Can we receive within ourselves the cosmic energy energy? What is the way out? Does meditation and penance help with that? Give an explanation.
பிரபஞ்ச ஆற்றல் சக்தி என்பதை நாம் நமக்குள்ளாக பெற்றுக்கொள்ள முடியுமா? அதற்கு வழி என்ன? தியானம் தவம் அதற்கு உதவுகிறதா? விளக்கம் தருக.
பிரபஞ்சம் ஆற்றல் சக்தி, என்றுமே எப்போதுமே குறைவுபடமால் இருக்கக்கூடியது ஆகும். நாம் காணும், காணமுடியாத தொலைவில் இருக்கும் கோள்கள், சூரியன்கள், நட்சத்திரங்கள், நட்சத்திர மண்டலங்கள் ஆகிய அனைத்தும், தனக்குள்ளிருந்து, ஆற்றல் சக்தியை வழங்கிக் கொண்டே இருக்கின்றன. எப்படி நமக்கு, காலையில் சூரியனின் ஒளியும், இரவில் சந்திரனின் ஒளியும் நமக்கு துணையாகி, உதவுகிறதோ, அதுபோலவே, இந்த பிரபஞ்ச ஆற்றல் சக்தியும் துணையாகிறது, உதவுகிறது எனலாம்.
இந்த உண்மையை, உங்கள் பிறந்த நேர ஜாதக குறிப்பின் வழியாகவும் அறிந்துகொள்ள முடியும். ஜாதகம் என்பது மிகச்சிறந்த எடுத்துக்காட்டு எனலாம். ஆனால், ஜாதகம் என்று சொன்னதுமே, எனக்கு எதுவுமே நல்லது நடக்கவே இல்லையே? என்றுதான் சொல்லுவார்கள். அதற்கு வேறு சில காரணங்கள் இருக்கின்றன. அதை தேர்ந்த ஜோதிடர், உங்கள் ஜாதகத்தை ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்து சொல்லுவார். நாம் இங்கே, இந்த பிரபஞ்ச ஆற்றல் சக்தியை மட்டும் கவனிப்போம்.
நாம் வாழ்கின்ற இந்த பூமியும் கூட, இந்த பிரபஞ்சத்தின் ஒரு கூறு என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. பூமிக்கு அருகிலும், தூரமாகவும், வெகு தொலைவிலும் பல்லாயிரம் நட்சத்திரங்கள் இருக்கின்றன என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இவற்றின் ஆற்றலும் சக்தியும் பூமியையும் வந்தடைகின்றன. கூடவே, நம் பூமியின் அண்டை வீட்டார்களான, சந்திரன், புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனி ஆகிய கோள்களின் ஆற்றல் சக்தியும் இணைந்துதான் கிடைக்கின்றன. இதனினும் மேலாக, ராகு கேது என்ற நிழலான, ஆற்றல் சக்தியும் கிடைக்கின்றன. ராகு கேது என்பதை, நாம் தனித்து பார்க்கவும் முடியாது. ஆனால், அவற்றின் ஆற்றல் சக்தி அபரிதமானது என்பது, பொதுவாகவே உங்களுக்கு தெரியும் அல்லவா?
இந்த பிரபஞ்ச ஆற்றல், ஓவ்வொரு, கோள்கள், சூரியன்கள், நட்சத்திரங்கள் ஆகியவற்றில் இருந்து வந்தாலும்கூட, தனித்தன்மைகளை பெற்றிருந்தாலும் கூட, எல்லாமே அதன் அதன் அளவில், ஒன்றாகவே கலந்துதான் வருகின்றன. எங்கெங்கே, எந்தெந்த பொருளில், உயிரில் மோதுகிறதோ, அந்த அளவில் தூண்டுதலை உண்டாக்குகின்றன. அவை நம்மை பொறுத்தவரையில், நன்மை தருவதாக இருக்கலாம். தீமை தருவதாகவும் இருக்கலாம். அது நம்முடைய குணாதசியம் என்ற அடைப்படை நிலையை பொறுத்தது ஆகும். அப்படியானால், இந்த அடிப்படை நிலையை மாற்றிட முடியுமா? என்ற கேள்வி எழுந்தால், அதற்கு தியானம் என்ற தவம் உதவுகிறது.
நம்முடைய உடலுக்கும், மனதிற்கும், உயிருக்கும் இத்தகைய, பிரபஞ்சம் ஆற்றல் சக்தி அன்றாடம், நொடிக்கு நொடி கிடைக்கிறது. அதை நாம் தனியாக உணர்ந்து கொள்வதற்கும் வழி இல்லாத நிலையில்தான், நம்முடைய சராசரி வாழ்க்கை நகர்கிறது. தியானத்தின் வழியாக, தவத்தின் வழியாக, மன ஓர்மை பெற்றவர்கள் மட்டுமே, இதை அனுபவ பூர்வமாக உணரமுடியும். அதுவரை அப்படியெல்லாம் வாய்ப்பே இல்லை என்று மறுத்துத்தான் பேசுவோம்.
மேலும் நம்முடிய வாழ்வின் அடிப்படைக்குக்கூட, இந்த பிரபஞ்சம் ஆற்றல் சக்தி உறுதுணையாக இருக்கிறது என்பதை, சித்தர்களும், அவர்வழி வந்தவர்களும், வேதாத்திரி மகரிஷி அவர்களும் உண்மை விளக்குகிறார்கள். பிரபஞ்சம் ஆற்றல் சக்தி இருக்கிறது, அது நமக்கு கிடைக்கிறது. நமக்குள்ளாக ஊடுறுவி நிறைகிறது. நம்மைக்கடந்தும் செல்கிறது என்பது உண்மையே!
வாழ்க வளமுடன்.
-