My spouse is suffering from some bad habits. Can correct him by blessing him? | CJ

My spouse is suffering from some bad habits. Can correct him by blessing him?

My spouse is suffering from some bad habits. Can correct him by blessing him?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, என்னுடைய வாழ்க்கைத் துணைவர் சில பல கெட்ட பழக்கங்களால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவரை வாழ்த்தால் திருத்தமுடியுமா?


பதில்:

நிச்சயமாக நாம் விரும்பி செய்யும் வாழ்த்தினால், அவரை நல்வாழ்வுக்கு திருத்திட முடியும். என்றாலும் வாழ்த்து மட்டுமே போதாது என்பதை இங்கே குறிப்பிடவேண்டியுள்ளது. சில பல கெட்ட பழக்கம் என்பது தெளிவாக இங்கே சொல்லவில்லை என்றாலும், அதை புரிந்துகொள்ள முடியும்தானே?! இத்தகைய கெட்ட பழக்க வழக்கங்கள் மனதையும் உடலையும் பாதிக்கும். அதனுடைய இயல்பை மாற்றி அடிமையாகவும் மாறிவிடும். அது இது இருந்தால்தான் நான் நன்றாக இருப்பேன் என்ற நிலைக்குப் போய்விடும். உடனடியாக மாற்றம் கொண்டுவருவது மிக கடினமே. இந்த காரணத்தினால்தான் ‘வாழ்த்து’ மட்டும் உதவாது.

ஏதேனும் ஒரு நல்ல, இயல்பான சூழலில், உங்கள் வாழ்க்கைத்துணைவரோடு பேசவேண்டும். உங்களால் முடியாது என்றால், அவருக்கு மிக நெருங்கிய நண்பர்கள் வழியாக, இந்த பழக்கத்தால் என்னென்ன கேடுகள், குடும்பத்தில் தடுமாற்றம், பிள்ளைகளின் படிப்பு, அவர்களின் எதிர்காலம் சிதைகிறது என்பதையெல்லாம் சொல்லி புரியவைக்க வேண்டும். ஒருவேளை அந்த நண்பரும், உங்கள் வாழ்க்கைத்துணைவரின் கெட்டபழக்க கூட்டாளியாக இருந்தால் இது வேலைக்கு ஆகாது. எனவே நல்ல நண்பராக இருக்கவேண்டும். நீங்கள் மனவளக்கலை பயின்றவராக இருந்தால், உங்கள் வாழ்க்கைதுணைவரை அங்கே ஒரு பார்வையாளராக கட்டாயம் அழைத்துச் செல்லலாம். தினமும் என்றால் நிச்சயமாக ஒரு மாற்றம் கிடைக்க வாய்ப்பு வரலாம் அல்லவா?

பொதுவாகவே, கெட்டபழக்கங்களில் இருக்கிற எந்த நபருக்குமே, அது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் தாங்கள் செய்வது தவறு என்று நன்றாக தெரியும், புரிந்துகொள்ளவும் முடியும். ஆனால், அதிலிருந்து விடுபட முடியாத அளவிற்கு அந்த பழக்கத்திற்கு, அந்த செயலுக்கு அடிமையாகிவிட்டார்கள் என்று அர்த்தமாகிறது. இதனால், அவர்கள் செய்வது தவறுதான் என்று நிச்சயமாக, நீங்கள் உணர்த்திவிட்டால் போதும், அவர்கள் திருந்தி மாறிவிட முடியும்.

இதற்கான சில மருத்துவ முறைகளும் கூட ஆலோசனை பெறலாம். என்றாலும் நேரடியாக, பாதிக்கப்பட்டவரோடு கலந்து பேசி, அவருக்கு தெளிவுபட விளக்கம் தந்தால்தான், நிலையான மாற்றம் கிடைக்கும். அவரை யோகத்தில் இணைத்துவிட்டால், உடற்பயிற்சி மற்றும் தவம் வழியாக, உண்மையான உற்சாகமும், மன உறுதியும் கிடைக்கும். எந்தவித தவறான பழக்கமும் நிச்சயமாக மாறி நல்வாழ்வு வாழமுடியும். எனவே, வாழ்த்துவது நல்லதுதான் எனினும், நேரடியான செயல்முறை மாற்றமும் தரவேண்டியதும் அவசியம்!

வாழ்க வளமுடன்.

-