Thoughts are always running through me. I couldn't control it. Is this good? Bad?
ஐயா, எப்போதும் எனக்குள் எண்ணங்கள் ஓடிக்கொண்டே இருக்கின்றன. என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. இது நல்லதா? கெட்டதா? எப்படி இதை சரிசெய்து கொள்வது?
எண்ணம் என்பது இயற்கையானது. இயல்பானது. இன்னும் தெளிவாக சொல்லுவதானால் உயிர்ப்பானது. ஆம். நீங்கள் உயிருடன் இருக்கிறீர்கள் என்ற கருத்தே அதில் பொதிந்து இருக்கிறது. அதனால்தான், தடையில்லா நீரூற்றுபோல, அலை அலையாக எழும் கடல்போல, எண்ணங்கள் வந்து கொண்டே இருக்கின்றது. பொதுவாகவே, அது அதன் இயல்பில் தானாகவும் வரும். நீங்கள் உணரும், பார்க்கும், கேட்கும் நிகழ்ச்சிகள் வழியாகவும் வரும். மற்றவர்கள் தூண்டுதலாலும் வரும். நீங்களாகவே எதேனும் நினைத்தாலும் வரும்.
எண்ணம் என்பது, நம் மனதோடும், மூளையோடும் தொடர்பு ஏற்படுத்தி, காட்சியாக தருவது மட்டுமில்லாமல், உங்களுக்கு செயல் ஊக்கத்தையும் தந்துவிடும். இந்த உண்மையை நன்கு புரிந்து கொண்டால் மட்டுமே, நாம் இயல்பாக வாழவும் முடியும். இல்லையேல், நொடிக்கு நொடி நம்முடைய செயல்களில், நடவடிக்கைகளில் பதட்டமும், தடுமாற்றமும் வந்துவிடும். சிலர், ‘தனக்குள்ளாக, யாரோ இருந்து கட்டளை இடுகிறார்கள்’ என்று கூட சொல்லுவதுண்டு. அந்த அளவிற்கு எண்ணம் ஆட்சி செய்யக்கூடியதுதான்.
இந்த எண்ணம், அதன் செயலாக்கம், அதனுடைய மூலம், எந்த நவீன விஞ்ஞானத்தாலும், விஞ்ஞான கருவிகளாலும் விளக்கமாக அறியமுடியவில்லை. ஆனால் அதன் செயல் அளவைகளை, அளக்கின்ற கருவிகள் இருக்கின்றன. ஒரு மனிதன் தனக்குள்ளாக, எண்ணங்களின் அதிர்வோடு இருக்கிறானா? அமைதியாக இருக்கிறானா? என்று மன அலைச்சுழல் கருவி வழியாக அறியமுடியும். எனினும் கூட, ஆல்ஃபா, தீட்டா என்ற நிலை மட்டுமே அறியமுடியும் என்று சொல்லுகிறார்கள். டெல்டா என்ற நிலையை அறிய முடியவில்லை. ஏனென்றால் அது ஒன்றும் அற்றதாக, ஜீரோவும் அதற்கு கீழேயும் என்று முடிவு செய்கிறது. ஆனால் யோகத்தின் வழியாக, தவம் கற்ற ஒருவர், அந்த டெல்டா அலையிலும் நிலைக்க முடியும், உணரவும் முடியும். அதுவேதான் மெய்ப்பொருள் உண்மையையும் அறியும் நிலையாகும்.
எனவே, எண்ணங்கள் ஓடிக்கொண்டே இருக்கின்றன என்றால், அது அதனுடைய இயல்பு. அதை கட்டுப்படுத்த வாய்ப்பில்லை. ஆனால் ஒழுங்கு செய்யலாம். நாம் விழிப்பாக, அதை கவனிக்கும் பொழுது, இது தேவை, தேவையில்லை, இது நல்லது, இது வேண்டாம் என்று முடிவு செய்யவும் முடியும். எண்ணமே எல்லாவற்றிற்கும் ஆதாரமாக திகழ்வதை நாம் மறக்கக்கூடாது. எண்ணம் எழுமிடமோ, உள்ளம் எனும் சிறு புள்ளி, விரிந்திடும் இடமோ, அகண்டாகாரம் என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் குறிப்பிடுகின்றார். அதன் பெருமை உணர்ந்து, நல்ல எண்ணங்களை நமக்குள் விதைக்கவும் வேண்டும். அவற்றையே அறுவடை செய்யவும் வேண்டும்.
இந்த காணொளி உங்களுக்கு மேலும் சில விளக்கங்களை தரலாம்.
வாழ்க வளமுடன்.