Is there such a thing as fate? Is it true that wisdom can conquer fate?
விதி என்று ஒன்று இருக்கிறதா? விதி என்பதை மதியால் வெல்லமுடியும் என்கிறார்களே அது உண்மையா?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா! விதி என்று ஒன்று இருக்கிறதா? விதி என்பதை மதியால் வெல்லமுடியும் என்கிறார்களே அது உண்மையா?
பதில்:
இதற்கு முன்பாகவும், பலவிதமாக இந்த கேள்விக்கு பதில் அளித்துள்ளேன் எனினும். மீண்டும் சொல்லுவதில் தவறில்லை என்றே கருதுகிறேன். இங்கே குருமகான் வேதாத்திரி மகரிசி அவர்களின் கவிதையின் கருத்தாக, எனக்கு கிடைத்த உண்மையைக் கொண்டு விளக்குகிறேன்.
விதி என்பது இயற்கையின் நியதி ஆகும். நியதி என்பது என்ன? அடிப்படையாக இருப்பது என்று அர்த்தமாகிறது, அப்படியானால் விதி இருக்கிறதா? என்றால் அது நிச்சயமாக இருக்கிறது என்பது ‘அடித்துச் சொல்லக்கூடிய்’ உண்மைதான். ஆனால் அதைபின்பற்றி ‘தலையெழுத்து’ ஒன்று இருக்கிறது. அதன்படிதான் நீ வாழ்வாய் என்றால், நம்பாதீர்கள். விதி உண்டுதான் மறுப்பதற்கில்லை. ஆனால் தலையெழுத்து என்பது இல்லவே இல்லை.
இந்த விதி எங்கே தொடங்குகிறது? என்று ஒரு கேள்வி எழுந்தால், அது, பஞ்ச பூதத்தின் முதல் பரிணாமத்திலேயே உருவாகிவிட்டதாக, மகரிஷி அவர்கள் சொல்லுகிறார். பரமாணுக்களின் கூட்டாக விண் என்ற ஆகாஷ் உருவான பொழுதே, அதனூடாக விதி என்பது அமைந்திருக்கிறது என்கிறார். அந்த விண் மிகமிக விரைவான சுழற்சி கொண்டது. கண்ணுக்கும் கருவிக்கும் எட்டாத நிலையில் இருப்பதும் ஆகும். அதனைத் தொடர்ந்த அடுத்த பரிணாமான காற்றையும் நாம் காணமுடிவதில்லை. கண்ணுக்கும் கருவிக்கும் எட்டாத விண் என்ற ஆகாஷ் தான், ஜீவன்களிலும், மனிதரிடத்திலும் ‘உயிர்’ என்று சிறப்புப் பெயர் பெற்றிருக்கிறது. அதன் உள்ளடக்கமாக தோற்றம், இருப்பு, கலைதல் என்ற மூன்று கட்டமாக விதியை உள்ளடக்கமாக கொண்டிருக்கிறது. அது அதனுடைய இயற்கை தன்மையாகவும் உள்ளது. இங்கே விதி என்பதை பார்த்தோம்.
அந்த விதியை கொண்டிருக்கும் உயிர், தன்னுள்ளே, அதன் மையப்புள்ளியிலே அறிவாக, உணரும் ஆற்றலை பெற்றிருக்கிறது அல்லவா? அதுவே மதி என்றும் மகரிஷி அவர்கள் விளக்கம் அளிக்கிறார். (உங்களுக்குப் புரிகிறதா? என்று நான் கேட்கவே மாட்டேன். புரிகிறதா என்று கேட்பவன் விளக்கத்தெரியாத முட்டாள்) இதை இன்னும் விளக்கமாக, எப்படியாக புரிந்துகொள்ளலாம் என்பதையும் பார்க்கலாமா? தனக்குள் விதி என்ற இன்று இருப்பதால், அந்த விண் என்ற ஆகாஷ் துகள் நின்றுவிடவில்லை, அழிந்துவிடவில்லை.தனக்குள் அமைந்திருக்கும் அந்த விதியை மீறி, அதனூடாக இருக்கும் மதியின் வழியாக, தன் வாழ்நாளின் தன்மை கருதி, திட்டமிட்டு, அதற்குள்ளாக, தன் காலத்திற்குள்ளாக, பலகோடி துகள்களோடு கூடி, அணுக்களாகவும், தன்னைப்போன்ற பல உயிர்த்துகளோடும் கூடியே, மூலக்கூறுகளாகவும், தோற்றங்களாகவும், பொருட்களாகவும், ஜீவன்களாகவும், மனிதராகவும் வந்து நிற்கிறதே? அது விதியைக்கடந்த மதியின் செயல் அல்லவா? அதை நாம் ‘பஞ்சபூத நிலையிலேயே’ புரிந்துகொள்ள வேண்டும் என்று, குரு மகான் வேதாத்திரி மகரிஷி நமக்கு உணர்த்துகிறார்.
விண் / ஆகாஷ் / உயிர் ஆகிய இத்துகளே, விதியை மதியால் வென்று வெற்றிபெறும் பொழுது, அந்த உயிரைக்கொண்டே உலகில் வாழும் நாம், நம்மை விதியின் கீழ், குறைபட்டுக் கொள்ளலாமா? கவியின் கருத்து வழியாக, சொன்ன இத்தகைய விளக்கம் உங்களுக்கு, உண்மையை தந்திருக்கும் என்று நம்புகிறேன்.
-
வாழ்க வளமுடன்.
-