Does nature teach us a lesson in the result of action?
வினையிலே கிடைக்கின்ற பயனில் நமக்கு இயற்கை பாடம் நடத்துகிறதா?
கர்மா என்ற வினை குறித்து, எவ்வளவு பேசினாலும் கூட, அதை நாமாக நம்முடைய அனுபவ அறிவோடு புரிந்து கொள்ளும் பொழுதுதான், அதன் சுமையும், அழுத்தமும், வீரீயமும் தெரியவரும். ‘இவ்வளவு காலமாக இப்படியாக ஒன்றை தெரிந்து கொள்ளாமல் போயிற்றே என்ற வருத்தமும் எழும். இனிமேலாவது மாற்றி அமைக்கலாம்’ என்ற நம்பிக்கையும் எழுந்துவிடும். இந்த கால சூழ்நிலையில், ஒவ்வொருவருக்கும் அப்படியான அனுபவம் கிடைக்க விரும்புவோம். ஏனென்றால், நம்முடைய, மனித பரிணாமத்தின், ஆறாம் அறிவின் எழுச்சியான பிறப்பையும், அதன் முழுமையையும், நிறைவையும் பெற்று, அனுபவித்து, இன்பமாக, சுகமாக வாழ்வதற்கு தடையாக இருப்பதே இந்த ‘கர்மா என்ற வினை’ தானே!
வேதாத்திரி மகரிஷி அவர்கள் விளக்கும் பொழுது, நமது முன்னோர்கள் நல்லது கெட்டது என்பதைத் தீர்மானித்துச் சிலவற்றைச் செய்யலாம், சிலவற்றைச் செய்யக்கூடாது என்னும் முறையிலே அனுமதி கொடுத்தும், தடை விதித்தும் வந்துள்ளார்கள். அவைகளெல்லாம் அந்தக் காலத்தை ஒட்டிய வாழ்க்கை முறைக்குப் பொருத்தமாக இருந்திருக்கும்.
நாம் இன்னும் அதிகமாக, ஆழமாகப் போனால் அந்தக் காலத்தில், ‘இதைச் செய், இதைச் செய்யாதே’ என்று சொல்வதற்கு அவர்கள் எடுத்துக் கொண்டது ‘சொர்க்கம், நரகம்’ என்ற இரண்டு கற்பனைகளே. நல்லவை செய்தால் கடவுள் ஒருவனுக்கு நல்ல இடத்தைக் கொடுப்பான். தீயவை செய்தால் தண்டிப்பான் என்று ஆசை காட்டியும், அச்சுறுத்தியும் நல்லன செய்யவும், தீயன தடுக்கவும், வேண்டிய அளவிற்கு மக்களுக்குப் போதித்து வந்தார்கள். விஞ்ஞான அறிவு வளர்ச்சி பெற்று வரும் இந்தக் காலத்திலே அந்த முறை எவ்வளவு நாட்கள் தொடர்ந்து பயன்படும்?
இன்றைக்கு என்ன வேண்டும் என்றால், ‘ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு’ என்ற இயற்கையின் நியதியை (Law of Nature) மனிதன் உணர்ந்து கொள்ளக்கூடிய அளவிற்கு சிறுவயதுலேயிருந்து படிப்படியாக விளக்கி அந்த உணர்வு ஒவ்வொருவருக்கும் வந்து விட வேண்டும். ‘இதைச் செய்தால் அதன் விளைவு இதுவாகத் தான் இருக்கும், அந்த விளைவைத் தாங்கிக் கொள்வதற்கு நான் தயாரா?’ என்ற அளவிற்கு ஒவ்வொருவரும் அவர்களுடைய செயலிலே விளைவாகத் தொக்கி நிற்கக் கூடிய ஒரு உண்மையை, இயற்கை அமைப்பை உணர்ந்து கொள்ளக்கூடிய முறையில் உள்ள கல்விதான் இன்றைக்கு அவசியம்.
செயலிலேயே விளைவு இருக்கின்றது என்பது தெளிவாகவும், உறுதியாகவும் உணர்ந்து கொள்ளப் பெற்றால் ஒரு ஆசை எழும்போது, அதனை நிறைவேற்றிக் கொள்ளச் செயலில் இறங்கும்போது நல்லது அடைவோம் என்று நன்மை செய்வான். இந்த முறையிலே தான் தற்காலத்திற்கு கல்வி முறை அவசியம். ‘வினையும் பயனும்’ என்ற முறையிலே ஒரு தெளிவான பொறுப்புணர்ச்சி ஏற்படுவது இன்று எல்லோர்க்கும் அவசியம்.
அந்த வழியில்தான், வேதாத்திரிய மனவளக்கலை அன்பர்களுக்கு உதவுகிறது. ஏன் மனவளக்கலையில் இணைந்து விளக்கம் பெறவேண்டும் என்று அறிவோமா? தனிப்பட்டதாக, என்றோ வாழ்வில் கிடைக்கும் அனுபவத்திற்கு பதிலாக, நாமாகவே விரும்பி, உண்மையை தெரிந்து கொண்டு, விளக்கம் பெற்று, நம்மையும், நமக்குப்பின் வரக்கூடிய சந்ததியினரின், மகிழ்ச்சியும், நிறைவுமான வாழ்க்கைக்கும் நாம் உதவமுடியும். நமக்கு முன்பாக, நம் பரம்பரையினரின் தொகுப்பான குறைகளைக்கூட, நாம் திருத்தி அமைத்துக் கொள்ளவும் முடியும்.
வாழ்க வளமுடன்.
-