Every action will be recorded and it transform as a effect in human life, How? | CJ

Every action will be recorded and it transform as a effect in human life, How?

Every action will be recorded and it transform as a effect in human life, How?


மனிதன் ஒரு செயல் செய்தால் பதிவு உண்டாகிறது என்றும், அதுதான் அவனுடைய வாழ்வில் விளைவாகவும் மாறுகிறது என்று வேதாத்திரியம் சொல்லுகிறது. விளக்குக.

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மனிதன் ஒரு செயல் செய்தால் பதிவு உண்டாகிறது என்றும், அதுதான் அவனுடைய வாழ்வில் விளைவாகவும் மாறுகிறது என்று வேதாத்திரியம் சொல்லுகிறது. விளக்குக.


பதில்:

இந்த உலகில் வாழும், ஒவ்வொரு மனிதனுக்கும் மூன்று வகையிலான இயக்கம் உண்டு. அவை எண்ணம், சொல், செயல் ஆகியன ஆகும். தன் விருப்பத்திற்காகவும், சூழலுக்காகவும், தேவைக்காகவும், பிறருக்காகவும் இதை அவன், செய்யலாம். என்றாலும் விளைவு என்பதை, எந்த மனிதனும் முடிவு செய்துவிட முடியாது. ஓரளவு யூக்கிக்கலாம் எனினும், விளைவு என்பதில் இயற்கையின் நியதி நிச்சயமாகிவிடுகிறது. மனிதன், தன்னால் விளைந்த அந்த விளைவை ஏற்றுக் கொள்ளக்கூடிய கட்டாயமும் உண்டு. 

ஒவ்வொரு பதிவுக்கும் அது செயல்பட காலம் உண்டு. இயற்கையிலே எந்தத் தவறும் இருக்கமுடியாது. ஏற்கனவே ஒருவர் ஒரு தவறு செய்ய எண்ணியிருப்பார். அதைச் செயலிலே கொண்டுவர முடியவில்லை. அது அப்படியே பதிவாகி இருக்கிறது. காலத்தால் எண்ணிய எண்ணம் எப்படியும் செயல்பட வேண்டும். அவ்வாறு அவர் ஒருவருக்குத் தீங்கு செய்ய வேண்டும் என்று எண்ணிவிட்டால், அந்த எண்ணத்தை உணர்ந்து அழிக்கவில்லை என்றால் அதற்குரிய காலத்திலே அந்தத் தீமை செய்தே ஆகவேண்டும். 

ஆகவே அவரது எண்ணம் செயலாக வேண்டும். அதே சமயம் இங்கே நம்மிடத்தே செயல் பதிவு நீங்கவும் வேண்டும். இரண்டையும் இணைத்து இயற்கை ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி அவர் மூலமாக நமக்கு ஒரு வருத்தத்தைத் தந்தது. இதை உணரும்போது நாம் அவரை வாழ்த்தவே வேண்டும். நாம் மகிழ்ச்சியடையவும் வேண்டும். ஏனென்றால் நம்மிடம் உள்ள பதிவு ஒன்று வெளியாகிவிட்டது, அது செயலாகி அப்பதிவு கழிந்துவிட்டது என்று புரிந்துகொள்ளலாம்..

ஒரு மனிதனிடத்திலே நூற்றுக்கணக்கான பதிவுகள் இருக்கலாம்.. ஒரு விதையிலே மரம் இருப்பதுபோன்று, அந்த விதையை நட்டவுடனேயே - பூ, காய், பழம் எல்லாம் உடனே வந்துவிடுவது இல்லை. விதையானது முதலிலே சிறு செடியாக வருகிறது. காலத்தாலே, பல வாரங்கள் கழித்தோ, மாதங்கள் கழித்தோ, ஆண்டுகள் கழித்தோ மரமாகிய பின் பூ, காய், பழம் வரலாம். அதுபோன்று பதிந்த ஒவ்வொரு பதிவுக்கும் செயலாக மலர அதற்கு தகுந்த காலம் என்று ஒன்று உண்டு. 

அந்த அந்தக் காலத்தால் முறையாக அது எழுச்சி அடைந்து இயங்கிச் செயல்படும். ஆகவே "இடுக்கண் வருங்கால் நகுக" என்றுதான் திருவள்ளுவர் கூறினாரே தவிர, அந்தத் துன்பத்தை ஏற்படுத்தியவரை வருத்தவேண்டும் என்று கூறவில்லை. எனவே எவ்வாறு நாம் துன்பம் வரும்போது நகை புரிய வேண்டும்? சிரிக்கவேண்டும்? என்றால்.. உண்மையிலேயே ஏற்கனவே இருந்த நம்முடைய சுமை அல்லது பாவப் பதிவு (sins and imprints) ஒன்று இன்று நம்மிடம் அப்பதிவு செயலாகி கழிந்துவிட்டது என்று எண்ணும்போது, அத் துன்பத்தை ஏற்றுக்கொள்ளக் கூடிய இன்பமான உணர்ச்சிதான் அகத்தவப் பயிற்சியினால் பக்குவப்பட்ட குண்டலினியோக சாதகனுக்கு ஏற்படவேண்டுமே அன்றி, சினம் கொள்ளக் கூடாது.!

சினத்திற்குப் பதிலாக அத்தகைய ஞானம் கொண்ட கர்மயோக நெறி தான் அகத்தவப் பயிற்சி (Simplified Kundalini Yoga) மேற்கொள்ளும் குண்டலினியோகிக்கு மலர வேண்டும்.

வாழ்க வளமுடன்.

-

பதிலின் மூலம் வேதாத்திரி மகரிஷி அவர்கள்

-