Are you missing yourself into the forest?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, உலகையே மாற்றி அமைக்கும் அறிவியல் உச்சமான காலத்தில் கூட கடவுளை அறிதல் என்பது வேடிக்கை என்கிறார்களே?!
பதில்:
அப்படி சொல்லுபவர்கள் இப்போது மட்டுமா சொல்லுகிறார்கள்? அந்தக்காலம் முதலாகவே அப்படியான வார்த்தைகள் நிலையாக இருக்கின்றன. என்ன ஆட்கள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். கட உள் என்பதற்கான வார்த்தையின் அர்த்தம் மட்டும் அவர்களுக்கு புரிந்தபாடில்லை. அதுகுறித்த சிந்தனைக்கும் அவர்கள் வருவதே இல்லை.
கடவுள் என்பது, எதையோ யாரையோ குறிக்கும் பெயர் சொல் இல்லை. ஆங்கிலத்தில் சொல்லப்படும் Noun அல்ல. அது வினைச்சொல். ஆங்கிலத்தில் சொல்லப்படும் Verb ஆகும். கடந்து உள்ளே செல்க என்ற வார்த்தையின் சுருக்கமே கடவுள். எங்கே கடந்து உள்ளே செல்வது? என்று கேள்வி எழுப்பினால், பதிலாக வருவது, உனக்குள்ளாக! எப்படி நாம் நமக்குள்ளாக செல்லமுடியும் என்றால்? மனதால் செல்லமுடியும். ஆகவே மனதைக்கொண்டு, நமக்குள் கடந்து உள்ளே சென்றால், உண்மை அறியலாம். ஆகவே உண்மையை அறிவதுதான் கடவுள் என்று சொல்லப்பட்டதே தவிர கடவுளை அறிய கடவுள் தேவையில்லை. சரிதானே?!
அந்த உண்மையை பல்வேறு வார்த்தைகளிலும் குறிப்பிடுவது உலகில் உண்மை அறிந்தோர்களின் வழக்கம். சித்தர்கள் சுத்தவெளி என்கிறார்கள். ஆன்மீகவாதிகள் இறை என்கிறார்கள். ஆங்கிலத்தில் The God, Supreme Power, Divine, Almighty என்று சொல்லுகிறார்கள். இப்படி உலகில் ஒவ்வொரு நாடும், ஒவ்வொடு சமூகமும் தங்களுக்குரிய உண்மையை, ஓவ்வொரு பெயரில் அழைத்து வணங்குகிறார்கள். இதில் இப்படியான கேள்வியை கேட்பவர்கள் எதை விளக்க முயற்சிக்கிறார்கள்? உலக மக்கள் வணங்குவதில் அவர்களுக்கு என்ன பிரச்சனை என்பதும் புரியவில்லை. அது குறித்து அவர்களிடம்தான் உண்மையை கேட்க வேண்டும். ஆனாலும் எப்படியாவது விளக்கம் கொடுப்பார்கள்தானே?!
சரி, கடந்து உள்ளே இருக்கிற உண்மையை ஏன் அறியவேண்டும்? என்றும் ஒரு கேள்வி எழும் அல்லவா? உங்கள் வீட்டிலிருந்து நீங்கள் அருகில் இருக்கும் காட்டுப்பகுதிக்கு சென்றுவிட்டீர்கள் என்று உதாரணம் கொள்ளலாம். வீட்டுக்கு அருகே காடா? காட்டையே அழிச்சிட்டாங்க, எப்படிங்க இருக்கும்? என்று கேட்கக்கூடாது. அது அடர்ந்தகாடு, உள்ளே சென்றால் நிச்சயமாக பாதை மறந்துவிடக்கூடிய அபாயம் கொண்டது. அப்படியான காட்டுக்குள் உங்களை அறியாமல் சென்று மாட்டிக்கொண்டீர்கள். இப்போது நீங்கள் உங்கள் வீடு எங்கே, எப்படி போகவேண்டும் என்று சிந்திப்பீர்கள் தானே? அல்லது இந்தக்காடே எனக்கு போதுமானது, இங்கே நான் என் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து விடுவேன் என்று முடிவு செய்து அங்கேயே தங்கிவிடுவீர்களா?
உங்கள் வீடு எது என்று தேடுவதுதானே உண்மை?! அதைத்தான் நாம் கடந்து உள்ளே சென்று தேடுகிறோம். அவர்களுக்கு அந்த அடர்ந்தகாட்டை விட்டு வர விருப்பமில்லை, ஆர்வமில்லை, முயற்சியும் இல்லை. நம்மையும் தடுக்க முயற்சிக்கிறார்களே?! சரி, அவர்களை அப்படியே விட்டுவிட்டு நாம் மட்டுமாவது ‘வீடுபேறு’ என்ற சித்தர்கள் சொன்ன வீட்டை அடைவோமே!
வாழ்க வளமுடன்.
-

 
