There is no compulsion to change through yoga. Why?
யோகத்தின் வழியான, மாற்றத்திற்கு வரவேண்டிய கட்டாயம் ஏதுமில்லை. ஏன்?
இந்த உலகில் பிறந்து வாழும் நாம், யாருடைய பிள்ளை, யாருடைய வாரீசு, யாருடைய வம்சாவழி என்பதெல்லாம் தெரியும். அதை நாம் வளரும் பொழுதே தெரிந்தும் கொண்டு, அதை இறுக பற்றிக்கொண்டும் விடுகிறோம். நாம் வீடு, ஊர், நாடு என்பதையும்கூட விரிவாக, நுண்ணிய தகவல்களோடு அறிந்து கொள்கிறோம். சமூகம், உலகம் என்ற செயல்பாடுகளையும், அதன் பாரம்பரியம், வரலாறு, முன்னேற்றம் என்பதையும் தெளிவாகவே நாம் புரிந்தும் கொள்கிறோம். கல்வியும் இதற்கு உறுதுணையாக இருக்கிறது.
ஆனால், மனிதனாக இருக்கிற நாம், பரிணாமத்தின் எழுச்சியில் வந்த, ஆறறிவான ஜீவன் என்பதை ஒரு விளக்கமாக பெற்றுக்கொண்டாலும், ‘நான் யார்?’ என்ற கேள்வியை கேட்டுக்கொண்டதில்லை. நீ யார்? என்று மற்றவர்களை தயங்காமல் கேட்கும் நாம், நமக்குள்ளாக கேட்டுக்கொள்வதே இல்லை. அது குறித்த அக்கறையும் நமக்கில்லை. நம்மைச்சார்ந்த குடும்ப உறவுகள் யாரும்கூட சொல்லித்தரவும் இல்லை. ஆனால், ஏதோ ஒருவகையில், நண்பர்களோ, யாரோகூட, இப்படியாக ‘நான் யார்?’ என்ற கேள்வி இருக்கிறது. அதை கேட்டுப் பார்க்கவேண்டும். இதற்கு பக்தி கடந்த யோகம் உதவும் என்று சொல்லி இருப்பார்கள். உங்கள் சூழ்நிலைகளும் இப்படியான கேள்வியை உருவாக்கிடவும் வாய்ப்புண்டு.
ஒரு சிலருக்கு, இப்படியாக ‘நான் யார்?’ என்று தனக்குத்தானே கேட்டுக்கொள்வது அவசியம்தானா? என்றும் நினைப்பார்கள். ஆறாம் அறிவு ஜீவன் என்று தன்னை உயர்வாக சொல்லிக்கொள்கின்ற மனிதன், அந்த ஆறாம் அறிவை, அதன் பயனை, அற்புதத்தை அறிந்து கொள்ள வாய்ப்பு இருக்கும் பொழுது, அதை தவறவிடலாமா? மறுத்து ஒதுக்கித் தள்ளலாமா? எனினும் இவர்களை எல்லாம், வற்புறுத்தியோ, கட்டாயப்படுத்தியோ, யோகத்தின் வழியாக, நீங்கள் உண்மை உணர்ந்து கொள்ளுங்கள் என்று சொல்லமுடியாது. இதெல்லாம் தானாக வருவதும், தனக்குள்ளாக மலரும், சிந்தனையும் ஆகும். சட்டமோ, விதியோ ஏற்படுத்தி, நாம் ஒன்றும் செய்வதற்கில்லை. அப்படியான அவசியமும், அவசரமும் அவர்களுக்கு இல்லை.
இப்போது, உள் ஆர்வத்தோடும், மற்றவர்கள் சொல்லி, ஏதோ தவிர்க்கமுடியாத கட்டாயத்திலும், விருப்பத்திலும் யோகத்தில் இணைந்து கொண்டோம் என்று வைத்துக்கொண்டால், அடுத்தடுத்த நடவடிக்கை எப்படி இருக்கும்? என்ற கேள்வி எழும் அல்லவா? இந்த கேள்விக்கு, வேதாத்திரி மகரிஷி அவர்களே பதில் தருகிறார். எப்படி என்று பார்க்கலாமா?
வேதாத்திரி மகரிஷி அவர்கள், நம்மிடம் இப்படியாக விளக்குகிறார். மனவளக்கலை மன்றத்திற்கு வந்ததால் என்னென்ன நன்மைகள் வந்தன? சினிமாவுக்கு, கோயிலுக்குப் போனதால் என்னென்ன நன்மைகள் வந்தன? இரண்டு மாதங்கள் கழித்து மனதுக்கு, தெளிவோ, அமைதியோ, வெற்றியோ, மகிழ்வோ இருக்கிறது என்றால் அதைப் பின் பற்றி வாருங்கள்.
இல்லை, இதைவிட எனக்குக் கோயிலுக்குப் போனதனால், சினிமாவுக்குப் போனதனால் நன்றாக இருக்கிறது என்று சொன்னால், இன்னும் சில நாட்களுக்கு அதையே தொடருங்கள்.
ஆனால், மனவளக்கலை மன்றம் மனிதனை மனிதன் ஆக்க வல்லது. மனதைத் திடப்படுத்த வல்லது. மனது திடம் இல்லாததனால்தான் வாழ்க்கைச் சிக்கல்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை; தாங்கிக் கொள்ள முடியவில்லை; அதைப் போக்கிக் கொள்ள முடியவில்லை. அப்போதுதான் சினம் உண்டாகிறது. துன்பம் உண்டாகிறது.
மனதிலே நல்ல வலு இருக்குமேயானால் இதெல்லாம் தானாகவே போக்கி விட முடியும். உங்கள் கையில் ஏதேனும் பொருள் இருக்குமேயானால், அப்போது விருந்தினர் வந்துவிட்டால் அச்சமில்லை. உட்காருங்கள். இதைச் சாப்பிடுங்கள். அதைச் சாப்பிடுங்கள் என்பீர்கள். உங்கள் கையில் பொருள் இல்லையானால் எப்படி இருக்கும்? சோர்வு இருக்கும்.
அதே போல, மனம் வளமாக இருக்குமேயானால் ஏதேனும் புதிய சிக்கல்கள் தோன்றும்போது அதைச் சோர்வு இல்லாது தாங்கிக் கொள்ளலாம். வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்கள் எதையெடுத்தாலும் போக்கிவிட முடியும் என்று நினைக்காதீர்கள். அல்லது பிறருடைய வாழ்க்கைச் சிக்கல்களை நாம் போக்கிவிட முடியும் என்ற அகம்பாவமும் யாருக்கும் வேண்டாம். அவரவர்களே போக்கிக் கொண்டால் தான் முடியும். அதற்கு மற்றவர்கள் உதவி செய்ய முடியும்; ஒத்துழைக்க முடியும்.
ஒரு கிணற்றுக்கு, இன்னொரு கிணற்றிலிருந்து குழாய் மூலம் நீரைச் செலுத்தி நிரப்ப இயலாது; அந்தக் கிணறு நிறையாது. அதனுடைய ஊற்று வந்தால்தான் எப்போதுமே கிணறு நிரம்பும்.
ஒருவருக்கு ஏதோ ஒரு சிரமம் இருக்கிறது. பத்து ரூபாய் கொடுத்தோம். அந்தச் சிரமம் போய்விட்டது என்பது இல்லை. இன்றைக்குப் பத்து ரூபாய் கொடுத்தோம் என்றால் நாளைக்கு இருபது ரூபாய் கொடுக்க வேண்டிய நிலைவரும்.
ஒவ்வொருவருடைய உள்ளமும் ஒரு பெரிய சுரங்கம். அறிவாலும், ஆற்றலாலும் அதை வளர்க்க வேண்டும். அதைத் தான் 'மனவளக்கலை மன்றம்' (Simplified Kundalini Yoga) செய்கிறது.
உடலாலும் மனதாலும் மனிதனை மேல் நோக்கி வரச் செய்ய அவர்கள் செய்ய வேண்டிய செயல்களையெல்லாம் வழிப்படுத்தி வாழ வைக்கத் தேவையானப் பயிற்சிகளை அளிக்கிறது. அதை அனுபவத்தினால்தான் தெரிந்து கொள்ளவும் முடியும். எனவே, நமக்கு கிடைத்த அரிய வாய்ப்பை, பிறவியின் நோக்கமும், கடமையும் தீர்க்க பயன்படுத்திக் கொள்ளலாம்.
வாழ்க வளமுடன்!
-