Is health important to a man? Is mental resourcefulness important? Explain this dilemma.
ஒரு மனிதனுக்கு உடல் நலம் முக்கியமா? மன வளம் முக்கியமா? இந்த குழப்பமான நிலையையை விளக்குக.
இந்த கேள்விக்கு பதில் தரும் முன்பாக, கேள்வி கேட்டவரின் சூழல், வாழும் நிலை, தகுதி, இப்போதிருக்கும் வாய்ப்பு, எதிர்பார்ப்பு அல்லது நிறைவு என்ற அளவுகளைக் கொண்டு சொல்லவேண்டியதாக இருக்கிறது.
நீங்கள் உலகவாழ்வில், ஒரு நல்ல உயர்வான நிலைக்கு, பொருள் செல்வாக்கோடு நிலைக்க வேண்டும் என்று விரும்பினால், முதலில் மன வளம் முக்கியம். அந்த மன வளத்தினால், உடலை நலமாக்கி, இந்த பொருள்முதல்வாத உலகில் வென்று உயரலாம். மனம் சோர்வாகவும், குழப்பமாகவும், தடுமாற்றமாகவும் இயங்குமானால், அது உங்கள் உடலை, உடலுறுப்புக்களை கெடுக்கும். வேலை, வியாபாரம், தொழில் என்று எதனையும் செய்யவிடாது. முயற்சியில் தோல்வியை தரும். விளைவு, நட்டமாகும். இதனால் மனம் உற்சாகமாக இருக்க என்ன வேண்டும்? என்ற நோக்கத்தில் மன வளம் முக்கியம். இதற்கு யோகம் உதவுமா? நிச்சயமாக உதவும். ஆனால், யோகம் வாழ்க்கை இன்பத்தையும், பொருளாதாரத்தையும், இல்லறத்தையும் சிதைக்கிறது என்றுதானே, பெரும்பாலோர் நினைக்கிறார்கள்? சரிதானே?!
இரண்டாவது வகை மனிதராக பார்த்தால், ஏதோ ஓரளவில் நிலையான பொருள் கிடைக்கிறது. அன்றாட வாழ்வு நகர்கிறது என்ற நிலையில் இருக்கும் மனிதரை எடுத்துக்கொள்ளலாம். அதேபோல, பொருளில் நிறைவு பெற்று, இருப்பது போதும் என்ற அளவில், அன்றாட வரவில், கொஞ்சம் எடுத்துக்கொண்டு, மற்றதை சேவையாக உலகுக்கு திருப்பித்தரும் மனிதர்களையும், இங்கே இணைத்துக் கொள்ளலாம். இவர்களுக்கு இப்போது, உடல் நலம்தான் முக்கியம். ஏனென்றால், இதுநாள் வரை, அந்த உடலைக்கொண்டு, பலவிதங்களில் தூக்கம் கெட்டு, உடல் பலம் கெட்டு, தன்னுடைய பொருளாதாரத்தை உயர்த்திருப்பார்கள். உடலில் பலவித நோய்கள் தலைதூக்கி நிற்கும். சில உடல் உறுப்புக்கள் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். சிலர் ஏதேனும் அறுவைசிகிச்சையும் செய்திருப்பார்கள். உணவே மருந்து என்பதற்கு பதிலாக, மருந்தே உணவாக சாப்பிடம் பழக்கத்திற்கு வந்திருப்பார்கள். இதனால் இவர்கள், உடலை காத்திட வேண்டும், உடல் நலமே இவர்களுக்கு முக்கியம். பிறகு அதன் வழியாக மன நலன் காக்கப்பெறலாம்.
மூன்றாவது வகை மனிதர், உலக வாழ்க்கையில் இருந்தாலும், உள்முகமாகவே, தன்னைக்குறித்த ஒரு தேடுதலைக் கொண்டிருப்பார். ஒருவகையில் அது, அவருடைய முன்னோர்களின் விருப்பமாகவும், அதை நிறைவேற்றிட பிறந்தவராகவும் இருப்பார். இவருக்கு, நேரடியான யோகம் தேவை. அப்படியானால் பொருள் பணம் அவசியமில்லையா? என்ற கேள்வி எழும்தானே? இவர், இயல்பாக அதை ஏற்றுக்கொண்டு செயல்படுபவராக இருப்பார். வேண்டுதலும் எதிர்பார்த்தலும் இருக்காது. இருந்தாலும் அமைதி, இல்லையென்றாலும் அமைதி என்ற நிலையில் இருப்பார். உங்களில் கூட அப்படியாக சிலர் இருக்கலாம். இந்த மனிதர் யோகத்தில் உயர, உடல் நலமும் வேண்டும், மன வளமும் வேண்டும். ஆனால், முதன்மையாக, உடல் நலம் சீர் செய்துவிட்டால், அடுத்து மன வளம் நோக்கி தானாக நகர்ந்துவிடுவார்.
இப்படியாக, ஒரு மனிதனுக்கு உடல் நலம் முக்கியமா? மன வளம் முக்கியமா? என்ற கேள்விக்கான விடையை கண்டுவிட முடியும். இதை நீங்கள் மிகச்சரியாக எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பதைக் கண்டுபிடித்து அதன்படி நீங்கள், பயிற்சியை தொடங்கலாம்.
வாழ்க வளமுடன்.
-