The best way and solution for the perfect and complete life!
உலகில் பிறப்பதும், வாழ்வதும், மறைவதும் எந்த ஜீவனுக்கும் மாற்றமில்லை. ஆனால் மனிதனின் வாழ்வு மட்டும் பல்வேறு வாழ்க்கை சிக்கல்களிலும், மன குழப்பங்களிலும், இல்லம், சமூகம், உலகம் என்று சீர்கெட்டு இருக்கிறதே? தனிமனிதனுக்கும் நிம்மதி, அமைதி இல்லையே காரணம் என்ன?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, உலகில் பிறப்பதும், வாழ்வதும், மறைவதும் எந்த ஜீவனுக்கும் மாற்றமில்லை. ஆனால் மனிதனின் வாழ்வு மட்டும் பல்வேறு வாழ்க்கை சிக்கல்களிலும், மன குழப்பங்களிலும், இல்லம், சமூகம், உலகம் என்று சீர்கெட்டு இருக்கிறதே? தனிமனிதனுக்கும் நிம்மதி, அமைதி இல்லையே காரணம் என்ன?
பதில்:
ஆழ்ந்த சிந்தனையை தூண்டும் கேள்வியை வரவேற்கிறேன். இந்த உலகம், ஒவ்வொரு தலைமுறையிலும், தன்னளவிலும், வருங்கால சந்ததிக்கு உதவும் வகையிலுமான முன்னேற்றங்களை உருவாக்கம் செய்துகொண்டே இருக்கிறது. இதற்கு மெய்ஞானம் பெருமளவில் உதவியது. முழுமையான அந்த மெய்ஞானம் இன்றும் ‘பொலிவோடு’ திகழ்ந்துகொண்டும் இருக்கிறது. இன்று நாம் பார்க்கும் சூரியன் என்று ஒளிர்ந்ததோ நமக்குத் தெரியாது. ஆனால் பலகோடி ஆண்டுகளாக, பூமிக்கு ஒளிவீசிக்கொண்டு இருக்கிறதே, அதுபோலவே ‘மெய்ஞானமும்’ ஒளிவீசிக்கொண்டு இருக்கிறது.
இன்றைய உலகில், விஞ்ஞானம் அணுவியல், வானியல், மண்ணியல் என்று பலவகைகளிலும் விரிந்து நின்று, மனித வாழ்வின் நிலையை, கற்பனைக்கும் அப்பாற்பட்டு உயர்த்திருக்கிறது. நாம் எல்லோருமே அதை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். நம் தலைமுறையினரும் அனுபவிக்கிறார்கள். இனிவரும் தலைமுறையினரும் அனுபவிக்க போகிறார்கள். ஆனால், இங்கே மெய்ஞானத்தை அப்படியே விட்டுவிட்டார்களே?
ஒரு ஜீவனின் பிறப்பும், ஒரு மனிதனின் பிறப்பும் ஒன்றுதான். அதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் ஒரு மனிதனின் நோக்கம் வேறானதாகிற்றே? அம்மனிதனுக்கான ஆறாவது அறிவின் முழுமையை அவன் உணர மறுக்கிறான். அவனுக்குள்ளாக அதற்கு ஓர் எல்லை கட்டி, இந்த அளவுகளின் நான் இயங்கினால் போதும் என்றும் முடிவு செய்துவிடுகிறானே?! அது சரியானது தானா?
மனிதனின் வாழ்வு இதுதான், இப்படித்தான் வாழவேண்டும் என்பது இரண்டு நிலைகளில் நாம் எடுத்துகொள்ள முடியும். முதலாவது, பெயர், புகழ், செல்வாக்கு, இன்பம் துய்த்தல் என்ற் வகையில், வெளிப்பார்வையாக, உலகியலில் வாழ்கிற வாழ்க்கை ஆகும். இரண்டாவது, உள்முகமாக, மனதையும், நம்மையும், இந்த இயற்கையையும், தெய்வீகம் என்று போற்றப்படுகின்ற பேராற்றலையும் உணர்ந்து அறியதக்க வாழ்க்கை என்பதாகும். இதில் முதலாவது வாழ்க்கை முறையைமட்டுமே நாம் ‘கெட்டியாக’ பிடித்துக்கொண்டோம். அதையே நம் தாத்தா தொடர்ந்தார், தந்தை தொடர்ந்தார். நாம் தொடர்கிறோம். நம் பிள்ளையும், பேரப்பிள்ளைகளும் தொடர்வார்கள். அதுதான் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது அல்லவா?
ஆனால் இந்த ‘மெய்ஞான’வாழ்க்கை மாற்றம் உடனடியாக நிகழ்ந்து விடுவதில்லை. என்றாலும், மெய்ஞான வாழ்க்கைதான், இந்த மண்ணில், தமிழகத்தில் நிலைத்திருந்தது என்பதை மறந்துவிடக்கூடாது. உலகுக்கே வழிகாட்டியாக இன்னமும், தமிழக சித்தர்களின் மெய்ஞானம் இருந்தது, இருக்கிறது, இருக்கவும் போகிறது. அவை எல்லாமே, கால மாற்றத்தில், அந்நியர்களின் படையெடுப்பிலும், ஆக்கிரமிப்பிலும் அங்காங்கே சிதறிப்போனது. என்றாலும் கூட உலகெங்கும் அது பரந்து நிலைத்தது. இந்த மண்ணிலும் அவ்வப்பொழுது, ஞானிகளும், மகான்களும், யோகியர்களும் வந்து, ‘மெய்ஞானத்தை’ விளங்கச்செய்கிறார்கள். வாழும் மக்களாகிய நாம்தான், அதில் ஈடுபடாமல் விலகி நிற்கிறோம். தேவையில்லை என்று உதறுகிறோம். உண்மைதானே?
உண்மையாகவே, நீங்கள் கேட்ட கேள்வியை தனக்குள்ளாக, கேட்டு, உண்மை அறிய நினைத்தவர்களின் தாக்கம், அவர்களின் வாரீசுகளின் வழியாக ‘மெய்ஞானம்’ நோக்கி நகரவைத்தது. ‘நான் யார்?’ என்ற கேள்விக்கு விடை பெற தூண்டியது. குருவை தேடும் சீடனும், சீடனைத்தேடும் குருவும் இவ்வுலகில் இருந்துகொண்டுதான் உள்ளார்கள். அப்படியாக, ஒவ்வொரு தனிமனிதனும், தன் பிறவியின் நோக்கத்தையும், தன்னைக்குறித்த உண்மையையும் உணர்ந்து அறிந்துவிட்டால், தன்னிலையில் ‘விடுதலை’பெறுவான். இந்த உலகில், இயற்கையோடு இணைந்த, எங்கும் இன்பமே நிறைந்திக்கும் வாழ்வில், நிறைவாக வாழ்ந்து வருவான். அவனைக்கடந்து வரும் அவனின் தலைமுறைகளும் அதை, கடைபிடிக்கும். தனிமனிதன், குடும்பம், சமூகம், ஊர், நாடு, உலகம் என்று எல்லாமும் முழுமையாகும் என்பது உறுதி. இந்த நோக்கம் நிறைவேறிட, தனிமனிதனுக்கு உதவிட வந்ததே, இவ்வுலகில், யோக சேவையாக பல்வேறு மையங்களும், அதன் செயல்பாடுகளும் ஆகும்.
மாற்றத்தை தன்னளவில் பெற விரும்புவோர், தங்களை அங்கே இணைத்துக்கொண்டு உயரலாம். உண்மை விளக்கம் பெறலாம். அப்படியான மையங்களில் ஒன்றுதான், வேதாத்திரியம் தந்த வேதாத்திரி மகரிஷியின் செயல்பாடும் ஆகும். அதுவே மனவளக்கலையாக, எளியமுறை குண்டலினி யோகமாகவும் மலர்ந்திருக்கிறது.
வாழ்க வளமுடன்.
-