Do you know the true secret of the great life force you receive? Do you know how to protect it?
உங்களுக்கு கிடைக்கும் மகத்தான உயிர்சக்தியின் உண்மை ரகசியம் அறிவோமா? அதை எப்படி பாதுகாக்கலாம் தெரியுமா?
இந்த உலகில் நிலையாக இருப்பதை, அசையாமல் இருப்பதை பொருள் என்கிறோம். ஆனால் அசையும் ஒவ்வொன்றையும், உயிர் என்று அழைக்கிறோம். அசையும் ஒரு கருவிக்கு, மின்சாரம் என்ற சக்தி அவசியமாகிறது. அதுபோல ஜீவன்களுக்கு, உயிர் சக்தி அவசியமாகிறது. மனிதனுக்கும் அவ்வாறு தான். எனினும், மனிதனுக்கு மட்டுமே அந்த சக்தியை, இன்னும் அதிகமாக கூட்டிக்கொள்ளவும், இருப்பாக்கி வைக்கவும் முடிகிறது. இந்த சக்தியால் தான், நாம் தினமும், இயங்குகிறோம், உழைக்கிறோம், சேவை செய்கிறோம், இன்பங்களை அனுபவிக்கிறோம். இந்த சக்தி நான்கு வகையாக கிடைக்கும்.
நாம் உண்கின்ற உணவு வழியாகவும், நாம் சுவாசிக்கும் காற்றின் வழியாகவும், வானில் உலாவுகின்ற நட்சத்திரங்கள், கோள்கள் வழியாகவும், பூமியின் மையத்தில் எழுகின்ற அணுக்களின் வழியாகவும், உயிர் சக்தி நமக்கு கிடைக்கிறது. இதை நாம் தினமும், உடலுக்குள்ளாக தக்கவைக்க வேண்டும் அல்லவா? அதற்காகவேதான், தூக்கம் என்பது அமைகிறது. அந்த தூக்கம் ஆழ்ந்த அமைதியான, கனவுகள் இல்லாத, அரை விழிப்பு இல்லாத, தூக்கமாக இருக்க வேண்டியது அவசியம். உயிர் சக்தியை கூட்டுவது மட்டுமில்லாமல், நம்முடைய சக்தி இழப்பையும் கூட, தூக்கம் சரி செய்கிறது.
இந்த உயிர்சக்தி, நமக்கு இருப்புக்கு மேலே இருந்தால், மகிழ்ச்சி என்பது உங்களோடு இருக்கும். கவலை, வருத்தம், சோர்வு, அசதி, வலி இப்படி எதுவுமே உங்களை அணுகாது. அதோடு யாருக்காவது உதவலாமே? என்ற எண்ணம் உங்களுக்குள் மேலோங்கும். முதலில் நீங்கள் மகிழ்வாக, சந்தோசமாக இருக்கலாம். உங்கள் வீட்டில் மற்றவர்களை சந்தோசப்படுத்தலாம். உங்கள் வாழ்க்கைத் துணையை பாராட்டி மகிழலாம். அன்பை பெருக்கலாம். உங்கள் நண்பரோடு நட்பை பாராட்டலாம். சமூகத்திற்கும் உங்களுடைய பங்கை அளித்து, நீங்களும் பயன்பெறலாம். இவ்வளவு நன்மைகள் இருக்கிறது.
ஆனால், நாம், ஏற்கனவே இருக்கிற, உயிர்சக்தியை இழந்துகொண்டே, ஒவ்வொரு நாளும் தடுமாறுகிறோம். தூக்கத்தை தள்ளிப் போடுகிறோம். காரணமில்லாமல் சினம் கொள்கிறோம். நம்மோடு இருப்பவர்களிடமே கோபத்தை காட்டுகிறோம். அடிக்கடி கவலை, குழப்பம், தடுமாற்றம் நிகழ்கிறது. உடல் சோர்வாக இருக்கிறது. மிச்சமிருக்கும் சக்தியை, ஆர்வத்தாலும், ஆசையாலும், எதிர்பார்ப்பாலும், தவறாகவும் பயன்படுத்தி, சிக்கிக் கொள்கிறோம். வாழ்வே வேண்டாம் என்ற முடிவுக்கும் வந்து விடுகிறோம் தானே? இதற்கெல்லாம் ஒரே வழி, உயிர்சக்தி விளக்கமும், சிந்தனையுமே ஆகும்.
வாழ்க வளமுடன்.