What is the Truth of Vethathirya Kayakalpa yoga and how it come to this form as exercise?
ஐயா, காயகல்ப யோகப் பயிற்சி என்பது சித்தர்களின் புதிரா? அதை எப்படி இப்போதுள்ள பயிற்சியாக மாற்றம் பெற்றது என்று விளக்குவீர்களா?
சிவ வாக்கியர் என்ற சித்தர் பெருமகான், அம்மை அப்பன் என்று தொடங்கும் ஒரு கவியில், இப்படியாக ஒரு கவி இருக்கிறது.
மூலமாம் குளத்திலே முளைத்தெழுந்த கோரையை
காலமே எழுந்திருந்து நாலுகட்டு அறுப்பிரேல்
பாலனாகி வாழலாம் பரப்பிரமம் ஆகலாம்ஆலம் உண்ட கண்டர் பாதம் அம்மைபாதம் உண்மையே!
இந்த கவி, காயகல்ப பயிற்சி உண்மையை, தெளிவாக தெரியப்படுத்துகிறது. ஆனால், அதை நாம் முழுமையாக தெரிந்துகொள்ள முடிகிறதா? இல்லை. ஆனால், தமிழ் படிக்கத்தெரிந்த அனைவரும், இதை படித்து ஏதோ புரிந்து கொள்ளலாம். அவ்வளவுதான். இந்த கவிதையின் கருத்துரை, விளக்கம் அறியமுடியாது. என்றாலும்கூட, நமக்கு புரிந்த அளவில் விளக்கம் சொல்ல வாய்ப்பு உள்ளது. அதை தனியே விளக்க வேண்டியதில்லை எனினும், ஒர் உதாரணமாக பார்க்கலாமே?
மூலமாம் என்றால், மூலாதாரம் என்று அறியமுடிகிறது. அந்த மூலாதாரத்தில் கோரப்புல் விளைகிறது. அதை அதிகாலை எழுந்து, நாலு கட்டு கட்டுமளவுக்கு அறுக்கலாம். அப்படி அறுத்துக் கொண்டே வந்தால், பாலன் போல, இளவயது சிறுவன் சிறுமி போல, வாழலாமாம். பரப்பிரம்மம் என்று முழுமுதற்ப் பொருளையும் அறிந்து அதைப்போலவும் ஆகலாமாம். ஆலம் என்ற விஷத்தை உண்ட சிவனின் அடிசேர்ந்த வகையிலும், சக்தியை சரணடைந்த வகையிலும் இது உண்மை என்று இந்த கவிதை விளக்குகிறது’ என்று நாம் சொல்லிவிடலாம். ஆனால் இதன்படி செய்தால் அது காயகல்பம் ஆகிவிடுமா?
மூலாதாரம் எங்கே? என்று அறியவேண்டும். அங்கே கோரைப்புல் எப்படி இருக்கிறது? என்பது அறியவேண்டும். இதற்கு முன்பாக கோரைப்புல் அங்கே எப்படி வந்தது என்பதையும் அறியவேண்டுமே? நாலுகட்டு அறுக்கவேண்டும் என்றால் எப்படி? எதனால் அறுக்கவேண்டும்? அறுத்து எங்கே வைக்கவேண்டும்? இப்படி கேள்வி கேள்வியாக பிறக்கும்தானே?
இப்படியாக பல நூறு சித்தர்கள், இத்தகைய காயகல்பம் என்ற தத்துவத்தை மறைமுகமாக சொல்லி இருக்கிறார்கள். இதன் அவசியம் அவர்களுக்கு, தங்கள் வாழ்நாளை மெய்பொருள் ஆராய்ச்சியில் செலவழிக்க அவசியமாகவும் இருந்ததுதானே!
இந்த சித்தர்கள் ஏனய்யா இப்படி குழப்புகிறார்கள்? என்று நமக்கு அங்கலாய்ப்பாக இருக்கிறது அல்லவா? ஆனால், இதுதான் சித்தர்களின் வழிமுறை. ரகசியம் காக்கும் குழூஊகுறி பாடல்கள் என்று சொல்லுவார்கள். மேலோட்டமாக ஒன்றும், உள்பொதிந்த அர்த்தத்தைக் கொண்டும் அதை வார்த்தைகளால் சொல்லுவதாகும். மேலும் முக்கிய காரணம், இந்த உண்மைகள், உண்மையை அறிந்து தேடுபவர்களுக்கு மட்டும் கிடைக்கவேண்டும் என்ற காரணமும் ஆகும்.
இதைத்தான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் ஆராய்ந்தார், பல்லாண்டுகள் அதை தேடித்தேடி, உணர்ந்தறிந்து, ஒழுங்குபடுத்தி, தானே செய்து பார்த்து, திருத்தங்கள் ஏற்று முழுமை செய்தார். அதுதான் நமக்கு, வேதாத்திரிய காயகல்ப யோக பயிற்சியாக நமக்கு கிடைத்திருக்கிறது. இதைக் குறித்த விரிவான காணொளி பதிவை இங்கே காணலாம். உண்மை அறியலாம்.
வாழ்க வளமுடன்.