Explain the Maharishi's note about astrology, horoscope and benefits!
சோதிடம், ஜாதகம், கிரகங்கள், அவற்றின் நிலையும், பயன்களும் குறித்து வேதாத்திரி மகரிஷி எவ்வாறு குறிப்பிட்டு இருக்கிறார்? அது குறித்த விளக்கம் தருவீர்களா?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா! சோதிடம், ஜாதகம், கிரகங்கள், அவற்றின் நிலையும், பயன்களும் குறித்து வேதாத்திரி மகரிஷி எவ்வாறு குறிப்பிட்டு இருக்கிறார்? அது குறித்த விளக்கம் தருவீர்களா?
பதில்:
வேதாத்திரிய யோகத்தில், இந்த ஜோதிடம், ஜாதகம், அவற்றின் விளக்கம், உண்மைகள் இவற்றிற்கு எல்லாம் இடமில்லை என்று நிறைய அன்பர்கள் கருதுகிறார்கள். ஆனால், குரு மகான் வேதாத்திரி மகரிஷி, இது குறித்து நிறைய விளக்கங்களை, தன்னுடைய பெரும்பாலான உரைகளிலும், கட்டுரைகளிலும் தந்திருக்கிறார் என்பதுதான் உண்மை. நேரடியாக, தனியாக சொல்லவில்லையே தவிர, பல உண்மைகளை நமக்கு சொல்லி விளக்கம் அளித்துள்ளார். சில கேள்வி பதில் நேரங்களிலும், அன்பர்களுக்கு விளக்கம் தந்துள்ளார்.
முக்கியமாக, நம் வேதாத்திரியத்தில், பஞ்ச பூத நவக்கிரக தவம் உள்ளதே? அதை நாம் மறக்கலாகுமா? இந்த தவத்தின் உண்மையிலேயே, உங்கள் கேள்விக்கான பதில் உள்ளே அடங்கி இருக்கிறது என்று சொல்லிவிடலாமே?
வானில் மிதந்து, உருண்டுகொண்டு, சூரியனையும் சுற்றிக்கொண்டிருக்கும், இந்த பூமியில் வாழும் நமக்கு, நம் பூமியைச் சுற்றும் சந்திரனாலும், பூமியின் அண்டை கிரகங்களான, புதன், சுக்கிரன், செவ்வாய், வியாழன் என்ற குரு, சனி ஆகிய கிரங்களோடு, நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது ஆகிய எல்லா கிரகங்களையும் நாம், இந்த பஞ்ச பூத நவக்கிரக தவம் வழியாக உணர்ந்தறிந்து நன்மையை பெறுகிறோம் என்பது உங்களுக்குத் தெரியும் அல்லவா?
வேதாத்திரியத்தில், அலை இயக்கம் என்ற ஒரு பாடம் உண்டு. சுத்தவெளியின் தன்னிறுக்க சூழந்தழுத்தும் ஆற்றல் நிலையில் இருந்து, தானே மடிந்து, நொறுங்கி வந்த பரமாணு முதலாகவே, அலை இயக்கம் தொடங்கி வந்துகொண்டே இருக்கிறது. சுத்தவெளியின் தன்மையில் தனக்குள்ளாக, இருந்த அதிர்வுகள் அலைவடிவமானதே, இந்த பரமாணு வழியாக என்ற உண்மையும் நாம் மறக்கலாகாது. இந்த அலைகள், இன்னொன்றில் ஏற்படுத்தும் தாக்கமும், அதிலிருந்து ஏற்படும் விளைவும், மாற்றமும் இயல்பானது. இதுதான் எல்லாவற்றிற்கும் அடிப்படையாகிறது.
இந்த தாக்கம், விளைவு, மாற்றம் ஆகியவையே சோதிட கணக்குகளின் அடிப்படையாக உள்ளது. இதில் ஓவ்வொருவரின் ஆராய்ச்சி, அனுபவம் ஆகியனவும் கலந்து ஒன்றுக்கும் மேற்பட்ட நிலைகள் வந்து, குழப்பங்களை ஏற்படுத்துகிறது எனினும் அடிப்படை என்றும் மாறாதது தானே?
குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், ஜோதிடம், ஜாதகம் என்பதை விடவும், கோள்கள் குறித்தும், அதன் அலை இயக்கம், தூண்டுதல், விளைவு, மாற்றம் ஆகியன குறித்து அதிக விரிவான விளக்கங்கள் தந்திருக்கிறார். அந்த விளக்கங்களை, ஒரே கட்டுரையாக நாம், இங்கே காணமுடியாது எனினும், அவ்வப்பொழுது நான் தந்துகொண்டே இருக்கிறேன். மேலும், நிச்சயமாக மகரிஷியின் அந்த உண்மை விளக்கங்கள், உறுதியாக ஜோதிட, ஜாதக விளக்கங்களுக்கும் உதவுகிறது என்பதே உண்மையாகும்.
வாழ்க வளமுடன்.
-