What is the meaning of Genetic Center in the Vethathiriya Yoga?
வேதாத்திரியத்தில் சொல்லப்படுகின்ற ‘கருமையம்’ என்பது குறித்து விளக்கம் தருக.
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, வேதாத்திரியத்தில் சொல்லப்படுகின்ற ‘கருமையம்’ என்பது குறித்து விளக்கம் தருக.
பதில்:
கருமையம் என்ற பொருளும், அதன் உண்மையும், வேதாத்திரியத்தின் சிறப்பு ஆகும். கருமையம் நம்முடைய பொக்கிஷம் என்கிறார், வேதாத்திரி மகரிஷி. இந்த பிரபஞ்சத்தில் எப்பொருளுக்கும், கருமையம் உண்டு எனினும், உயிரின பரிணாமத்தின் வழியாக அமைந்த கருமையம், தனிச்சிறப்பு பெற்றிருக்கிறது. இந்த கருமையமும், ஒவ்வொரு மனிதருக்கும் நிச்சயமாக உண்டு என்பதை மறவாதீர்.
ஒரு மனிதனின், வாழும் காலத்தில் எப்படி அதன் செயல்பாடு இருக்கிறதோ, அதே தன்மையில் எப்போதும் இருக்கும். அதாவது தன்னுடைய பதிவுகளில் இருப்பதை, வெளிக்காட்டிக்கொண்டே இருக்கும் என்று அர்த்தமாகிறது. இது எவ்வளவு காலம் என்றால், கருமையத்தின் களங்கள் தீர்க்கப்படும்வரை எனலாம். இந்த களங்கம் என்பதுதான், கர்ம வினைப்பதிவுகள் என்றாகின்றன.
வாழும் ஒருமனிதன், இறந்து போனால், எல்லாம் முடிந்தது என்பதில்லை. குரு மகான் வேதாத்திரி மகரிஷி, ‘வாழ்ந்து மறைந்த அந்த மனிதனின் கருமையமும், அதன் பதிவுகளும் அழிவதில்லை’ என்கிறார். மேலும், அவரின் விளக்கத்தின் வழியாக அறிவோம்.
கருமையம் (Genetic Center) மிக வியப்பான செயல்களை ஆற்றிக் கொண்டிருப்பதை ஆழ்ந்து ஆராய்ந்தால் உணர்ந்து கொள்ளலாம். கருமையம் என்பது காந்த அலைத் திணிவு. நுண்ணிய ஜீவ இனங்களிலிருந்து அவை பரிணாமத்தால் உயர்ந்து மனிதனாகும் வரையில் கருமையம் தனது செயலை நிறுத்துவதில்லை; தன்மைகளை இழப்பதும் இல்லை.
உடல் காலத்தால் மாறிக்கொண்டு இருக்கும். அதை உடலுக்கு இறப்பு என்று சொல்கிறோம். ஆனால், அதிலடங்கியிருந்த உயிர்த்துகளோ, பிரபஞ்சம் முழுவதும் இயங்கிக் கொண்டு இருக்கும் உயிர்த்துகளோடு கலந்து விடும். உடலை விட்டு வெளியேறிய இந்தக் காந்த அலைக்கு அதன் இயக்க நியதியினாலும், இதுவரையில் இணைத்துக் கொண்ட தன்மையினாலேயும் ஒரு சிறப்பு நிலை உருவாகிவிடுகிறது.
வான் காந்தத்தில் (Universal Magnetism) மிதக்கும் இத்தகையக் கருமையமானது அதன் சிறப்புக்கு ஏற்பச் செயல்படக்கூடிய, விளைவுகளைத் தரக்கூடிய பொருத்தமான ஜீவ இனத்தோடு இணைந்து விடும்.
அது முதற்கொண்டு கருமையம் இணைத்துக் கொண்ட ஜீவனுடைய ஆன்மா, அந்த இணைப்பினாலான சிறப்புக்களையும் பெற்றுவிடும். இவ்வாறு வாழும்போதே சந்ததிகள் மூலம் பல்லாயிரம் தலைமுறைகளுக்கும் தொடர்ந்து வருவதும், உடலை விட்ட பின்னர்கூடத் தனது தகுதிக்கேற்ற ஒரு கருமையத்தோடு இணைந்து கொள்வதும், சாதாரண மன நிலையிலுள்ள மனிதனால் சரியாக உணர்ந்து கொள்ள முடியாது.
எனினும் இறையாற்றலால் நிகழ்ந்து கொண்டு இருக்கும் இந்த வியத்தகு கருமையம், பேரியக்க மண்டல இரகசியங்கள் அனைத்தையும் அடக்கமாகப் பெற்ற ஒரு இயற்கை நியதியாகும்.
தன்னிலை விளக்கமானாலும் சரி, இறைநிலை விளக்கமானாலும் சரி, இக்காந்தக் "கருமையத்தை" உணர்ந்து கொள்ளாத முன்னம் தெளிவாக உணர்ந்து கொள்ள முடியாது, என்பதாக, விளக்கம் அளிக்கிறார், வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
வாழ்க வளமுடன்.
-
பதிலின் மூலம் வேதாத்திரி மகரிஷி அவர்கள்
-