Why no value for self skill and works? Can yoga will help for this situation?
தனித்திறமைக்கும், அதன் வேலைக்கும் மதிப்பில்லாமல் போய்விட்டதே? கல்லூரி படிப்பும், பட்டயமும் கூட மிக உயர்ந்த அளவில் தேவைப்படுகிறது. பொருள் ஈட்டுவதும் கடினமாகிவிட்டது. யோகம் இதற்கு உதவுமா?
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா! தனித்திறமைக்கும், அதன் வேலைக்கும் மதிப்பில்லாமல் போய்விட்டதே? கல்லூரி படிப்பும், பட்டயமும் கூட மிக உயர்ந்த அளவில் தேவைப்படுகிறது. பொருள் ஈட்டுவதும் கடினமாகிவிட்டது. யோகம் இதற்கு உதவுமா?
பதில்:
உலகெங்கும் கோவிட்-19 என்று அழைக்கப்பட்ட, கரோனா தொற்றுநோய் தாக்கம், மூன்று ஆண்டுகளாக ஆட்டிப்படைத்தது. நன்றாக இருப்பார் என்று நினைத்திருந்த பல சாராசரி மனிதர்களை மட்டுமல்ல, புகழடைந்த மனிதர்களையும், நிறைய செல்வம், பொருள் நிறைவு பெற்றவர்களையும் பாதித்து, அவர்களின் வாழ்வை முடித்துவிட்டது. உலகில் பெரும் தொழில், நிறுவன, வியாபார, விற்பனை எல்லாவற்றையுமே சிதைத்துவிட்டது என்பதை நாம் அறிவோம்.
உயர்ந்த நிலையில் இருந்த தொழில் வாய்ப்புக்கள் எல்லாமே காலாவதி ஆகிவிட்டன என்பதும் உண்மை. இதனால் இருப்பது போதும், இனி இதை வைத்து உயர்வோம் என்ற நிலைக்கு எல்லாருமே வந்துவிட்டனர். புதிய தொழில் துவங்க யாருக்கும் விருப்பமில்லாத நிலையும் உள்ளது. குறிப்பிட்ட அளவில் வரும் வருமானம் போதுமானது என்று முடிவு செய்துவிட்டனர். பெரிய அளவில் மற்றுமொரு இழப்பை சந்திக்க யாருக்கும் விருப்பமில்லை. மக்களின் அடிப்படையான, அன்றாட தேவையான, மதிப்பூட்டும் சேவைகள் மட்டுமே அதிகமாக, இன்றைய காலகட்டத்தில் நிறைந்துள்ளது.
காய்கறி, இறைச்சி, உணவு, சிற்றுண்டி ஆகிய இப்படியான விற்பனை தொழிலும், அடிப்படையான பலசரக்குகள், ஆடைகள், அணிகலன்கள் ஆகிய விற்பனைகள் மட்டுமே சிறப்பாக இன்றும் விரிந்திருக்கின்றன. சினிமா போன்ற பொழுதுபோக்குகள் குறைந்து வந்தாலும் கூட, இன்றைய காலகட்டத்தில் நல்ல நிலைக்கு மாறிவிட்டது. ஒவ்வொரு மனிதரும் தன்னளவில் இவ்வளவுதான் என் செலவுகள் என்ற முடிவுக்கும் வந்துவிட்டனர். அது கரோனா கொடுத்த பாடம் என்றும் சொல்லலாம்.
இந்த நிலையில், உழைப்புக்கான மரியாதையும், அதன் வெகுமதியான கூலியும் எந்த வகையிலும் குறைவில்லை. சொல்லப்போனால் முன்னைவிட அதிக மதிப்பான விசயமாக மாறி இருக்கிறது. சில வேலைகளுக்கும், சேவைகளுக்கும் ஆள் இல்லை என்ற நிலைதான் இன்று தொடர்கிறது.
இப்படியான சூழலில்தான், நீங்கள் கேட்ட 'தனித்திறமைக்கும், அதன் வேலைக்கும் மதிப்பில்லாமல் போய்விட்ட' நிலை தொடர்கிறது. என்றாலும், வாழும் சூழலுக்கு ஏற்றபடியாக உங்களை மாற்றிக்கொள்ள வேண்டியது முக்கியம். சில வேளை முற்றிலுமாக நீங்கள், உங்களை வேறுமாதிரியாக மாற்றவேண்டியும் வரலாம். பொதுவாகவே ஒரு கருத்து உண்டு. ஒரு அரசு நிறுவனத்தில் 10 இடங்கள், வேலையாட்களைக் கொண்டு நிரப்ப வேண்டும் என்றால், கிட்டத்தட்ட பத்தாயிரத்திற்கும் மேலான விண்ணப்பங்கள் வருகிறது என்று குறிப்பிடுவார்கள். பத்தாயிரம் என்ன? ஒரு லட்சம் விண்ணப்பங்கள் கூட வர வாய்ப்பு உண்டு. மக்கள் தொகை அதிகமான நம் நாட்டில், இது அதிசயமே இல்லை. அவ்வளவு போட்டி நிறைந்த உலகமாக மாறிவிட்டது. அதனால், வழக்கமான படிப்பு இல்லாமல், அதற்கு மேல், அதற்கு மேல் என்று தகுதிகள் மாறிக்கொண்டே இருக்கிறது.
இந்த இடத்தில், யோகம் என்ன செய்கிறது? உதவிடுமா? என்றும் கேட்டுள்ளீர்கள். நிச்சயமாக யோகம் உதவுகிறது. எப்படி? உங்களுக்கு தன்னம்பிக்கையை வளர்த்து, ஊக்கம் தருகிறது. உங்கள் மனமும், மூளையும் தளராமல், பிரச்சனையில் சிக்கிடாது, அதிலிருந்து மீள்வதற்கான வழிகளை சிந்திக்க, உங்களுக்கு உதவுகிறது. அடுத்து என்ன செய்யலாம்? என்று சிந்தனையை கொண்டுவந்த உடனே, காட்சியாக தோன்றிவிட வாய்ப்புள்ளது. உலகில் எல்லாமக்களும் போகும் பாதையில், நாமும் போகாமல், மிகச்சரியான பாதையில் சென்று, சாராசரி வாழ்விலும், பொருள் துறையும் சிறப்பாக வாழ வழிகள் கிடைக்கும், அதை பயன்படுத்திடவும் முடியும். குழப்பத்திற்கு இடமிருக்காது.
உடலையும், மனதையும், உயிரையும் பலம் தரும் யோகத்தின் அருமையை அப்போது முழுமையாக உணர்வீர்கள் என்பது உறுதி, இதுவே சாதாரண மக்களுக்கும், யோகத்தில் இணைந்து பயணிக்கும் மக்களுக்கும் உள்ள வித்தியாசம் ஆகும்.
வாழ்க வளமுடன்.
-