How imaginary thoughts affected the family and individual?
பொதுமக்களின் உணர்ச்சி பெருக்கத்தை விட, கணவன் மனைவி என்ற குடும்ப அமைப்பையும், ஆண், பெண் ஆகியோரின் மன, எண்ண ஓட்டங்களையும் சில கற்பனைகள் எப்படி பாதிக்கிறது?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, பொதுமக்களின் உணர்ச்சி பெருக்கத்தை விட, கணவன் மனைவி என்ற குடும்ப அமைப்பையும், ஆண், பெண், ஆகியோரின் மன, எண்ண ஓட்டங்களையும் சில கற்பனைகள் எப்படி பாதிக்கிறது?
பதில்:
காதல் காட்சிகளாகிய படங்களை அடுத்தடுத்துப் பார்ப்பது கணவன் மனைவி உறவில் சலிப்பைத் தரும். காதல் காட்சியில் நடிக்கும் நட்சத்திரங்கள் இருவரும் பார்க்கும் ரசிகர்களுக்கு ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் உள்ளத்தில் மானசீகக் காதலர்களாக இடம் பெற்றுவிடுவார்கள்.
அடுத்தடுத்து அந்த மானசீகக் காதலியையோ காதலனையோ பார்க்க வேண்டுமென்று அவர்களையும் அறியாமல் மனோவேகம் ரசிகர்களையும் இழுத்துச் செல்லும். பலர் உள்ளங்களைக் கவர்ந்து பணம் ஈட்ட வேண்டுமென்று பட அதிபர்கள் கூலிக்காக ஆண் பெண் இருவரையும் அமர்த்திக் கொள்ளுகிறார்கள்; நாணம் விட்டு நடிக்கச் செய்கிறார்கள்.
காதலர்களாக படக் காட்சியில் நடிக்கும் நடிகர்களுடைய கவர்ச்சியான உடைகளையும் நாணமற்ற முறைகளையும் அடிக்கடி பார்த்துப் பழகிக் கொண்ட குடும்பத்தவர்கள் தங்கள் வாழ்வில் இயல்பாக உயர்வாக ஒழுங்காக அமைந்த காதல் இன்பத்தை விருப்பத்தோடு நுகர முடியாது.
ஓட்டல்களில் தினமும் பலவிதமான ருசிகளையுடைய சிற்றுண்டிகளை உண்டு பழகி விட்டவர்கட்கு வீட்டுச் சிற்றுண்டி போதிய சுவை தருமா ? படக்காட்சிக் கவர்ச்சியிலும் மானசீகக் காதலர் உருவத்திலும் பல தடவை தன்னை மறந்து ஈடுபட்டு தன் உள்ளத்தில் வலுவேற்றிக் கொண்டவர்களுக்கு எவ்விதம் இயற்கையான காதல் நிறைவான இன்பத்தை அளிக்க முடியும்?
வாழ்க வளமுடன்.
-
பதிலின் மூலம் வேதாத்திரி மகரிஷி அவர்கள்