Why can't I achieve economic fulfillment? Let me know the any solutions!
தனிமனித பொருளாதார நிறைவு ஏன் என்னால் அடைய முடியவில்லை. எவ்வளவு உழைத்தாலும் அதற்கான வருமானம் கிடைக்கவும் இல்லை. நான் வேதாத்திரிய யோகத்தில் வாழ்த்திக்கொண்டும் வருகிறேன். இதை எப்படி சரி செய்வது?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா! தனிமனித பொருளாதார நிறைவு ஏன் என்னால் அடைய முடியவில்லை. எவ்வளவு உழைத்தாலும் அதற்கான வருமானம் கிடைக்கவும் இல்லை. நான் வேதாத்திரிய யோகத்தில் வாழ்த்திக்கொண்டும் வருகிறேன். இதை எப்படி சரி செய்வது?
பதில்:
இப்போதைய வாழ்க்கைச் சூழலில், நம் எல்லோருக்குமே எழக்கூடிய கேள்வி என்பதில் ஐயமில்லை. வேதாத்திரிய யோகத்தில் இருந்துகொண்டு, வாழ்த்திக்கொண்டும் வருகிறேன் என்பது சிறப்பு. சிலர், அதனால் இப்படி ஆகிற்று என்று வெட்டிக்கொண்டு ஓடிவிடுகிறார்கள். அது முற்றிலும் தவறு, சரியாக விளங்கிக்கொள்ளாமை ஆகும். எல்லாவற்றை விட்டுவிடு, அப்போதுதான் யோகம் சிறக்கும் என்று யார் உங்களுக்குச் சொன்னார்கள்? நீங்களாகவே தவறான முடிவில் இருந்திருக்கலாம்தானே? வேதாத்திரியம், இல்லறத்திலேயே நல்லறம் என்பதைத்தான் வழியுறுத்துகிறது என்பதை ஒருபோதும் மறவாதீர்கள். அதற்கு உதாரணம் யார்? என்றால், நம்முடைய குரு மகான் வேதாத்திரி மகரிஷியே ஆகும். அவரும் நம்மைப்போலவே வாழ்ந்து, தன் வாழ்வின் நிறைவில், நமக்கெல்லாம் யோகத்தை பரப்பிட, வாழ்நாளை அர்ப்பணித்தவர்.
இப்பொழுது உங்கள் கேள்விக்கு வரலாம். ‘தனிமனித பொருளாதார நிறைவு ஏன் என்னால் அடைய முடியவில்லை. எவ்வளவு உழைத்தாலும் அதற்கான வருமானம் கிடைக்கவும் இல்லை’ என்று தனிநபர், சுயதொழில், சார்பு தொழில், வியாபாரம் செய்பவர்தான் இப்படியான நிலையில் இருப்பார். நீங்களும் இதில் ஒன்றாக இருக்கலாம். அரசு வேலைகள், தனியார் தொழில், வியாபார, வேலை நிறுவனம் என்றால், இந்த கேள்வியும், குழப்பமும் தேவை இருக்காது என்பது பொதுவான கருத்து. எனினும், அவர்களுக்கும் கூட, சூழ்நிலை காரணமாக, பொருளாதார நிறைவு கிடைப்பதில்லை.
இதற்கு என்னவழி? இங்கே ஔவையாரின் தனிப்பாடல் ஒன்றை ஞாபகப்படுத்திக் கொள்ளலாம் என விரும்புகிறேன்.
அரியது கேட்கின் வரிவடி வேலோய்
அரிதரிது மானிடர் ஆதல் அரிது
மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது...
மனிதராக இந்த உலகில் பிறப்பது கடின வாய்ப்பானது என்று ஆரம்பித்து, உடல்குறையின்றி, கண்பார்வை பாதிப்பாகவும், செவி குறைபாடு கொண்டும் பிறக்காமல் இருப்பதும் கடினம். இதையும் நீங்கி பிறந்துவிட்டாலும் கூட, ஞானமும் கல்வியும் தகுந்த காலத்தில் கிடைப்பதும், அதை கற்றுத்தேர்வதும் கடினம் என்று ஔவையார் தொடர்கிறார்.
இப்படி, உங்களுக்கு தகுந்த காலத்தில், இந்த உலகில் கல்வி நிச்சயமாக கிடைக்க வேண்டியது அவசியம். ஏனென்றால், உலகம் முழுவதுமே, கல்வியை தொழில்சார்ந்து அமைத்துக்கொண்டு விட்டது. அந்தக்காலம் போல, பிறவித்திறமை, அடிப்படைத்திறமை என்பதற்கெல்லாம், வேலை வாய்ப்பை வழங்குவதில்லை. இந்த மாற்றத்தை நாம் புரிந்துகொண்டு, அதற்கேற்றபடி நம்மை கல்வியில் நிறைவு செய்துகொள்வது அவசியம். ஐயா, எனக்கு அப்படியான கல்வி இல்லையே? என்றால், மக்களின் தேவையறிந்து சேவையோ, வேலையோ, தொழிலோ, வியாபாரமோ செய்து பொருளாதார நிலையை பெறலாம். இது அன்றாட பிழைப்பைச் சார்ந்த நிலையாக இருக்கும். நீங்கள் இன்று உழைத்தால், அது உங்களுக்கான வருமானம் தரும் என்பது உறுதி. ஆனால் நிறுவனம் சார்ந்த வேலை என்றால், அந்த கவலை இன்றி, மாதம் முழுவதும் உழைத்தால், சம்பளம் உறுதியானது. இந்த வித்தியாசம் உணர்ந்து கொள்க.
குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் ‘பிறரை எதிர்பார்த்தல், தான் செய்யவேண்டிய கடமையை செய்யாதிருத்தல், அதை உணர்ந்தும் கூட செய்யாதிருத்தல்’ ஆகிய மூன்றுமே, வாழ்வில் துன்பம் எழுவதற்கு காரணமாக இருக்கிறது என்கிறார். மேலும் போட்டி மிகுந்த இவ்வுலகில், தனிமனித பொருளாதார நிறைவு உடனடியாக கிடைக்க வழியேதும் இல்லை. உங்களால் முடிந்த அளவில், தொடர்ந்து கொண்டே இருக்கவேண்டும். முக்கியமாக ஏற்கனவே சொன்னபடி, மக்களின் தேவை அறிந்து, சேவையாகவும், உதவியாகவும் இருக்கக்கூடிய தொழில், வேலை, வியாபாரம் என்பது முக்கியம். அப்போதுதான் அம்மக்கள் உங்களுக்கும் உதவி, உங்களின் உழைப்புக்கும் மதிப்புத்தந்து, உங்களை பொருளாதாரத்தில் உயர்த்திட துணை நிற்பார்கள்.
வேதாத்திரியத்தில் இருந்து கொண்டு வாழ்த்துவது பலனளிக்கிறதா? என்றும் சிலர் நினைப்பார்கள். ஆம் நிச்சயமாக பலன் தருகிறது. உங்களைச் சூழ்ந்து இருக்கும் தேவையற்ற குழப்பம், கவலை, துன்பம் இவற்றை நீக்கி, இன்னமும் உற்சாகமாக செயல்பட உங்களுக்கு உதவுகிறது. உங்களைச் சூழ்ந்து நல்ல அலைகள் இருக்கச் செய்கிறது. அதன் வழியாக மக்களின் நட்பை பெற வழி கிடைக்கிறது. உங்களின் உயர்வுக்கு துணையாகிறது. வாழ்க வையகம், வாழ்க வளமுடன் என்ற வாழ்த்தே போதுமானது. மேலும் உங்களுக்கு வாய்ப்பிருந்தால், சர்வ வஸ்ய தனாஆகர்ஷண சங்கபம் வாரம் ஒருநாள், மாதம் ஒருநாள் என்று பூஜையாக செய்து வரலாம் என்பது என்னுடைய பரிந்துரையாகும். இதற்கான இணைப்பையும் இங்கே தருகிறேன்.
https://www.youtube.com/watch?v=kEe1HiHyjsg&list=PLQQJZk6S322n6isludZDiMAAWLiErCYAl&pp=iAQB
வாழ்க வளமுடன்.
-