How we can pass the difficulties with smile by the way of Thirukkural Truth?
இடுக்கன் வருங்கால் நகுக என்ற திருக்குறளுக்கான உண்மை விளக்கத்தை, குரு மகான் வேதாத்திரி மகரிஷி சொல்லியிருப்பதாக அறிகிறேன். அந்த விளக்கத்தை பகிர்வீர்களா?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா! இடுக்கன் வருங்கால் நகுக என்ற திருக்குறளுக்கான உண்மை விளக்கத்தை, குரு மகான் வேதாத்திரி மகரிஷி சொல்லியிருப்பதாக அறிகிறேன். அந்த விளக்கத்தை பகிர்வீர்களா?
பதில்:
இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப தில்.
இதற்கான உரை விளக்கம், தமிழறிஞர் மு. வரதராசன் அவர்கள் வழங்குவது என்ன? துன்பம் வரும்போது (அதற்காக கலங்காமல்) நகுதல் வேண்டும், அத் துன்பத்தை எதிர்த்து வெல்லவல்லது அதைப் போன்றது வேறு இல்லை’ என்று சொல்லுகிறார். இதுபோலவே பலரும் சொல்லுவார்கள் என்பதுதான் பொதுவானது. சராசரி மக்கள், இக்குறளின் உண்மையை ‘தானாகவே’ புரிந்து கொள்ளக்கூடிய மக்களும் உண்டு. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ஆசான் திருவள்ளுவரால் எழுதப்பட்ட, திருக்குறள், மூலமான, நம் தாய்மொழியான தமிழில் எழுதப்பட்டது, அது இன்னமும் எழுத்து, பொருள், அர்த்தம் வடிவில் மாறாமல் இருப்பது அதிசயம்தானே? உலகில் பெரும்பாலான பழமையான குறிப்புக்கள் இன்னமும் புரிந்துகொள்ளப்படாமல், சிதைவுற்று விட்டது. ஆனால், தமிழ் சமுதாயம் அக்காலத்தில் இருந்து, பல்வேறுவகையான சான்றுகளை இன்னமும் பொக்கிஷமாக வைத்திருக்கிறது. உலகில் தமிழுக்கு கிடைத்த, இந்த அற்புதம் வேறு எந்த மொழி, இன சமுதாயத்திற்கும் இல்லை என்றே சொல்லுகிறார்கள். நம்மில் பலர் இந்த உண்மை தெரியாமலும் இருக்கிறார்கள்.
‘இடுக்கண் வருங்கால் நகுக அதனை, அடுத்தூர்வது அஃதொப்ப தில்’ என்று வாசிக்கும் பொழுதே, அதன் அர்த்தம் நமக்கு புரிந்துவிடும் என்றாலும் கூட, துன்பம் வந்தால் சிரித்துவிடுக, இதைத்தவிர அத்துன்பத்தை கடந்து செல்ல வேறு வழியில்லை, என்பதாக மிக எளிய விளக்கமாகக் கொள்ளமுடியும்.
குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், தேர்ந்தெடுத்த சில, திருக்குறள்களுக்கு மட்டுமே, உரை விளக்கம் எழுதி அதை நூலாக தந்திருக்கிறார். அது போதுமானது என்றும் சொல்லுகிறார். இன்றைய காலத்தில், தமிழ் நன்கு பேச, படிக்க, அறிந்த யாவரும் ‘திருக்குறள் உரை’ எழுத தயாராகவே இருக்கிறார்கள். இனி, இக்குறளுக்கு, வேதாத்திரி மகரிஷி அவர்களின் விளக்கத்தை காண்போம்.
ஒரு துன்பம் என்பது எப்போது எழுகிறது? நம்முடைய எண்ணம், சொல், செயலால் எழுகின்ற விளைவாகும். பிறராலும் அது நமக்கு விளைவாக வரும். அடுத்து, இயற்கையால் நிகழக்கூடியதாக இருக்கும். சில வகையில், சமுதாயம், உலகம் என்ற நிலையிலும் நாம் மட்டுமல்ல, அனைவருமே துன்பத்தை ஏற்கவேண்டி வரலாம். இங்கே நமக்கு வரும் துன்பம் என்பதை மட்டுமே கவனத்தில் கொண்டாலும், அது ஒருவகையில் ‘கர்மா என்ற வினைப்பதிவின் செயல்பாடு’ என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். சஞ்சிதம், பிராரப்தம், ஆகாமியம் என்ற மூன்றடுக்கு கர்ம வினைகள் நம்மிடம் உண்டு. அது ஒவ்வொன்றாக வெளியேறிட வேண்டும். அந்த களங்கம் தீரவேண்டும். அப்போதுதான், இறையுணர்வு நம்மிடம் மிகுதியாகும். அந்த கர்ம வினைகளை தீர்க்கவே பிறவியும் எடுத்தோம் என்பதும் உண்மையே.
இப்போது, ஒரு துன்பம் நமக்கு எழுகிறது என்றால், இங்கே நம்முடைய கர்ம வினைப்பதிவில் ஒன்று கழிந்துவிட்டது. அது நம்மிடமிருந்து விலகுகிறது என்று உணர்ந்து கொண்டு, நிம்மதியை உணர்ந்து, மனதில் அமைதி கொள்ள வேண்டும். இந்த தெளிவான உண்மையைத்தான் ஆசான் திருவள்ளுவர், ‘இடுக்கண் வருங்கால் நகுக ' என்று சொல்லுகிறார். என்பதான விளக்கத்தை, குரு மகான் வேதாத்திரி மகரிஷி தருகிறார். வேதாத்திரிய பதிப்பகம் வழங்கிய, வேதாத்திரி மகரிஷியின் திருக்குறள் உரை விளக்கம் நூலை வாங்கி, மேலும் உண்மைகள் அறிக.
வாழ்க வளமுடன்.
-