தனைமிக்க கேள்விதான், அந்த அளவிற்கு நீங்கள் மாற்றம் பெற்றிருக்கிறீர்கள் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. இந்த உலகில் நல்லது, சரியானது, அறம் என்பது இதுதான் என்று, இதுவரையில் எத்தனையோ சித்தர்களும், ஞானிகளும், மகான்களும், தத்துவாதிகளும், மனிதவாழ்வின் முன்னேற்ற சிந்தனாவாதிகளும், சமூக படைப்பாளிகளும் சொல்லாதது அல்ல. உலகம் முழுவதும், எல்லைகளற்று, ஓவ்வொடு சமூகத்தோடும் இந்த அறம் சார்ந்த, ஒழுக்க பழக்க அறிவுரைகள் மக்களிடையே கலந்துதான் இருக்கிறது. என்றாலும் கூட, எத்தனை மக்கள் இந்த அறிவுரைகளை ஏற்று திருந்த்தம் பெற்று வாழ்ந்தார்கள், வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள், இனியும் வாழ்வார்கள் என்று கணக்கெடுத்தால் மிக சொற்பமே மிஞ்சும்!
இதற்கு காரணம் என்ன? அவரவர் வாழ்க்கைக்கு அவரவரே பொறுப்பு எனும் நிலையில், அடுத்தவர் சொல்வதை ஏற்று திருத்தம் பெறும் மனநிலைக்கு மனிதர்கள் வருவதில்லை. ‘இதெல்லாம் உங்களுக்கு சரியாகவருமய்யா, எனக்கு அதெல்லாம் சரிப்படாது’ என்ற சொல்லியே அதை தவிர்த்துவிடுவார்கள். நீங்கள் சொன்னதுபோலவே, உங்கள் வாழ்வின் ஊடாக, வந்த அனுபவத்தின் வாயிலாகத்தானே, நீங்கள் எது நல்லது? என்று தெரிந்துகொண்டீர்கள். அதுபோலவே, பிறமனிதர்களும், தங்கள் வாழ்வின் ஊடாக, பற்பல அனுவங்களுக்குப் பிறகுதான் அதை ஏற்றுக் கொள்வார்கள். இதுதான் மனித இயல்பு என்று ஒரு சப்பைக்கட்டு கட்டுவார்கள். வருமுன் காப்பது என்றால், அது மருத்துவத்திற்கு மட்டும்தானா?, மனித வாழ்க்கைக்கு இல்லையா?
மகான் திருவள்ளுவர்,
முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை
பின்னூறு இரங்கி விடும். (குறள் 0535)
என்று குறிப்பிடுகின்றார். இதன்படி, வரும் இடையூறுகளை முன்னே அறிந்துக் காக்காமல் மறந்து சோர்ந்தவன், பின்பு அவை வந்துற்றபோது தன் பிழையை நினைத்து இரங்குவான், என்பதாக மு. வரதராசன் அவர்கள் விளக்கம் தருகிறார்.
எனவே, உங்களுக்கு அனுபவமானதைப் போலவே, அவர்களும் அனுபத்தை பெற அனுமதியுங்கள், நீங்கள் முன்கூட்டியே, உங்கள் அனுபவத்தால் சொல்வதை, அவர்கள் ஏற்பது இல்லையே என்று வருந்தாதீர்கள். அதற்கு பதிலாக, குருமகான் வேதாத்திரி மகரிஷி சொல்வதுபோல, அவர்களை தினமும் ‘வாழ்க வளமுடன்’ என்று வாழ்த்தி மகிழுங்கள். அந்த வழியில் அவராக மாற்றம் பெற்றிட வாழ்த்து உதவிடும்.
வாழ்க வளமுடன்.