If you are a child, you can always be happy? Is that correct?
குழந்தைகளாக இருந்தால் எப்போதும் சந்தோஷமாக இருக்கலாம் என்ற கருத்து எல்லோரிடமும் நிலவுகிறதே? அது சரியானதுதானா?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா! குழந்தைகளாக இருந்தால் எப்போதும் சந்தோஷமாக இருக்கலாம் என்ற கருத்து எல்லோரிடமும் நிலவுகிறதே? அது சரியானதுதானா?
பதில்:
பொதுவாக அப்படிச் சொல்லிக்கொள்வது உலகவழக்கமே ஆகும். உங்களை நீங்களே கேட்டுப்பாருங்கள். நீங்கள் குழந்தையாக இருந்த பொழுது சந்தோஷமாக இருந்தீர்களா? அப்படியாக உணர்ந்தீர்களா? என்று கேட்டுக்கொள்ளுங்கள். என்ன பதில் சொல்லுவீர்கள்? அந்த வயதில் அப்படியாக எதும் தோன்றாது. ஆனால், எல்லாவற்றிலும் ஓர் இன்ப நுகர்வு மட்டுமே தலைதூக்கி இருக்கும். அதுவே உங்களுக்கென்று விபரம் வரும்வரையிலும் தொடர்ந்திருக்கும். பெற்றோரின் நிலை அறியாமல், அது எனக்கு வேண்டும். அப்போதான் நான் நன்றாக இருப்பேன் என்று கருத்தில் அடம்பிடித்த காலம் இருந்திருக்கும். பெற்றோரும், தன் பிள்ளையின் மகிழ்ச்சிக்காக, தாங்கள் வருந்தினாலும் கூட, பிள்ளை நன்றாக, சந்தோஷமாக இருக்கட்டும் என்று நினைத்திருப்பார்கள்.
குழந்தைத்தனத்தில் இருந்த ஒரு உணர்வு, சந்தோஷமாக ‘இப்பொழுது’ உங்களுக்குத் தெரிகிறது என்பதுதான் உண்மை. வளர்ந்த வயதிலும், உலகில், உங்கள் வாழ்க்கை சூழலில், தொழிலில், வேலைகளில், வியாபாரங்களில் பலவிதமான தொல்லைகளை பெற்று, கவலைகொண்டு, துன்பப்பட்டு வருந்தும் இந்த வேளையில்தான், அந்தக்கால குழந்தை சந்தோஷம் ஞாபகம் வருகிறது அல்லவா? அதுதான் உண்மை.
ஒரு பரிசோதனை செய்யுங்கள். உங்கள் குழந்தையிடம், நன்கு பேசத்தெரிந்த 3 வயது முதல் 12 வயதுக்குள்ளான குழந்தைகளிடம் (சிறுவர், சிறுமியர்) கேளுங்கள்.
‘இப்போது நீ சந்தோசமாக இருக்கிறாயா?’
‘அப்படின்னு யார் சொன்னா?’ என்று எதிர்கேள்வி கேட்பார்கள். அதற்குப்பிற்கு என்ன சொல்லுவார்கள் என்பதை உங்கள் வசமே விட்டுவிடுகிறேன். இப்போதைய, எல்லா குழந்தைகளும் கையில், கைபேசியோடு திரியும் இந்தக்காலத்தில், அவர்களும் பெரியமனிதர்கள் ஆகிவிட்டார்கள் அல்லவா?
அப்படியானால், அக்குழந்தைகளுக்கு சந்தோஷம் இல்லையா? இருக்கிறது, ஆனால் அதை உணரக்கூடிய நிலையில் அவர்கள் இல்லை. சரி, வளர்ந்து பெரியவர்களான நமக்கு சந்தோஷம் இருக்கிறதா? என்று கேட்டால், இருக்கிறது. ஆனால் நாம் அதை தவறவிட்டுக்கொண்டே இருக்கிறோம். உண்மையாகவா என்கிறீர்களா? ஆம், சந்தோஷம் எங்குமே போய்விடவில்லை. நாம்தான் அதை விட்டு விலகிக்கொண்டே இருக்கிறோம். குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், மகிழ்ச்சியும், மன நிறைவும், அமைதியும் எங்குமே நிறைந்திருக்கிறது என்று சொல்லுகிறார்.
ஆனால், உணர்ச்சிவசப்பட்ட மனதோடு, அன்றாட வாழ்க்கைச்சூழலில் அந்த மகிழ்ச்சியும், மன நிறைவும், அமைதியும் பெறக்கூடிய நிலையில், நாம் இல்லை. பரபரப்பான நிலையில் ஓவ்வொரு நொடியையும் கடந்துவிடுகிறோம்.
இதை எப்படி சரிசெய்யலாம்? இதற்கு துரியதவம் போதுமானது. நாள்தோறும் தவறாமல், அதிகாலையில் துரியதவம் இயற்றி அன்றைய நாளை துவக்குங்கள். மனமும் எண்ணங்களும் பூரிப்பான அந்த நிலையை, உங்களுக்குள் தக்கவைத்துக்கொள்ளுங்கள். சந்தோஷத்தை தேடவேண்டாம், அது அங்கேயே இருப்பதை உணரலாம். குழந்தைப் பருவத்திற்கு போகமுடியாததற்கு வருந்தப்படவும் தேவையில்லை.
‘இந்தக்காலத்திலே அப்படி இருந்திடவும் முடியாதுங்க, ஏன்னா, பொழைப்பு கெட்டுறும்ங்க’ என்கிறீர்களா? சரி அது உங்கள் நிலைதானே, தொடர்க!
வாழ்க வளமுடன்.
-