Why can't you find time for exercise? How can this be changed? Give an explanation. | CJ

Why can't you find time for exercise? How can this be changed? Give an explanation.

Why can't you find time for exercise? How can this be changed? Give an explanation.


உடற்பயிற்சிக்கென்று நேரம் ஒதுக்கிட முடியாமல் இருப்பது ஏன்? எப்படி இதை மாற்றிக் கொள்ளலாம்? விளக்கம் தருக.


பெரும்பாலான அன்பர்களும் இந்த நிலையில்தான் இருக்கிறார்கள். உடற்பயிற்சி செய்ய ஆர்வமும், அதன் பலனை அடைவதற்கு ஆசையும் இருக்கிறது. ஆனால் நேரமின்றி தவிக்கிறார்கள். இவர்கள் எந்த வயது? என்று எடுத்துக்கொண்டால், முப்பது முதல் ஐம்பது வயதுக்குள்ளானவர்களாக இருப்பார்கள். இதில் ஆண்களும் பெண்களும் உண்டு.

முக்கியமாக, தங்கள் சூழ்நிலையில் சிக்கி இருப்பார்கள். வேறாக சொன்னால், அந்த சூழ்நிலையின் மீது பழி போடுவார்கள் எனலாம். இருக்கும் தேவைகளை நிறைவேற்ற பரபரப்பாக இருப்பார்கள். ஏதேனும் செய்தால் நல்லது என்றே இயங்குவார்கள். ஆனால், உடல்மீது அக்கறை இருக்காது. காரணம். தங்களை தாங்களே, நான் நன்றாகத்தானே இருக்கிறேன்? என்று கேட்டு, அதில் அதீத நம்பிக்கையும் கொள்வார்கள். கூடுதலாக, இவர்களின் மனம் அவர்களை விட பரபரப்பாக இருக்கும். சும்மா இருக்கவும் விடாது.

இதனால், எதைச் செய்தாலும் அதில் திருப்தி இல்லாமல், அடுத்து ஒன்றையும் செய்யலாமே? என்று கடந்து போய்க்கொண்டே இருப்பார்கள். ஒரு நேர சாப்பாட்டைக்கூட, திருப்தியாக, மன நிறைவாக ருசித்து, ரசித்து சாப்பிட மாட்டார்கள். ஆனால் பிறர் கேட்டால், ‘அருமை’ என்று சொல்லி விடுவார்கள். நான் எப்படியெல்லாம் அனுபவத்தேன் தெரியுமா? என்று கதையளப்பார்கள். அவ்வளவும் வார்த்தையாக மட்டுமே வரும், மனப்பூர்வமான அனுபவமாக இருக்காது.

இப்படித்தான் இவர்களின் ஒவ்வொருநாளும், கடந்து போய்க்கொண்டே இருக்கும். எல்லாம் தெரியும் என்ற நிலையிலும், எனக்கு இதுவும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நிலையிலும் நாட்களை கடத்துவார்கள். புதிதாக கற்றுக்கொள்ளவும் தயங்க மாட்டார்கள். ஆனால் அவற்றில் எது தனக்கு உகந்தது? தேவையானது? என்று பிரித்தறியாமல், தேர்ந்தெடுத்துக் கொள்ளாமல், குழப்பத்தோடு கைவிட்டு விடுவார்கள். ஆனால் தன்னை பெருமையாக வெளிப்படுத்திட தயங்கமாட்டார்கள்.

இந்த நிலைகளுக்கு மொத்தமான காரணம் என்ன? என்று ஆராய்ந்தால், மனம் ஒரு நிலையில் இல்லை. அவர்களின் செயலுக்கும், இயக்கத்திற்கும், நடவடிக்கைகளுக்கும் மேலாக, பதட்டமாகவும், குழப்பமாகவும் இருக்கிறது. இதை, ஒரு உதாரணமாக சொல்லுவது என்றால், சென்னை கடற்கரை முதல், தாம்பரம் வரை மின்சார ரெயில் வண்டி இயங்கிக் கொண்டே இருக்கிறது. ஒருவழியில் போகவும், இன்னொரு வழியில் வரவும் இருக்கிறது. இதில் நீங்கள் பயனிக்கும் பொழுது, எங்கே ஏறி, எந்த இடத்தில் இறங்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டவராக இருக்கவேண்டும். இந்த மின்சார ரெயில், கடற்கரையும் போகும், தாம்பரமும் போகும் என்பதால், நீங்களும் இங்கே அங்கே போய்க்கொண்டே இருக்கமுடியாது. எங்கே இருந்து ஏறி பயணிக்கிறீர்கள்? எங்கே பயணத்தை முடித்து இறங்க வேண்டும் என்று முடிவு செய்திட வேண்டியது முக்கியம்.

இதுப்போலவே, ஒருநாளில் நான் இந்த இந்த வேலைகளை, கடமைகளை செய்வேன், என்று முன்னதாக திட்டமிட்டு, உடற்பயிற்சிக்கு அரை நேரமோ, ஒரு மணி நேரமோ ஒதுக்கி, அந்த நேரத்தில், உங்கள் நிலைமையை, மன வேகத்தை, பரபரப்பை மாற்றி அமைக்க வேண்டும். வேறெதும் குறிக்கிடாத கவனமும், விழிப்பும் வேண்டும். நிச்சயமாக நேரம் இல்லை என்றால், உங்கள் தூக்கத்தை விடுத்து, முன்னதாக அந்த அரை மணி, ஒரு மணி நேரத்தை எடுத்துக் கொண்டு செலவழிக்கலாம். ‘ஐயோ, என் தூக்கம் போய்விடுமே என்றால், உடலே போய்விடுமே?’அதை கவனத்திக் கொள்க.

இப்படி விளக்கம் பெற்றும் என்னால் முடியாது, முடியவில்லை என்றால், உங்களிடம் மிகப்பெரிய குறை இருக்கிறது எனலாம். அதுதான் நேர மேலான்மை. ஒரு நாளை, நேரத்தை, சூழலை எப்படி, உங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வது என்பது, உங்களுக்குத் தெரியவில்லை. உடனடியாக அதை மாற்றி அமைக்க வேண்டும். உங்கள் உடல்நலனில் நீங்களே அக்கறை செலுத்தவில்லை என்றால், எப்படியாகும்? இழப்பு வேறு யாருக்கு? இன்றே, இச்சிந்தனையை தொடங்குக. உடல்நலம் பெற்று சிறப்பாக வாழ்க.

வாழ்க வளமுடன்.

-