Best solution for peaceful family by Shri Vethathiri Maharishi
கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்சனைகளும், அதனால் மன வருத்தமும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறதே? மணமுறிவுக்கும் அதுவே காரணமாகிறதே? இதற்கு தீர்வு என்ன?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்சனைகளும், அதனால் மன வருத்தமும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறதே? மணமுறிவுக்கும் அதுவே காரணமாகிறதே? இதற்கு தீர்வு என்ன?
பதில்:
திருமணம் என்பதை ஆயிரம் காலத்து பயிர் என்றுதான் சொல்லிவருகிறார்கள். அத்தனை தலைமுறை வாழ்வுக்கு அது நிலைத்திருக்கக் கூடியது என்ற அர்த்தமாகிறது. ஆண் பெண் ஆகிய இருவரும், எங்கெங்கோ பிறந்தை வளர்ந்து வாலிபத்தில், அவர்களாகவே காதல் வயப்பட்டும், தகுந்த பெரியோர்களின் வழிகாட்டால் மூலமும் திருமணம் வழியாக, இல்லற வாழ்வை துவக்குகின்றனர். ஆனால், பிரச்சனை, மனவருத்தம் என்பது இந்த இரண்டு நிலைகளிலும் இருக்கிறது. காதல் என்ற நிலையில், மனமொத்து இருந்தாலும்கூட, திருமணம் ஆனபிறகு பல்வேறு சிக்கல்களில் அவர்களுக்குள்ளாக பிரிவினை வந்துவிடுவதை காண்கிறோம்.
பெற்றோரின் தேடுதலிலும், பெரியோர்களின் ஆசியிலும், திருமண வாழ்வில் நுழைபவர்களும், ஆரம்பகாலத்தில் இயல்பான, நிறைவான, மகிழ்ச்சியான நிலையிலே வாழ்வை ஆரம்பித்தாலும், பின்னாளில் அவர்களுக்குள்ளாகவும் பிரிவினை வந்துவிடுவதை காண்கிறோம். இரண்டிலுமே ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, அந்தந்த சூழலுக்கும், பிரச்சனைக்கும், எதிர்காலத்திற்கும் ஏற்றபடி பொறுமை, விட்டுக்கொடுத்தல், தியாகம் ஆகிய மூன்று உயர்ந்த குணங்களால் சரி செய்யமுடியும் என்று குரு மகான் வேதாத்திரி மகரிஷி வலியுறுத்துகிறார். அவரும் இல்வாழ்க்கையில் வாழ்ந்து அனுபவித்தவர் தானே?
இந்த பொறுமை, விட்டுக்கொடுத்தல், தியாகம் ஆகிய மூன்றையும், குடும்பத்தில் இருக்கிற யார் செயல்படுத்த வேண்டும்? ஆணா, பெண்ணா? கணவனா? மனைவியா? என்று கேட்கும் பொழுது, வேதாத்திரி மகரிஷி சொல்லுகிறார், ‘யாருக்கு அன்பு நிறைய இருக்கிறதோ அவர் அதை செயல்படுத்த வேண்டும்’ என்று பதில் தருகிறார். பொதுவாகவே, கணவன் மனைவி ஆகிய இருவருமே, புரிதலில் இருக்கக்கூடிய சிறிய, விளக்கமின்மைதான், பெரும்பாலான பிரச்சனைகளுக்கு காரணமாகிறது. அதை இருவருமே அமைதியாக பேசி, திருத்தம் பெற்றுக்கொள்ளவும் வழி உண்டு. நல்ல வழிகாட்டல் இருந்தால், உடனடியாக தீர்வும் பெற முடியும். அந்தவகையில், வேதாத்திரி மகரிஷியின், வழிகாட்டுதலை இங்கே பகிர்கின்றேன்.
வேதாத்திரி மகரிஷி சொல்லுகிறார்...
உண்மையான நிலை என்னவென்றால் நாம் செய்த பாவம் புண்ணியம் இரண்டும் நம்மிடத்திலே உள்ளன. இந்த இரண்டையும் சரிப்படுத்துவதற்கு இறைநிலை பாரபட்சமில்லாத நீதிபதியாக அவ்வப்போது செயலிலே விளைவு தந்துக் கொண்டிருக்க வேண்டுமென்று சொன்னால் நெருங்கிய உறவிலே, இணைந்த உறவிலே உள்ளவர்கள் மூலமாகத்தான் அதிகமான அளவு செயல்பட முடியும். விளைவு வரமுடியும். அப்பொழுது இறைவனுடைய வரமாகட்டும், இறைவன் தரும் படிப்பினையாகட்டும், கணவனுக்கு மனைவியும் மனைவிக்கு கணவனும் அவர்கள் மூலமாகத்தான் அதிகமாக வெளிப்பாடு உண்டாகும்.
இப்போது இந்த சிந்தனையை, மீண்டும் மீண்டும் உங்களுக்குள்ளாக ஓடவிடுங்கள். ஒருசில நாட்களில் உங்களுக்கான தெளிவில் நிறைவீர்கள். நீங்களே முன்வந்து, உங்களுக்குள்ளாக இருக்கும் பிரச்சனைகளில் இருந்து வெளிவந்து, அமைதியும், நிறைவும் கொண்ட குடும்ப வாழ்க்கையை வாழ தயாராவீர்கள் என்பது உறுதி!
வாழ்க வளமுடன்.
-