How to fix the deficit in materialistic life?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, ஏதோ ஒரு பற்றாக்குறையிலேயே வாழ்வதாக தோன்றுகிறது. அது எப்பொழுது மாறும்?!
பதில்:
நீங்கள் சொல்வது உண்மைதான். இந்த உலகில்வாழும் பெரும்பான்மையான மக்களுக்கு, ஏதோ ஒரு பற்றாக்குறையிலேயே வாழ்வதாக தோன்றுகிறது. சிலர் உங்களைப்போல வெளியில் சொல்லுவார்கள். சிலர் சொல்லுவதில்லை. இதற்கு பலவித காரணங்களை சொல்லுவார்கள். அதாவது, வாழ்க்கையில் இப்படி அப்படி நிறைவு செய்துகொள். அதை இதை கழித்தும், பெற்றும் வாழ பழகிக் கொள் என்று எண்ணற்ற அறிவுரைகள் கிடைக்கும். என்றாலும் கூட இதற்கு முக்கியமாக இருக்கக்கூடிய காரணம் ஒன்று உண்டு. அதன் வழியாகத்தான் இந்த பற்றாக்குறை நின்றுவிடுகிறது. அது என்ன?
அதுதான் நம்முடைய மனம். இந்த மனம் நமக்குள்ளாக இருந்தாலும், அதனுடைய மூலம் மிகப் பிரமாண்டமானது. அதை நாம் அறிந்துகொள்வதில்லை. அதற்கான வழியையும் தேடுவதில்லை. அசட்டையாக இருந்து தவிர்த்தும் விடுகிறோம்.
ஆனால், நாம் வாழ்கின்ற இந்த உலகில், அடிப்படையான விசயங்களை முழுமை செய்தாகவேண்டியது அவசியம். ஏனென்றால் பொருள் இல்லாமல் இந்த உலகம் இல்லை. உணவு, உடை, இருப்பிடம் என்பதோடு பொருளும், பணமும் அவசியமானது தான். அந்த பணத்தைப் பெற, வேலை, தொழில், வியாபாரம், உழைப்பு என்ற வகையில் நாம் செயல்பட வேண்டியதும் முக்கியமானது. இந்தவகையில் பற்றாக்குறையை, அதாவது அடிப்படை பற்றாக்குறையை சரி செய்தாகவேண்டும்.
இவை எல்லாம் இருந்தும், தனக்கும், தன் குடும்பத்திற்கும், வரக்கூடிய வாரீசுகளும் நிறைவாக வாழக்கூடிய அளவுக்கு இருந்தும் கூட, நீங்கள் பற்றாக்குறையை அனுபவித்தால், அதற்கு காரணம் மனதில் நிறைவில்லை என்பதுதான் அர்த்தம். அந்த மனம், இயல்பான அதன் ஆற்றலை, சக்தியை, நிலையை மறந்து சிக்கித் தவிக்கிறது என்பதுதான் உண்மை.
அத்தகைய மனதை, அதன் உண்மை நிலையை நோக்கி திருப்பினால் மட்டுமே, எல்லாம் இருந்தும் பற்றாக்குறையாக நினைக்கும் நிலை மாற்றமடையும். இதற்கு நீங்கள் யோகத்தில் இணைந்து, அதில் மனதையும் இணைத்தால் மட்டுமே மாறிடும். எளியமுறை குண்டலினி யோகமான வேதாத்திரியம் அதற்கு உதவிடும்!
வாழ்க வளமுடன்.