How to understand the realization, what got it from the yoga and meditation?
யோகத்தில் தியானம் செய்து, அடைகின்ற தன்னிலை விளக்கத்தில் கிடைக்கும் அனுபவத்தை எப்படியாக புரிந்து கொள்ளலாம்?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, யோகத்தில் தியானம் செய்து, அடைகின்ற தன்னிலை விளக்கத்தில் கிடைக்கும் அனுபவத்தை எப்படியாக புரிந்து கொள்ளலாம்?
பதில்:
உலகில் பிறந்து வாழும் ஒரு மனிதனுடைய நோக்கமும், பிறவிக் கடமையும், இந்த தன்னை அறிதல்தான். அதுவன்றி இந்த மனிதப்பிறப்பு முழுமை அடைவதில்லை. அதற்கு யோகமே சிறந்த வழியாகும். யோகத்தில் இணைவது மட்டுமல்லாமல், தியானமும், அதில் ஆர்வம், முயற்சி, ஈடுபாடு, பயிற்சி, ஆராய்ச்சி, தெளிவு என்றவகையில் செயல்பட்டு முடிவாக தன்னிலை விளக்கம் பெறலாம்.
இந்த தன்னிலை விளக்கத்தில், நமக்கு கிடைப்பதென்ன? அறியலாமா? இப்போது, நான் யார்? பொருளா? சக்தியா? உடலா? அறிவா? உயிரா? என்று கேட்டுக்கொண்டால், இவை ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க முடியுமா? என ஆழ்ந்து சிந்தித்தால் இவற்றில் எதுவும் தனித்து இல்லை.
எல்லாம் சேர்ந்த ஒரு இயக்கச் சிறப்பே "நான்" என அறிவோம். உடல் வரையில் எல்லை கட்டி அது வரையில் "நான்" என்று எண்ணியிருந்த காலமும் உண்டு. அன்றுவரை அறிவு அறிந்திருந்த பக்குவ நிலை அது.
உருவத்தை ஆராயுங்கால் அது அணுக்களின் கூட்டமாகத் தோன்றுகிறது. அறிவை நோக்கி ஆராயுங்கால் அது உடலியக்க சக்தியின் ஒரு பிரிவு இயக்கம் என விளங்குகின்றது.
சக்தி என்பது என்ன என ஆராயுங்கால் அது எங்கும் நிறைந்த ஒரு அகண்டாகாரப் பெருவெளியின் எழுச்சி அணுவின் மூலம் இயக்க வேகமான நிலை எனத் தெளிவாகி விடுகின்றது.
ஆகவே அகன்ற பெருவெளியாக, அணுவாக, இயக்கச் சக்தியாக, அறிவாக இருக்கும் பல்வேறு நிலைகளும் ஒன்றாகக் காட்டும் ஒரு பேரியக்கமே "நான்" எனப்படுவது. ஒளி அல்லது ஒலி எழுச்சி பெறும் பொருட்களின் நிலை, இயக்கம் இவைகளுக்கேற்ப பல பேத அளவாக இருந்த போதிலும் ஒளி, ஒலி என்ற தத்துவத்தில் வேறுபட்டவை அல்ல. அதுபோலவே எல்லா சீவன்களிலும் உள்ள அறிவு பலபேத நிலைகளில் இயங்கிய போதிலும் அறிவு என்ற தத்துவத்தில் ஒன்றே.
ஆகவே "நான்" பரவெளி என்ற நிலையில் எங்கும் நிறைந்த பூரணமாகவும், சக்தி என்ற நிலையில் அணுக்களின் கூட்டுப் பக்குவ பரிணாம சந்தர்ப்பச் சந்திப்புகளுக்கேற்ப பலவித இயக்க வேறுபாடுகளாகவும், அறிவு என்ற நிலையில் அந்தந்த ஜீவராசிகளின் புலன் அமைப்பு, தேவை, பழக்கம், சூழ்நிலை, அனுபவம் இவைகளுக்குப் பல பேதப்பட்ட நிலைகளாகவும் உருவம் என்ற நிலையில் அணுக்களின் கூடுதலுக்கேற்ப பலவித அமைப்புகளாகவும் இருக்கிறேன் எனக் கொள்ளுதல் சரியான முடிவாகும்.
எனவே நான் வேறு, பிரபஞ்சம் வேறு அல்ல. நான் வேறு, இயற்கை வேறு அல்ல. நான் என்பதை எதிலிருந்தும் பிரித்து எடுக்கவோ, பிரித்துப் பேசவோ முடியாது. ஒன்றாகவும் பலவாகவும் எல்லாமாக ஏகத் தொடர் நிலையில் இருப்பதே "நான்" என்பதாகும்.
அரூப நிலையில் ஏகனாக, உருவ நிலையில் சிதறுண்டு தோன்றும் பலவாக, அரூபத்தில் உருவங்கள் அனைத்தும் அடக்கம் பெற்றும், உருவங்கள் அனைத்திலும் அரூப நிலை நிறைந்தும் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க முடியாத அகன்ற பேரியக்கமாகிய தத்துவமே "நான்" என்பதாகும்.
தன்னை யறிந்தால் கடவுளை அறியலாம் என்ற தலைப்பிலான, ஞானக்களஞ்சிய கவிதை வழியாக, விளக்கும் உண்மையையும் அறிவோம்.
'உன்னையோ கடவுளையோ அறிய வென்றால்,
ஒருகுறுக்கு வழியுண்டு; உள்ளுணர்ந்து
தன்னையறிந் தந்நிலையில் நிலைத்து வாழும்
தனிக்கருணை வடிவான குரு வடைந்தால்,
அன்னை வயிற்றடைந்து உருவாய் உடலாய் வந்த
ஆதி கருவைப் புருவத்திடை உணர்த்தப்
பின்னை நீ அவ்விடத்தில் நிலைக்க, உந்தன்
பேதமற்ற நிலை, கடவுளாகி நிற்கும்.'
(ஞானக்களஞ்சியம் கவி: 1460)
வாழ்க வளமுடன்.
-
பதிலின் மூலம்: வேதாத்திரி மகரிஷி அவர்கள்
-