Is exercise necessary even in harmony with nature? Is normal life enough? What is your explanation for this?
இயற்கையோடு ஒத்து வாழக்கூடிய நிலையிலும், உடற்பயிற்சி அவசியம்தானா? இயல்பான வாழ்க்கை போதுமே? இதற்கு உங்கள் விளக்கம் என்ன?
நீங்கள் சொல்வது சரிதான். இயற்கையோடு ஒத்த தன்மையில், வாழக்கூடிய நிலையில், அன்றாட வேலைகள், கடமைகள் செய்துவந்தால், உடற்பயிற்சி அவசியம்தானா? என்று கேட்பது சரிதான். அதுபோலவே இயல்பான வாழ்க்கையில் முறையில் வாழ்ந்தாலும் போதுமானதுதான். ஆனால், உங்களை நீங்களே கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள். நிஜமாகவே நான், இயற்கையோடு ஒத்த தன்மையில் வாழ்கிறேனா? என்னுடைய அன்றாட வேலைகள், கடமைகள் உடலுக்கும், உடலுறுப்புக்களுக்கும் பலன் அளிக்கிறதா?
மேற்கண்ட கேள்விக்கு பதில் உங்கள் பதில் என்ன? அதை தனியே குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பொதுவாகவே இன்றைய உலகில், மிகச்சிலரே அத்தகைய உடல் உழைப்பையும், வேலையையும், கடமையையும் கொண்டிருக்கின்றனர். தினசரியாக உடல் உழைப்பை மட்டுமே நம்பி, பொருளையும், வருமானத்தையும் ஈட்டக்கூடிய மனிதராக அவர் இருப்பார். சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். இவரைப்போல நாம் உழைக்கவும் முடியாது. இவரைப்போல நாம் சாப்பிடவும் முடியாது என்று சொல்லுவார்கள். நிஜம் தானே?
பெரும்பாலோர் வாழ்க்கையில், அதிகாலை எழுந்து காஃபி, தேனீர் என்று ஆரம்பித்து, கைபேசியில், வரவேற்பறை தொலைகாட்சியில், செய்திகளையும், ராசி பலன்களையும் பார்த்துக்கொண்டே நகர்கிறது. நேரமிருந்தால், காரில், பைக்கில் நடைபாதை அமைந்த பூங்காவிற்கு சென்று, நடந்துவிட்டு மீண்டும் இல்லம் வந்துவிட்டு, ஏதோ அவசர அவசரமாக சாப்பிட்டு விட்டு, அலுவலகம், தொழில்கூடம் கிளம்பிவிடுகிறார்கள், வியாபாரம் தொடர்பான சந்திப்புக்கும் போய்விடுகிறார்கள். அவ்வளவுதான். இதிலேயே மாலை, இரவு வரை கடந்துவிடும்.
இதற்கிடையில் உட்கார்ந்த இடத்திலேயே இருந்து அலுவலை கவனித்தல், வெளியே வெயில், மழை, காற்று பொருட்படுத்தாத அலைச்சல், செயற்கை குளிரூட்டப்பட்ட அறைகளில் நீண்ட நேர வேலைகள், கணிணி, கைபேசி, தொலைகாட்சி வழியாக நேரம் செலவழிப்பு, அது பொழுதுபோக்காகவும் இருக்கும், அலுவல் காரணமாகவும் இருக்கும். மதிய நேர உணவு தள்ளிப்போகும், இரவுக்கு பசி இல்லாத வகையில், மாலையில் வடை, காஃபி, தேனீர் என்றும் ஜங் ஃபுட் என்ற உணவுவகைகளும் பட்டியலில் இருக்கும். இந்த வகையில், உடலுக்கும், உடல் உறுப்புக்களுக்கும் ஏதேனும் இயக்கம், அசைவு, அமைந்துள்ளதா?
ஏங்க ஐயா? அதற்காக, முதலாவதாக சொன்னது போல, எல்லோரும் கஷ்டப்பட்டா உழைக்க முடியும்? என்று நீங்கள் கேட்பது எனக்கு தெரிகிறது. அதற்கும் விளக்கம் தருகிறேன். நம்முடைய வாழ்க்கை, அதன் தரம் ஒவ்வொரு நாளும் உயர்கிறது. நாமும் நிறைய கற்றுக்கொண்டு, நம்மையும், நம் பொருளாதார நிலையையும் உயர்த்திக் கொள்கிறோம். அது கட்டாயமும், அவசியமும் ஆகும். அதில், நம் குடும்பத்தாரையும் கவனித்துக் கொள்கிறோம். ஆனால், உங்கள் உடலையும், உடலுறுப்பையும் கவனித்துக் கொள்கிறீர்களா? அங்கேதான் சிக்கலை, நீங்களே உருவாக்கிக் கொள்கிறீர்கள்.
இதனால்தான், நம்மையே மறந்து, அன்றாடம் வாழ்க்கை, அப்படியே ஒரே தன்மையிலேயே நகர்ந்துவிடுகிறது. தீடீரென்று ஏதேனும் உடல்நலம் பாதிக்கபடும் பொழுதுதான், அடடா, ஏதோ தவறு செய்து விட்டோமோ? என்று நமக்குள்ளாக தோன்றுகிறது. மேலும் பணம் இருந்தால், அதற்கான கட்டணத்தைக் கொடுத்து, மருத்துவமனையில் சேர்ந்து, மருத்துவரிடமும் நட்போடு பழகி, சரிசெய்து விடலாம் என்ற எண்ணமும் இருக்கிறது. ஆனால், அது எல்லா நேரங்களிலும் சரியாக அமைந்து விடுவதில்லையே? பொருள் இழப்பும் உண்டாகும், உடல் உறுப்பு செயல்பாடும் பாதிக்கும், வாழ்க்கையும் பாதிக்கும், அதற்கு மேலாகவும் நிகழும் அல்லவா?
இப்போது இந்த சிக்கலுக்கு தீர்வு என்ன? இயற்கைக்கு முரணாகவேதான் நாம் வாழ்கிறோம். இல்லையென்றால் அப்படியான சூழல்தான் இங்கே இருக்கிறது என்ற தெளிவுக்கு வந்துவிட்டு, இதிலிருந்து என்னையும், என் உடலையும், உடல் உறுப்புக்களையும் காத்துக்கொள்ள வழி என்ன? என்று தனக்குள்ளாக கேட்டு, ஆராய்ந்து, என்ன செய்தால் நம்மை காத்துக்கொள்ளலாம்? என்றும் சிந்தித்து, ஏதேனும் ஒரு மாற்றத்தை நிகழ்த்தலாம். அது எந்த ஒரு பயிற்சியாகவும் இருக்கலாம். என்றாலும், வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி மிகச்சிறந்த ஒரு தீர்வாகும்.
இன்னும் நான் இங்கே விளக்கமாக, இந்த சிக்கலை விளக்கலாம். ஆனால், நீங்கள் அந்த சிக்கலில் இருப்பதால், இதைவிடவும் தெளிவாக தெரிந்து கொள்ளவும் முடியும். நான் உங்களை, உங்களுக்கு அறிமுகப்படுத்தி, இந்த சிந்தனைக்குள் அழைத்து வந்துவிட்டேன். என்வேலை அவ்வளவுதான், இனி நீங்களே இதற்கான தீர்வை நோக்கி பயணிக்க முடியும். சரிதானே?
வாழ்க வளமுடன்
-