Society, which does not respect a contemporary, celebrate after death? Why?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, சம காலத்தில் வாழும் ஒருவரை மதிக்காத இந்த சமூகம், இறந்தபிறகு கொண்டாடுகிறதே? ஏன்?
பதில்:
நல்ல சிந்தனைக்குரிய கேள்வி. ஆம் உண்மையே.சம காலத்தில் வாழும் ஒருவரை மதிக்காத இந்த சமூகம், இறந்தபிறகு கொண்டாடுகிறது. சமூகம் மட்டுமல்ல, இந்த உலகமே என்றும் சொல்லலாம். ஒரே காலத்தில் பிறந்து வளர்ந்த மக்களிடையே, ஒரு சம அளவிலான மனோபாவம் மட்டுமே இருக்கும். ஆனால் அனுபவத்திலும், அறிவின் வளர்ச்சியிலும், சிந்தனையிலும், செயலிலும், திட்டங்களிலும் மாறுபட்டு இருப்பதை மறுப்பார்கள். ‘அப்படி என்னய்யா இவர் பெரிய ஆளு?’ என்று வெளிப்படையாகவும் சொல்லுவார்கள்.
நீங்களே உங்களை பரிசோதிக்கலாம். உங்கள் மாணவ பருவத்தை நினைவுக்கு கொண்டு வாருங்கள். உங்களோடு படித்த மாணவர்கள் ஒவ்வொருவரையும் இப்போது பார்த்தால், அவர்களின் வளர்ச்சி, திறமை, சிந்தனை, செயல்பாடு மாறி இருப்பதை கண்டு நீங்கள் வியக்கலாம் அல்லது வருந்தலாம். அதுபோலவே உங்களையும் அதே கண்ணோட்டத்தில் அவர்கள் பார்ப்பார்கள். இதுதான் நிகழும். இதற்கு மேலே உங்களை அவர்களும், அவர்களை நீங்களும் மாறுதலாக பார்க்க மாட்டீர்கள். ஏனென்றால் நீங்கள் அனைவரும் சமகாலத்தவர்கள், ஒன்றாக இருந்தவர்கள் ஆயிற்றே!
இன்னொரு உதாரணமாக, ‘மகாத்மா காந்தி’ என்று அழைக்கப்படும் நம் தேசப்பிதா, ‘மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி’ தன்னுடைய வாழ்நாளில், தான் நினைத்த எண்ணப்போக்கை செயல்படுத்திடும் பொழுது, மற்றவர்களால் அவமானங்களைத்தான் சந்தித்தார். இந்திய சுந்திர போராட்ட காலத்தில், ‘இவருக்கு இதெல்லாம் தேவையா?’ என்றுதான் விமர்சனங்களை பெற்றிருக்கிறார். ஆனால் அவரின் துணிவான, உறுதியான செயல்பாட்டின் வழியாகவே, விமர்சனங்கள் வைத்த்தவர்களை வாயடைக்கச் செய்துவிட்டார். காந்திஜியின் தலைமுறையினரை விட, அடுத்த தலைமுறைதான் அவரை கொண்டாடியது. ஆனால் காந்திஜியின் நோக்கம் வாழும் தலைமுறையின் விடுதலையோடு அடுத்த தலைமுறைக்கான விடுதலையும் இனி வரக்கூடிய தலைமுறைக்கான விடுதலையும் தானே? மேலும் காந்திஜி என்பவரை விரும்பாத, பிடிக்காத நபர்கள் இன்னமும் இருக்கிறார்கள் தானே?!
இதுபோல அறியப்படாதவராகவும், தவறாக கருதப்படுவோராகவும், இந்திய சுந்திர போராட்டங்களில் அவர் பங்கை மறைத்தும் காட்டப்படுபவர், நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் ஆவார். அவருடைய வாழும் காலம் முதல் இப்போதுவரை பலப்பல விமர்சனங்களை, கதைகளை, கருத்துக்களை வைக்கிறார்களே தவிர, அவரின் உண்மை சாதனைகளை ஏற்றுக்கொள்ள தயங்குகிறார்கள் என்றே அறியமுடிகிறது. காந்திஜியின் வழியான அஹிம்சா சுதந்திர போராட்டத்திற்கும் செயல்பாடுகளுக்கும் மாறுதலான நிலையில்தான் நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் செயல்பட்டார். இதற்காக, இந்தியாவை ஆண்ட ஆங்கிலேய அரசுக்கு எதிரான நாட்டு அரசுகளின் ஆதரவையும் தேடி ஏற்றுக்கொண்டார். அப்போது நடந்த போர்களிலும், சண்டைகளிலும், பிரச்சனைகளிலும் ஆங்கிலேயர்களுக்கும், ஆங்கிலேய அரசுக்கும் எழுந்த பிரச்சனைகள் பல. அதில் என்னென்ன ரகசியங்கள் இருந்தன என்று யார் அறிவார்?
குரு மகான் வேதாத்திரி மகரிஷியும், தான் பிறந்து வளர்ந்த ‘கூடுவாஞ்சேரி’ ஊரில் பலவித இன்னல்களை சந்தித்தார். அந்த குறிப்புக்கள் அவரின் என்வாழ்க்கை விளக்க நூலில் சொல்லப்படவில்லை என்றாலும், பிறர் எழுதிய மகரிஷியின் வாழ்வில் நடந்த நிகழ்வுகள் தொகுப்பில் படிக்கமுடியும். ‘கூடுவாஞ்சேரி’ ஊரில், வேதாத்திரி மகரிஷி அமைத்த தியான குடில், மாவட்ட கலெக்டர் அவர்களால், அரசு வழங்கிய நிலத்தில், மகரிஷியின் தொண்டு செய்யும் கருத்தை ஏற்று அரசாங்கமே அளித்த நிலம் அது. ஆனால். அக்குடில் உடனடியாக அந்த ஊர்கார்களால் கலைக்கப்பட்டு, பெரும் பிரச்சனையாகி, மகரிஷியின் உயிருக்கும் அச்சுறுத்தலாக அமைந்ததை சொல்லலாம். இதை மகரிஷி அவர்கள் ‘ எனக்கு இந்த ஊரில் வேலையில்லை, என்ற பாடத்தை இறைநிலை எனக்கு சொல்லுகிறது’ என்று குறிப்பிடுகிறார்.
வேதாத்திரி மகரிஷி குறித்த உண்மைகளை உணர்ந்த நாம், குரு மகான், தத்துவஞானி, அருட்தந்தை, மகரிஷி, என்று புகழ்பாடுகிறோம். இப்போதைய தலைமுறையும் போற்றுகிறது. வரும் தலைமுறையும் உலகமும் போற்றும். இதுதான் புரிந்துகொள்ளும் நிலை.
ஆனாலும் வாழும் காலத்தில் சக மனிதர்கள், அவ்வளவு சுலபமாக ஏற்றுக்கொள்ள மறுப்பார்கள் என்பதுதான் உலக நிலைபாடு. அது அவர்கள் குறை மனமும், அறிவும் செய்யும் மாயமாகும்.
வாழ்க வளமுடன்.