Why felt tired on the yoga journey? How long need to move and what is the solution?
வேதாத்திரிய யோகத்தில் நீண்டகாலம் இருந்தும், எத்தனையோ தவங்கள் செய்தும், எதோ ஓர் சோர்வு எழுகின்றதே? அது ஏன்? இன்னும் எவ்வளவு காலம் இப்படி? என்று யோசனை வருகிறதே? தீர்வு என்ன?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா! வேதாத்திரிய யோகத்தில் நீண்டகாலம் இருந்தும், எத்தனையோ தவங்கள் செய்தும், எதோ ஓர் சோர்வு எழுகின்றதே? அது ஏன்? இன்னும் எவ்வளவு காலம் இப்படி? என்று யோசனை வருகிறதே? தீர்வு என்ன?
பதில்:
நீங்கள் இப்படி கேட்பது நியாயமானதுதான். இன்றைய வாழ்வுக்கான சூழல் மட்டுமல்ல, பொதுவாகவே மனிதர்களின் வாழ்வில், குண்டலினி யோகம் என்பது தனித்துத்தான் நிற்கிறது. அது ஒரு வாழ்வியல் மாற்றாக, நம்முடைய வேதாத்திரி மகரிஷியின், வேதாத்திரியமான மனவளக்கலையின் வழியாகவே வந்திருக்கிறது எனலாம். யோகம் என்பது, குடும்பஸ்தனுக்கு ஆகவே ஆகாது என்ற நிலையில், அப்படி இல்லவே இல்லை என விளக்கமளித்து, இல்லறத்திலே யோகம் என்ற மாற்றத்தை கொண்டுவந்து, தகுந்த விளக்கமும், பயிற்சியும் அளித்தது ‘வேதாத்திரியம்’ மட்டுமே என்றால் அது மிகையில்லை.
யோகத்தின் வழியாக, தனிமனித விடுதலை பெற்று, நான் யார்? எந்த சிந்தனையின் ஊடாக, உண்மை அறிந்து, இறையுணர்ந்த தெளிவோடு, தன்னுடைய எண்ணம், சொல், செயல் வழியே, மிகத்தெளிவான வாழ்வியலில், இன்பம் மட்டுமே அனுபவித்து, தனக்கும் பிறருக்கும் துன்பமில்லாது வாழ்வதற்கு வழி சொல்வதுதான் ‘வேதாத்திரியம்’. அதுதான் இங்கே பயிற்சியாகவும் அமைந்திருக்கிறது. படித்து பட்டயம் பெற்று, தகுதிச்சான்று அடைந்த உடனே, அந்த நிலையை நாம் அடைந்துவிட முடியாது என்பதை, நாம் மறந்துவிடுகிறோம்.
கற்றுக்கொண்ட பயிற்சிகளான, காயகல்பம், எளியமுறை உடற்பயிற்சி, தவம், தற்சோதனை, அகத்தாய்வு, மௌனம் ஆகிய எல்லாவற்றையும் தொடர்ந்து செய்துவருவது முக்கியம். இது எவ்வளவு காலம் செய்யவேண்டும்? தொடரவேண்டும்? என்பது, நம்முடைய / நமக்கு கிடைக்கும் விளக்கத்தை மட்டுமே பொறுத்தது. பிறர் சொல்லக்கேட்டு விளங்கிக்கொள்வது என்பதை விட, அந்த விளக்கத்தை, உளப்பூர்வமாக தானாக உணர்வதுதான் ‘உண்மை விளக்கமாகும்’ ஒரு பலா பழத்தின் சுவையை என்னதான் மற்றவர் சொன்னாலும், அந்த பலா பழத்தின் சுவையை நீங்கள் அறிந்ததாகுமா? அந்த பலா பழத்தை, நீங்கள் பெற்று, சாப்பிட்டால் அல்லவா? அந்த சுவையும் ருசியும் நீங்கள் அறிந்ததாக கொள்ளமுடியும். அதுதானே உங்களுக்கு திருப்தியும், மன நிறைவும், இன்பமும் அளிப்பது இல்லையா? இதை எப்படி நீங்கள், பிறர் சொல்லும் வார்த்தைகளால் அறிந்துவிட முடியும்?
வேதாத்திரிய யோகத்தில் நீண்டகாலம் இருந்தும், எத்தனையோ தவங்கள் செய்தும், எதோ ஓர் சோர்வு எழுகின்றதே? அது ஏன்? இன்னும் எவ்வளவு காலம் இப்படி? என்று யோசனை வருகிறதே? என்று கேட்பதற்கு, முக்கியமான காரணம் ‘உங்களிடமிருக்கும் ஓர் எதிர்பார்ப்பு’ ஆகும். சமையலில் அன்றாடம் பயன்படுத்தும் ஒர் பாத்திரத்தை, ஒரே நாளில் புதிதாக, விளக்கி வைக்க முடியுமா? ஆனால் தினமும் செய்தால், ஒர் நாளில் அது, புத்தம் புதிதாக காட்சியளிக்கும் தானே? அதுபோல, எதிர்பார்ப்பு இல்லாமல் தொடர்ந்து, வேதாத்திரியத்தில் பயணியுங்கள். ஒருபோதும் ஏமாற்றத்திற்கு இடம் கொடுக்காதீர்கள்.
உங்கள் வாழ்வில், பொருளாதார ஏற்றத்தாழ்வு இருந்தால், அதை இந்த யோகத்தோடு முடிச்சு போடாதீர்கள். யோகம் பொருளாதாரத்தை கெடுப்பதில்லை என்பதை நினைவில் கொள்க. நீங்கள், இன்னமும் பொருளாதாரத்தில் உயரவேண்டும் என்றல், நிறைவு பெறவேண்டும் என்றால் அதில் ஈடுபடுங்கள். அதற்காக யோகத்தில் ஏமாற்றம் கொண்டு, கைவிட்டுவிட முயற்சிக்காதீர்கள். ஒரு ஓட்டப்பந்தய விளையாட்டில், பாதியில் நின்றுவிடுவதும், விலகிப்போவதும் ஒருபோதுமே பலனளிக்காது என்பதை புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு இறையருளும், குருவருளும் உதவட்டும். நானும் உங்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.
வாழ்க வளமுடன்.
-