Why the Tamil Month Margazhi is special with ritual and celebration? Please Explain this one!
மார்கழி மாதம் என்பது ஏன் அதிக மதிப்பாக இருக்கிறது? அதனை பீடை மாதம் என்றும் சொல்லுகிறார்களே? விளக்கம் தருக.
ஒவ்வொரு ஆண்டும், சூரியனின் நகர்வை நாம் கொண்டாடி வருகிறோம். இந்த பிரபஞ்சம் முழுவதுமாக நிரம்பி இருக்கின்ற நட்சத்திரகூட்டங்களிடம் இருந்து, ஆற்றலை வாங்கி, ஒருங்கிணைத்து பூமிக்கு, தனியாக இந்த சூரியனே அனுப்பிக் கொண்டும் இருக்கிறது எனலாம். பொதுவாகவே சூரியன் நகர்கிறது என்றுதான் நாம் சொல்லுகிறோம். ஆனால், உண்மையாகவும், விஞ்ஞான ரீதியாகவும், பூமிதான் தன்னுடைய சூரியனை சுற்றும் பாதையில், நகர்கிறது. நாம் நிலையாக பூமியில் இருப்பதால், நாம் காண்பது எல்லாமே நகர்வதாக எண்ணிக்கொண்டு, அதையே வழக்கத்தில் வைத்துக் கொள்கிறோம்.
மார்கழி மாதம் என்பது தஷிணாயனம் என்ற சூரிய நகர்வின் இறுதி மாதமாகும். இறை கொண்டாட்டமாக எடுத்துக் கொள்ளக்கூடிய வகையில், நம் இந்திய நாட்டில் அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் வெகு சிறப்பாக என்றும் சொல்லமுடியும். என்றாலும், உலக அளவில் இந்த மார்கழி மாதம், டிசம்பர் என்ற ஆங்கில மாதமாகவும், சீனாவில் டிராகன் மாதமாகவும் சிறப்பாகிறது. அந்த வகையில், கிறித்துவ, முஸ்லீம், பௌத்த, போன்ற வழிபாடு கொண்டவர்களுக்கும் ‘டிசம்பர்’ இறை வழிபாட்டை வலியுறுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. இதை அந்தந்த மக்களும் அறிவார்கள். ஏனென்றால் இது, பன்னெடுங்காலமாக முன்னோர்களால், குடும்ப அமைப்பில் தொடர்ப்பட்டு வந்திருக்கிறது.
இந்த மார்கழி மாதம், மிகச்சிறப்பு வாய்ந்தது என்பதில் ஐயமில்லை. ஏனென்றால், இந்த பிரபஞ்சத்தை இயக்கும், காக்கும் மூல ஆற்றலின், பேராற்றலின், தெய்வீக்த்தின் வெளிப்பாடு, இந்த பிரபஞ்சத்திலேயே அமைந்ததாக இருக்கிறது. இதை முன்னோர்கள் உணர்ந்தார்கள். அவர்களே, இதன் முக்கியத்துவத்தை அறிந்து, மனிதன் என்பவனின் முழுமையை உணரவும், இயற்கையோடு கலந்து நின்று வாழவும் பழகிட, அந்த ஆற்றல் உதவும் என்பதை சொல்லி, இந்த மார்கழி மாதத்தில், மனதை, அந்த தெய்வீகத்தன்மையோடு இணைத்துப்பழகிட வழிபாடு மாதமாக அமைத்தார்கள். இதை தனியாக, எழுத்தாலும், வெற்று வார்த்தைகளாலும் புரியவைத்திட முடியாது. வழிபாடுகளை விடவும், தவம் இதற்கு நிச்சயமாக உதவிடும்.
குறிப்பாக, இந்த மார்கழி மாதம், சூரியனுக்கு இழந்த சக்தியை முழுமையாக தருகிறது. பிரம்ம முஹூர்த்தம் என்பதற்கு பொருத்தமான நிலை இதுவே. கடலில் முத்து குளிப்பது போல் என்று சொல்லுகிறார்கள். அந்த சக்தியை நாமும் பெற்றுக்கொள்ள தயார் செய்து கொள்கிறோம். எனினும், இதெல்லாம் கதைக்கு ஆகாது என்று வழக்கமான மாதமாக, ஜஸ்ட் கட்ந்து செல்வதும் நம் இயல்புதானே? அது சரி யாருக்கு வேண்டுமோ, அவர்கள் பெற்றுக்கொண்டு விடுகிறார்கள். வரிசையை விட்டு விலகி நிற்பவர்களுக்கு எப்படி எல்லாம் கிடைக்கும்?
சோதிட ரீதியாக, மூலம், பூராடம், உத்திராடம் என்ற நட்சத்திர கூட்டங்களின் ஆற்றல் வீடான, தனுசு ராசிதான், மார்கழி மாதம் ஆகும். ஜோதிட சாஸ்திர கட்டத்தில், ஒன்பதாம் வீடு என்றும் சொல்லுவார்கள். இதை பீடை மாதம் என்று சொல்லுவது, மொழி வழக்கில் தவறானது. பீடுடைய மாதம் என்பதுதான், பீடை ஆகிவிட்டது. பீடு என்றால், உயர்ந்த, மேன்மையான, பெரும்போக்கான என்ற அர்த்தங்களை தருவதாகும். சஷ்டி என்பது சட்டி ஆனது போலவே, பீடு என்பது பீடை ஆகிவிட்டது.
பகவத்கீதையில், இறையே தன்னை, மார்கழி மாதமாக அமைந்திருப்பதாக சொல்லிக் கொள்வதுண்டு. இந்த முப்பது நாட்கள், மேலோர்களின் ஒரு அதிகாலைப் பொழுது என்றும் சொல்லுவார்கள். இந்த நாட்களில், விஞ்ஞான ரீதியாகவும், நிறைய சக்தி பூமிக்கு கிடைப்பதாகவும், காற்றில் ஓஸோன் எனும் தன்மை கூடுவதாகவும் சொல்லுகிறார்கள். அதனால்தான் மார்கழி மாத, அதிகாலை நடைப்பயணம் கூட மிக சிறப்பு என்கிறார்கள்.
யோகத்தில் பயணிக்கும் அன்பர்களுக்கு, இந்த மார்கழி மிக சிறப்பாக துணை நிற்கும். ஆழ்நிலை தவம் தியானம் செய்வதற்கும், மனம் விரிந்து நின்று ஆராய்ச்சி செய்வதற்கும், மனதின் களங்கங்களை நீக்கிட அகத்தாய்வு செய்வதற்கும், மௌனம் என்ற நிலையில், அமைதியாக தன்னை ஆராய்ச்சி செய்வதற்கும், இயற்கையை அதன் தன்மையில் புரிந்து கொள்வதற்கும் உதவுகிறது. விரும்பும் அன்பர்கள், அவரவர் அளவிலே, இந்த மார்கழி மாதத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மற்றவர்களுக்கு இதில் புதிதாக ஏதுமில்லை, நாளை என்பது மற்றொரு நாளே என்பதுபோல கடந்துவிடலாம்.
வாழ்க வளமுடன்.
-